அன்பானவர்களே, தேவன் இன்று உங்களை தம் பலத்த கிருபையால் நிரப்புவதற்கு விரும்புகிறார். நம்முடைய தகுதிகளாலோ அல்லது நற்கிரியைகளினாலோ அல்ல; நம் அன்பு ஆண்டவரின் கிருபையினாலும் இரக்கத்தினாலும்தான் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். வேதம், "என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு" (2 தீமோத்தேயு 2:1) என்று கூறுகிறது. கிருபை என்பது என்ன? அது, நமக்குத் தேவையான யாவற்றையும் கொடுக்கும் தெய்வீக வல்லமையாகும்.

வேதம், தேவனால் உங்களை எல்லாவற்றிலும், எப்போதும் பரிபூரணமாக ஆசீர்வதிக்க முடியும் என்றும், அதனால் தேவையானவை அனைத்தும் உங்களுக்கு நிறைவாக இருக்கும் என்றும் கூறுகிறது (2 கொரிந்தியர் 9:8). இது, இயேசு கிறிஸ்து வாயிலாக கிரியை செய்யும் கிருபையின் வல்லமையாகும். இன்றைக்கு அந்தக் கிருபை உங்கள் வாழ்வில் புரண்டோடி, உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அருளி, எல்லா நற்கிரியையிலும் பரிபூரணப்பட உதவுவதாக.

இரண்டாவதாக, தேவ கிருபை நமக்கு இரட்சிப்பை அருளி, நம்மை அவரது பிள்ளைகளாக்குகிறது. நம்முடைய சுய முயற்சிகளால் நாம் பரிசுத்தமாக்கப்படுவதில்லை; ஆனால், இயேசு கிறிஸ்துவின் வாயிலாக தேவ கிருபையினால் பரிசுத்தமாக்கப்படுகிறோம். அவரது கிருபை நம்மை சுத்திகரிக்கிறது; நம்மை மறுரூபப்படுத்துகிறது; அவரது நோக்கத்திற்காக நம்மை வேறுபடுத்திப் பிரிக்கிறது.

மூன்றாவதாக, கிருபை நம் பெலனை புதுப்பிக்கிறது. வேதம், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் கழுகுகளைப்போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள் என்று கூறுகிறது (ஏசாயா 40:31). நீங்கள் இன்று பெலவீனமாகவோ, உடைந்துபோனதாகவோ அல்லது அதைரியப்பட்டதாகவோ நினைத்தால், தேவ கிருபையால் அந்தச் சூழ்நிலைகளுக்கு மேலாக உங்களை உயர்த்த முடியும். உங்கள் பெலவீனத்தில் அவரது பெலன் பூரணமாக விளங்கும்.

இறுதியாக, தேவ கிருபை நீதியாகவும் பக்தியாகவும் வாழவும், அவபக்திக்குரியவைகளையும், உலகத்தின் ஆசைகளையும் மறுக்கவும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது (தீத்து 2:11,12). தேவ கிருபை நம்மை இரட்சிப்பதோடு மட்டுமல்லாமல், நாம் வாழும் விதத்தையும் மாற்றுகிறது. இன்று அவரது புதிய இரக்கங்களையும், வாழ்வதற்கான புதிய கிருபையையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்க்கையில் விளங்கும் உம் பரிபூரண கிருபைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எனக்கு நேரிடும் எல்லா பெலவீனத்தையும், எல்லா தேவையையும், எல்லா சவாலையும் மேற்கொள்ள உம் கிருபை போதுமானது என்று விசுவாசிக்கிறேன். உம் பெலத்தால் என்னை நிரப்பும்; என் ஆவியை புதுப்பியும்; பரிசுத்தமாகவும் பக்தியுடனும் வாழ எனக்கு உதவி செய்யும். உம் கிருபை என் சரீரத்தை குணப்படுத்தட்டும்; என் மனதை பெலப்படுத்தட்டும்; என் வாழ்க்கையின் எல்லா பகுதியையும் ஆசீர்வதிக்கட்டும். எல்லா தோல்விக்கு மேலாகவும் எழும்பி, உம் நோக்கத்தில் நடப்பதற்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.