"கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" (ஆமோஸ் 3:7). இதுவே தேவன் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தம். அவர் தமக்கு அன்பானவர்களுக்கு தம்முடைய திட்டங்களை வெளிப்படுத்த விரும்புகிற தேவனாயிருக்கிறார். தெய்வீக இரகசியங்களை கேட்கும்படி இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டிருந்த யோவானைப்போல, நீங்கள் அவருடைய இருதயத்திற்கு நெருங்கியவர்கள். இன்றும் நீங்கள் இயேசுவின்மேல் சாய்ந்து, அவரது சிந்தையை அறிந்து அவரது திட்டத்தில் நடக்க முடியும். நீங்கள் கனத்துக்குரிய பாத்திரமாக, இயேசுவுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உலகத்திற்கும் பயனுள்ளவர்களாக இருக்க முடியும். இந்த தெய்வீக பணியை நீங்கள் நிறைவேற்றும்போது, கனம் உங்களைப் பின்தொடரும். தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட திட்டத்தில் நடக்கிறவர்கள் உலகத்திற்கு தேவையாயிருப்பதால் மக்கள் உங்களைத் தேடி வருவார்கள்.
ஆகவே, தேவன் தம்முடைய திட்டத்தை நமக்கு எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? உலக தோற்றத்திற்கு முன்பே தேவன் பிரபஞ்சம் எவ்வாறு இயங்கவேண்டும், மனிதன் எவ்வாறு வாழவேண்டும், வரலாறு முழுவதும் எவ்வாறு நடக்கவேண்டும் என்று திட்டம் பண்ணிவிட்டதாக வேதம் கூறுகிறது (எபிரெயர் 4:3). சத்துரு இடைப்பட்டு மனுஷனை பாவத்திற்கு நேராக வழிநடத்தி, உலகத்திற்கு தீமையை கொண்டு வந்தாலும், தேவனுடைய மெய்யான நோக்கம் எப்போதும் நன்மையானதாகவே இருந்தது. தேவன் ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். அவர் மனுவுருக்கொண்டு இயேசு என்ற பெயரில் வந்து, இழந்துபோனதை மீட்டுக்கொள்ளும்படியாக தம்முடைய இரத்தத்தை சிந்தினார். அவருடைய தியாகம், நம் வாழ்க்கையில் தயவை கொண்டுவருகிறதற்கு, நம்மை தீமையிலிருந்து விடுதலையாக்குவதற்கு, அவரது திட்டத்தில் திரும்ப நிலைப்படுத்துவதற்கு காரணியாயிருக்கிறது.
ஆண்டவர் இயேசு இன்றைக்கு, "என் பிள்ளையே, உன் இருதயத்தை திறந்து என்னை ஏற்றுக்கொள்," என்று கூறுகிறார். அவர் வந்து உங்களோடு போஜனம் பண்ணுவார்; உங்கள் வாழ்க்கையைக் குறித்த தமது திட்டத்தை வெளிப்படுத்துவார். ஆண்டவரின் ஆவியாகிய பரிசுத்த ஆவியின் மூலமாக நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்கலாம்; அவருடைய வார்த்தைகளை பேசலாம்; அவர் உங்களுக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கும் பாதையில் நடக்கலாம். இந்த உலகம் இருளினால் நிறைந்திருந்தாலும் நீங்கள் தேவனுடைய தயவை அனுபவித்து மகிழலாம். ஆகவேதான் தேவன் இன்றும் தீர்க்கதரிசனம் வாயிலாக பேசுகிறார். "கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்" (அப்போஸ்தலர் 2:17) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் அவருடைய சத்தத்தை கேட்கலாம்; அவருடைய திட்டத்தின்படி நடக்கலாம். இன்றைக்கு அவரை நோக்கிக் கூப்பிடுவீர்களா?
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய இருதயத்தையும் திட்டத்தையும் எனக்கு வெளிப்படுத்த நீர் வாஞ்சையுள்ளவராயிருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இயேசுவே, என் இருதயத்தை உமக்கு திறக்கிறேன். தயவாய் உள்ளே வாரும்; என்னோடு போஜனம் பண்ணும். உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும். நான் உம்முடைய சத்தத்தை தெளிவாகக் கேட்கட்டும். உலகதோற்றம் முதல் நீர் எனக்கென்று ஆயத்தம் செய்திருக்கிற திட்டத்தில் நான் நடப்பதற்கு விரும்புகிறேன். என்னுடைய பயம், சந்தேகம், பாவத்தை நான் புறம்பே வைத்துவிட்டேன். உம்முடைய மன்னிப்பையும் தயையையும் பெற்றுக்கொள்கிறேன். என்னை கனத்துக்குரிய பாத்திரமாக, உமக்கும், என் குடும்பத்துக்கும் இந்த உலகத்துக்கும் பயனுள்ள பாத்திரமாக மாற்றும். உம்முடைய பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்தட்டும்; உம்முடைய தீர்க்கதரிசன குரலை நான் மற்றவர்களுக்கு சுமந்து செல்ல அருள்புரியவேண்டுமென்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன், ஆமென்.