பிரியமானவர்களே, இன்றைக்கு, "சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்" (சங்கீதம் 25:9) என்ற வாக்குத்தத்த வசனம் கொடுக்கப்பட்டுள்ளது. சாந்தகுணமுள்ளவர்களோடு நடப்பதற்கு தேவன் விரும்புகிறார். கவனமாக செவிகொடுக்கும் மாணவனுக்கு போதிப்பதற்கு விருப்பப்படும் ஆசிரியரைப்போல, "ஆண்டவரே, எனக்கு அதிகம் தெரியாது. ஆனால், நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். எனக்குக் கற்றுத்தாரும்," என்று தமக்கு முன்பாக பணிந்துகொள்ளும் பிள்ளைகளை வழிநடத்த தேவன் பிரியமாயிருக்கிறார். நாம் நம்மை தாழ்த்தும்போது, தேவன்தாமே நமக்கு போதகராகிறார்; அவரது வழிகள் உண்மையான வெற்றியை, நியாயத்தை, கனத்தை கொண்டு வரும்.
ஆண்டவரை நேசித்த ஒரு தத்துவ ஞானியின் வாழ்க்கையில் இந்த சத்தியத்தை பார்க்கிறோம். ஒருமுறை அமெரிக்காவில் பிரபலமான நிகழ்ச்சி (talk show) ஒன்றில் அவரை அரை மணி நேரம் கேலி செய்தார்கள்; அவரது நற்பெயரை சேதப்படுத்தினார்கள். ஆனாலும், அவர் பதிலுக்கு போராடவில்லை; புகார் சொல்லவில்லை; கடினமாய் மறு உத்தரவும் கொடுக்கவில்லை. மாறாக, மௌனமாக, தேவனை நம்பியிருந்தார். அதேசமயம் பல நிகழ்ச்சிகள் அவரை அழைக்குமளவுக்கு ஞானத்தை ஆண்டவர் அவருக்குக் கொடுத்தார். மக்கள் அவர் வார்த்தைகளைக்கேட்டு ஆச்சரியப்பட்டனர்; அவரது தலைமுறையில் மதிக்கப்பட்ட ஒரு தத்துவ ஞானியானார். அவரைக் கேலி செய்த அதே நிகழ்ச்சி, பிறகு அதிக கனத்தைக் கொடுத்தது. ஆண்டவர், சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, மனுஷருக்கு முன்பாக உயர்த்துகிறார்.
அன்பானவர்களே, தேவன் உங்களுக்கும் இப்படியே செய்வார். உலகம் உங்களைக் கேலி செய்யலாம், சிறுமைப்படுத்தலாம், தவறாக புரிந்துகொள்ளலாம். ஆனால், நீங்கள் ஆண்டவருடன் தாழ்மையாக நடக்கும்போது, அவர் தமது வழியை உங்களுக்குப் போதிப்பார்; ஞானத்தினால் நிரப்புவார்; ஏற்றவேளையில் உங்களை உயர்த்துவார். உங்களுக்காக நீங்கள் போராட வேண்டிய அவசியமில்லை. ஆண்டவர்தாமே உங்களை நியாயத்தில் நிலைப்படுத்துவார். ஆகவே, இன்றைக்கு தாழ்மையுள்ள இருதயத்துடன் அவர் முன்பாக வருவோம்; அவரை நம் போதகராக, வழிகாட்டியாக, ஞானமாக ஏற்றுக்கொள்வோம்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என்னுடைய போதகராகவும் வழிகாட்டியாகவும் நீர் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உமக்கு முன்பாக தாழ்மையாக இருக்கும் இருதயத்தை எனக்குத் தாரும். உம்முடைய சத்தத்துக்கு எப்போதும் செவிகொடுக்க உதவும். உம்முடைய ஞானத்தாலும் அறிவாலும் என்னை நிரப்பும். மக்கள் என்னை கேலி செய்யும்போதும், மட்டம் தட்டும்போது உம்முடைய சமாதானத்தோடு மௌனமாக இருக்க உதவும். ஆண்டவரே, எனக்கு நியாயம் செய்து என்னை உயர்த்தும். உம்முடைய ஆசீர்வாதம் கனத்துக்கான புதிய வாசல்களை திறப்பதாக. அனுதினமும் உம்முடைய வழியில் நடக்கும்படி என்னை பெலப்படுத்தும். உம்முடைய கிருபையும் சத்தியமும் என் வாழ்வில் விளங்கட்டும் என்று இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் வேண்டுகிறேன், ஆமென்.