அன்பானவர்களே, நீங்கள் விசுவாசித்தால், எதற்காக ஜெபிக்கிறீர்களோ அவற்றைப் பெற்றுக்கொள்வீர்கள். தேவன், அவரிடமிருந்து நீங்கள் பதிலைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார். அதற்கு, விசுவாசிப்பது மாத்திரமே ஒரே வழியாகும். "நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்" (மத்தேயு 21:22) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. பதிலைப் பெறுவீர்கள் என்று விசுவாசித்திடுங்கள். நீங்கள் எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றிருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பதில் கிடைக்கும் என்று விசுவாசித்திடுங்கள். அது பரலோகத்திலிருந்து வருகிறது. முதலாவது, தேவன் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார் என்று விசுவாசிக்கவேண்டும். இயேசு, "நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள்" (மாற்கு 11:24) என்று கூறுகிறார். ஆண்டவர் இயேசுவிடம் ஜெபிக்கும்போது, "ஆண்டவரே, இப்போது நான் ஜெபித்திருக்கிறேன். அதை ஏற்கனவே பெற்றுக்கொண்டேன்," என்று கூறுங்கள். நீங்கள் அதைப் பார்க்க இயலாவிட்டாலும், உணராவிட்டாலும் அல்லது கையில் இல்லாவிட்டாலும், "ஆண்டவரே, நான் ஜெபத்தில் அதை கேட்டதால், பெற்றுக்கொண்டேன்," என்று சொல்லுங்கள். அப்படிச் செய்து அவரை ஸ்தோத்திரிக்கும்போது, அது உங்களுடையதாகும்.

இரண்டாவதாக, தேவன் உங்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் நேசிக்கிறார் என்று விசுவாசியுங்கள். வேதத்தில் வாசித்திடும் அவரது கிருபையை நம்புங்கள் (சங்கீதம் 13:5); "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9) என்ற வசனத்தை நினைவில் வைத்திடுங்கள். தேவன் உங்களை அதிகமாய் நேசிக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசித்தால், பெற்றுக்கொள்வீர்கள்.

மூன்றாவதாக, உங்களைக் குறித்து அவரது எண்ணங்களை விசுவாசியுங்கள்; அவரிடம் கேளுங்கள். தேவன், "நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்" (எரேமியா 29:11) என்று கூறுகிறார். நீங்கள், "எதைச் செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. எந்தப் பாடத்தை தெரிந்தெடுப்பது என்று, எந்தப் பட்டப்படிப்பை படிப்பது என்று, எந்தத் துறையில் பணியாற்றுவது என்று, யாரை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று, வாங்கிவிடலாமா அல்லது வாடகைக்கு இருக்கலாமா என்று எனக்குத் தெரியவில்லை," என்று கூறலாம். ஆனால், நீங்கள் செழிப்பாயிருக்கவேண்டும் என்றே தேவன் நினைக்கிறார். உங்கள் வாழ்க்கையை குறித்த ஒவ்வொரு திட்டமும் தேவனிடம் விவரமாக உள்ளது. ஒருபோதும், "எனக்கு அதைக் கொடும்; இதைக் கொடும்," என்று கூறாதிருங்கள். "உம் சித்தமே ஆகட்டும். ஆண்டவரே, உம் திட்டத்தைக் காண்பியும்," என்றே கூறுங்கள். நீங்கள் பூமியில் உருவாக்கப்படும் முன்பிருந்தே, தேவனுடைய உள்ளத்தில் இருந்து வருகிறீர்கள். வேதம், "அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்..." என்று கூறுகிறது (எபிரெயர் 4:3). அவரது நினைவினை விசுவாசித்து ஜெபித்திடுங்கள். தேவன் உங்களுக்கு அதை நிறைவேற்றுவார்.

நிறைவாக, தேவனுடைய தீர்க்கதரிசிகளையும் அவர்கள் மூலமாக தேவன் உரைக்கிறவற்றையும் விசுவாசித்திடுங்கள். யோசபாத், எதிரிகள் வந்தபோது, "உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள்" (2 நாளாகமம் 20:20) என்ற வசனத்தை நம்பினான். அவன் பாடகர்களின் சேனையோடு சென்று, "கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளது" என்று அறிவித்தான். தேவன் மேற்கொண்டார்; எதிரிகள் தங்களுக்குள்ளே யுத்தம் செய்தார்கள்; ஒரு சொட்டு இரத்தமும் சிந்தப்படவில்லை. அவன் உடைமைகளுடனும் கொள்ளைப் பொருள்களுடனும் திரும்பினான்.  ஆகவே, விசுவாசித்திடுங்கள்; நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அதை தேவன் தருவார் என்று விசுவாசித்திடுங்கள். அவரது அன்பை, அவரது நினைவை, அவரது தீர்க்கதரிசிகளை விசுவாசித்திடுங்கள். நீங்கள் ஜெபிக்கும்போது, இவை எல்லாவற்றையும் விசுவாசித்திடுங்கள்; அப்போது கேட்பவற்றைப் பெற்றுக்கொள்வீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் ஜெபிக்கும்போது உம்மிடமிருந்து பதில்களைப் பெற்றுக்கொள்வேன் என்று விசுவாசிக்கிறேன். இப்போதே நான் பார்க்காவிட்டாலும், என் ஜெபத்திற்குச் செவிகொடுத்திருக்கிறீர் என்றும், ஏற்ற காலத்தில் அதை நிறைவேற்றுவீர் என்றும் நம்புகிறேன். என்மீது நீர் வைத்திருக்கும் கிருபைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என்னை மன்னித்தருளும். எல்லா அநீதமும் நீங்கும்படி என்னை சுத்திகரித்தருளும். என் வாழ்க்கையை குறித்து நீர் வைத்துள்ள பூரண திட்டத்தை எனக்குக் காண்பித்தருளும். என்னில் உம் சித்தம் செய்யப்படட்டும். நீர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நம்புவதற்கும், உம் அன்பின் கரங்களிலிருந்து பெரிய காரியங்களை எதிர்பார்க்கவும் எனக்கு உதவும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.