அன்பானவர்களே, இன்றைக்கு உங்களோடு தொடர்பு கொள்வது மகிழ்ச்சி. "கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்" (சங்கீதம் 89:15) என்ற இன்றைய வாக்குத்தத்த வசனத்தை தியானிப்போம்.  

இந்த வசனத்தை நான் வாசித்தபோது, ஒரு கதை நினைவுக்கு வந்தது. மலைகளால் சூழப்பட்ட ஒரு சின்ன நாடு இருந்தது. மாலையானால் அந்த நாடே இருட்டாகிவிடும். தினமும் மாலைப்பொழுதுகளில் ஊர்களில் உள்ளவர்கள் அனைவரும் விளக்குகளை ஏற்றி, தங்கள் வீடுகளின் முன்னே வைப்பார்கள். சாலைகளின் வழியே நடக்கிறவர்களுக்கு அவை வெளிச்சம் கொடுக்கும். ஒருநாள் இரவு, அன்னா என்ற சிறுபெண் தனியே நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது புயல் வீசியது. மேகங்கள் நிலவை மறைத்தன. எவ்வித வெளிச்சமும் இல்லாமற்போனது. முழுவதும் இருட்டானதால், அவளால் வீட்டுக்குச் செல்லும் சாலையைக் கூட பார்க்க இயலவில்லை. அவள் நடந்துகொண்டிருந்தபோது தனக்கு பின்னே சிறு வெளிச்சம் தெரிவதைக் கண்டாள். நடக்க, நடக்க அந்த வெளிச்சமும் அவளைப் பின்தொடர்ந்ததைக் கண்டாள். ராஜாவின் வேலைக்காரன் ஒருவர், அவளுக்குப் பின்னாக விளக்கைப் பிடித்தபடி வந்துகொண்டிருந்தார். "நீங்கள் எனக்கு பின்னாக வருகிறீர்களா?" என்று அவள் கேட்டாள். அவர், "ஆமாம், ராஜாவுக்கு நீ சாலையில் நடந்துபோவது தெரியும். ஆகவே, சாலையில் உனக்கு வழிகாட்டும்படி என்னை அனுப்பினார்," என்று அவர் கூறினார். அன்னா நடந்துகொண்டிருந்தாள். புயல் ஓயவில்லை; மேகங்களும் விலகவில்லை. ஆனால், அந்த விளக்கு வெளிச்சத்தினால் எப்படியோ அவளால் எளிதாக நடக்க முடிந்தது. அவள் பத்திரமாக வீட்டை அடைந்தாள். ராஜாவின் வெளிச்சம் அவளை வழிநடத்தியபடியால் அவள் பயப்படவில்லை.

சாலை மாறவில்லை. அவளது சூழ்நிலை மாறவில்லை. ஆனால், அவளுக்கு வழிகாட்டிய வெளிச்சம், எங்கு செல்கிறாள் என்பதைத் தெளிவாகப் பார்க்க அவளுக்கு உதவியது. "உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்" என்று மோசே, கர்த்தரிடம் கூறியதை வேதத்தில் பார்க்கிறோம். தேவனுடைய சமுகத்தின் முக்கியத்துவத்தை அவன் அறிந்திருந்தான். தேவ பிரசன்னம் அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. மோசே, தொடர்ந்து கெட்ட செய்திகளை, அதைரியத்தை, ஏமாற்றத்தை, அச்சுறுத்தல்களை சந்தித்துக்கொண்டே இருந்தான். ஆனாலும் அவன் பயப்படவில்லை. தேவன் தன்னோடு இருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தபடியால் கர்த்தரின் சந்தோஷம் அவனை நிறைத்திருந்தது. இரண்டாவது, தேவ சமுகம் அவனுக்கு தைரியத்தை அளித்தது. எது நடந்தாலும் அவனால், "கர்த்தர் என்னோடு இருக்கிறார்," என்று கூற முடிந்தது. அவன் முன்னேறி, கர்த்தர் செய்யும்படி அவனுக்குச் சொன்னதை செய்தான். மூன்றாவதாக, கர்த்தரின் சமுகம் அவனை வழிநடத்தியது. மோசேயையும் அவன் ஜனங்களையும் எங்கே செல்லவேண்டும் என்றும், எதைச் செய்யவேண்டும் என்றும், அடுத்ததாக என்ன பண்ணவேண்டும் என்று தொடர்ந்து கர்த்தர் வழிநடத்திக்கொண்டே இருந்தார். தம்மையே சார்ந்திருக்கவும், தாம் எப்படி அவர்களுக்கு வேண்டியவற்றை அருளுகிறார் என்பதை கற்றுக்கொள்ளவும் அவர்களுக்குப் போதித்தார். மோசே, கர்த்தரிடம் நாடிய எல்லாவற்றையும் ஜனங்களுக்காக அவன் பெற்றுக்கொண்டான்.

இன்றும் அவ்வாறே, நீங்கள் ஆண்டவரின் பிரசன்னத்தில் நடக்கும்போது, அவரே உங்களை வழிநடத்தும் வெளிச்சமாக இருப்பார். உங்கள் வாழ்வின் சூழ்நிலை, இக்கட்டானதாக, கடினமானதாக, குறுகியதாக, தடைகள் நிரம்பியதாக என்று  எப்படியிருந்தாலும் அவருக்குப் பொருட்டேயில்லை. தேவன் உங்களுக்கென்று ஆயத்தப்படுத்தியிருக்கும் இடத்துக்கு அவரது வெளிச்சம் உங்களைக் கொண்டு சேர்க்கும். அவரது பிரசன்னம் உங்களுக்கு முன்னே செல்லும்போது உங்களைப் பாதுகாக்கும்; சந்தோஷத்தால் நிரப்பும்; தைரியம் தரும்; நீங்கள் பயமின்றி நடக்கலாம். தேவ பிரசன்னத்திற்காக இன்று அவரை ஸ்தோத்திரிப்போமாக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னையும் என் வீட்டையும் உம் பிரசன்னத்தால் நிரப்புவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் பிரசன்னம் என்னை சூழ்ந்திருப்பதற்காகவும் இரட்சிப்பின் வெளிச்சத்தை, வழிகாட்டுதலை, சந்தோஷத்தை, தைரியத்தை, விசுவாசத்தை அளிப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் செல்லுமிடமெல்லாம் உம் பிரசன்னம் எனக்கு முன்னே சென்று, கோணலானவற்றை செவ்வையாக்குவதாக. நான் நடக்கவேண்டிய வழியில் என்னை நடத்தி, எனக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குவீராக. உம் சந்தோஷத்தாலும் தைரியத்தாலும் என் இருதயத்தை நிரப்புவீராக. உமக்குக் கீழ்ப்படியவும், உம் வழிகளில் நடக்கவும், தொடர்ந்து உம்மை நம்பவும் எனக்கு உதவி செய்யும். என் குடும்பத்தைக் காத்துக்கொள்ளும்; நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் வழிநடத்தும். எல்லா இக்கட்டுகள், தடைகள் வழியாகவும் உம் பிரசன்னம் எங்களை பாதுகாப்புடன் வழிநடத்துவதாக. உம் வெளிச்சம் எங்கள் வாழ்வின்மேல் பிரகாசித்து, உம் பரிபூரண சித்தத்தின்படி எங்களை வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.