அன்பானவர்களே, இன்று மகிழ்ச்சியோடு உங்களை வாழ்த்துகிறேன். நாம், "என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே" (உன்னதப்பாட்டு 2:4) என்ற வாக்குத்தத்த வசனத்தை தியானிக்கிறோம். ஆம், அன்பானவர்களே, ஆண்டவர் உங்களை நேசிக்கிறார்; அவர் உங்களைக் கனம்பண்ண விரும்புகிறார். தாவீதுக்கு அப்படியே செய்தார். தாவீது, வயல்வெளிகளில் ஆடுகளை மேய்க்கும் வேலையைச் செய்து வந்தான்; தன் சகோதரரால் மறக்கப்பட்டிருந்தான். யாராவது அவனைக் குறித்துக் கேட்டாலும், அவன் தகப்பன் அவனை தூரமாய் மறைத்து வைத்திருந்தான். அப்படி அவன் கவனிக்கப்படாமல், கண்டும் காணாமல் விடப்பட்டிருந்தான். ஆனால், தேவன் அவனைப் பார்த்தார்; அவனை தெரிந்துகொண்டார்; அவனை ராஜாவாக்கினார். தம் இருதயத்துக்கு ஏற்றவன் என்று அவனை அழைத்தார். அவன்மேல் பிரியமாயிருந்தபடியினால் அவனை விசாலமான இடத்தில் கொண்டுவந்து வைத்தார் (சங்கீதம் 18:19). தேவனுடைய அன்பு உங்களை உயர்த்துவதோடு மாத்திரமல்லால், உங்களைக் கொண்டாடவும் செய்யும்; உங்களைக் கனப்படுத்தும். அதுவே நேசக் கொடியாகும்.

ஆம், அன்பானவர்களே, வசனம், "என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்" என்று கூறுகிறது. விருந்துசாலை என்பது மிக முக்கியமான விருந்தினர், ராஜாவுடன் உணவருந்தும் இடமாகும். அவ்வாறே, தேவன் உங்களை தம் விருந்துசாலைக்குள் அழைத்துச் செல்கிறார்; தம் நேசக் கொடியினால், "இவன் எனக்குப் பிரியமான மகன், இவள் எனக்குப் பிரியமான மகள்," என்று கூறி, உங்களை கனப்படுத்துகிறார். தாவீதை, தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவன் என்று அழைத்ததுபோலவே உங்களையும் அழைக்கிறார். இன்று உங்கள் உடனிருப்பவர்கள் உங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கலாம். உங்கள் மேலாளருக்கு உங்கள் பெயர் கூட தெரியாமல் இருக்கலாம். மக்கள், நீங்களே வீட்டில் கடைசி என்றும் கூறலாம்; உங்களைக் குறித்து யாரும் அக்கறை காட்டாமல் இருக்கலாம்; எந்தப் பதவியும், அதிகாரமும், பின்னணி, தகுதியும் இல்லாதிருக்கலாம். தாவீது மறைக்கப்பட்டிருந்ததுபோல, உலகத்திற்கு மறைக்கப்பட்டதுபோல் நீங்கள் உணரலாம்.

தேவன் உங்களை அழைத்து, தம் சொந்தப் பிள்ளையாக இருக்கும்படி தெரிந்துகொண்டிருப்பதால், தம் நேசத்தின் கொடியை உங்கள்மேல் பறக்கப்பண்ணுகிறார். இந்த நேசத்தினால் அவர் உங்களை இரட்சிப்பதோடு, உயர்த்தவும் செய்கிறார்; கனப்படுத்துகிறார்; உங்களில் மகிழ்வதோடு, "என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்," என்று வசனம் கூறுவதுபோல, உயர்ந்த மிக முக்கியமான இடங்களில் உங்களை அமர்த்துகிறார்; தம் சொந்தப் பிள்ளை என்று உங்களை காண்பிக்கிறார். அதுவே உங்கள்மீது பறக்கும் நேசக் கொடியாகும். அன்பானவர்களே, இன்று சந்தோஷமாயிருங்கள். நீங்கள் மறக்கப்படவில்லை. தேவன் உங்களைப் பார்க்கிறார்; நிச்சயமாகவே உங்களை உயர்த்துவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் நேசத்தின் கொடியை என்மேல் பறக்கவிட்டதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் பரிபூரண சித்தத்தின்படி என்னை உயர்த்தி, நீர் எனக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிற இடங்களுக்குள் என்னை வழிநடத்தும். உம் நேசம் அனுதினமும் எனக்கு திடநம்பிக்கையை, சமாதானத்தை, பெலனை தருவதாக. என் வாழ்க்கை, எப்போதும் உம் நன்மையை காட்டுவதாக, உம் நாமத்திற்கு மகிமையை கொண்டுவருவதாக இருக்கட்டும். உமக்குப் பிரியமான பிள்ளையாக எப்போதும் தாழ்மையுடன் வாழ்வதற்கு எனக்கு உதவும். உம் சமுகத்தாலும் கிருபையாலும் என்னை கனப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.