அன்பானவர்களே, தேவன் உங்களுக்குப் பெருமையான பேரைக் கொடுக்க விரும்புகிறார். ஆம், இன்றைக்கு நீங்கள் சமுதாயத்தில் பெரிய பேரைப் பெறுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கலாம். என்னுடைய 17வது வயதில், நான் ஆண்டவரைவிட்டு தூரமாக இருந்தபோது, ஒரு கூட்டத்தில் என் தந்தை, "இந்த உலகத்தில், நீங்கள் தேவனை விட்டு விலகிச் சென்று, உள்ளுக்குள்ளாக வெறுமையாகிவிட்டதால் நீங்கள் பெரியவராக முயற்சிக்கிறீர்கள்," என்று பேசினார். பின்னும், "இயேசுவிடம் வாருங்கள். ஒன்றுமில்லாமல் இருக்கும் நீங்கள், அவரது அன்பினால் பெரிய மனிதராக மாறுவீர்கள்," என்றார். இன்றைக்கு தேவன் உங்களுக்கு அதே வாக்குத்தத்தத்தை அளிக்கிறார். தேவன், "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" (ஆதியாகமம் 12:2) என்று கூறுகிறார். தேவனுடைய ஆசீர்வாதம், இந்த உலகத்தில் ஆசீர்வாதத்தை பெருகப்பண்ணும். தேவன், வெறுமனே பணத்தை மட்டும் நமக்குத் தருகிறவரல்ல; நம் வழிகள் யாவற்றையும் அவர் ஆசீர்வதிப்பதோடு, நம் ஆத்துமாவையும் தமக்குள் காத்துக்கொள்கிறார். ஆண்டவரால் மட்டுமே இதைச் செய்யமுடியும். பணம் மட்டுமே உங்களிடம் இருந்தால், உங்கள் ஆத்துமாவை இழந்துபோவீர்கள். பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது. ஆனால் தேவ பக்தியானது இந்த உலகத்திற்கும் வரும் உலகத்திற்கும் பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது.

ஆகவே, இன்று உங்கள் வாழ்க்கையை ஆண்டவர் இயேசுவின் கரங்களில் ஒப்படையுங்கள். அவர் உங்களைப் பெரியவராக்குவார். தம் வல்லமையினால் நீங்கள் பெரியவராகும்படிக்கு பாடுபட்டு, தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். வேதம், இயேசு, தேவனுடைய ரூபமாகவும், மாம்சத்தில் வந்த தேவனாகவும் இருந்தார். தேவனாகிய கர்த்தராக இருந்தும், பணிவிடைக்காரனானார். மனுஷனானது மாத்திரமல்ல, மனுஷருக்குள்ளே பணிவிடைக்காரனுமானார் (பிலிப்பியர் 2:6-10). மனுஷரால் வரும் எல்லா பாடுகளையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்களும் நானும் கடந்து செல்லும் எல்லா பாடுகளை அவரும் கடந்து சென்றார். இறுதியாக, நாம் மீட்கப்படும்படி தம்மையே பலியாக கொடுக்குமளவுக்கு தம்மைத்தான் மரண பரியந்தம் தாழ்த்தினார். பிறகு, தேவன் அவரை எழுப்பினார்; அவருக்கு ஜீவனை அளித்தார். இயேசுவின் சரீரம் மரித்தபோதிலும், அவரது ஜீவன் உயிரோடிருந்தது. இயேசுவின் ஆவி, அவரது சரீரத்தை எழுப்பியது. இன்று அவர் ஜீவனோடிருக்கிறார். தேவன் அவருக்கு உன்னதமான இடத்தை அளித்துள்ளார்.

ஆம், இயேசு உன்னதங்களில் இருக்கிறார். இன்று, இயேசு என்ற நாமத்திற்கு முன்பாக எல்லா முழங்கால்களும் முடங்கும். பிசாசும், மனுஷனும், உலக அதிகாரங்களும் இயேசுவையும் அவரது மக்களையும் அழித்துப்போட முயற்சிக்கலாம். இதை நூற்றாண்டு காலமாக முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். ஆம், இயேசுவின் நாமத்தைச் சுமந்தவர்களை ரோமனாகிய ராயன் கொன்றுபோட பார்த்தான். ஆனால், ரோமாபுரியிலிருந்து ஓடியவர்கள், உலகம் எங்கும் சென்று, இயேசுவைப் பற்றிய சுவிசேஷத்தை பிரசங்கித்து, இயேசுவின் நாமத்தில் அற்புதங்களைச் செய்தனர். அதனால், இயேசுவின் நாமம் கோடிக்கணக்கானோருக்கு பரவியது. எல்லா நாமமும் இயேசுவின் நாமத்திற்குக் கீழானது. மக்கள், இயேசு என்ற நாமத்திற்கு விரோதமாக பேச முயற்சிக்கலாம்; இயேசுவின் நாமத்தை சுமக்கிறவர்களை அழித்துப்போட முயற்சிக்கலாம்; ஆனால், இவை எல்லாவற்றின் வாயிலாகவும், இயேசுவின் நாமத்தைச் சுமக்கிறவர்களை அதுவே உயர்த்தும். தேவனுடைய ஆசீர்வாதத்தினால் அவர்கள் பேர் பெரியதாகும். அவர்களை அழித்துப்போட முயற்சிப்பவர்கள் இல்பொருளாவார்கள். ரோமராகிய ராயர்கள் இன்று ஒன்றுமில்லாமலாகிவிட்டனர். ரோமாபுரியில் எந்த கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்களோ, அதே இடத்தில் கிறிஸ்துவத்தின் தலைமையகம் இருக்கிறது. இயேசு என்னும் நாமத்தின் வல்லமை அதுவே. இயேசு என்னும் நாமம் உங்களுக்கு அதைத் தருகிறது. பயப்படாதிருங்கள். உலகத்தில் இரட்சிப்பு, இயேசு என்னும் நாமமல்லாமல் வேறு நாமத்தில் கொடுக்கப்படாது (அப்போஸ்தலர் 4:12). நீங்கள் இயேசு என்ற நாமத்தின் முன் பணிந்துகொள்ளும்போது தேவனுடைய இரட்சிப்பு வரும்; உங்களைச் சுமந்து செல்லும். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்று என் வாழ்க்கையை உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். உம்மால் மாத்திரமே, உம் அன்பினாலும் வல்லமையினாலும், என்னை பொருட்படுத்தக்கவனா(ளா)க மாற்ற முடியும். என் வாழ்வில் உம் வாக்குத்தத்தம் நிறைவேறி, உம் சித்தத்தின்படி என் பேர் பெருமைப்படுத்தப்படுவதாக. என் ஆத்துமாவை உமக்குள் பத்திரமாகக் காத்துக்கொள்ளும்; உலக லாபத்திற்கான எல்லா ஆசையையும் எடுத்துப்போடும். பக்தியாய் நடக்கவும், எல்லாவற்றிலும் உமக்குப் பிரியமானதைச் செய்யவும் எனக்கு உதவியருளும். ஆண்டவரே, என்னை மகத்துவத்திற்கு உயர்த்துகிற பூரண தியாகத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என்னை நிலைப்படுத்தும்; ஆசீர்வதித்தருளும்; உம் மகிமைக்கென்று பயன்படுத்தும். என் இரட்சிப்புக்காகவும் நல்ல எதிர்காலத்திற்காகவும் உம் நாமத்தை மாத்திரமே நம்பியிருக்கிறேன் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.