"இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்" (1 சாமுவேல் 1:27). நான் தேவனிடத்தில் கேட்டதை அவர் எனக்கு அருளிச்செய்தார். தேவனிடத்தில் கேட்கிறவற்றை நாம் எப்படி பெற்றுக்கொள்வது? இயேசு, "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்," (மத்தேயு 7:7) என்று கூறுகிறார். இதே சத்தியத்தை இன்னொரு இடத்திலும் வேதத்தில் வாசிக்கிறோம் (மாற்கு 11:24). ஆனால், நாம் தேவனுக்கு முன்பாக தகுந்த நோக்கத்தோடு கேட்கவேண்டும். "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்" என்று வேதம் கூறுகிறது (யாக்கோபு 4:3). தகுந்த நோக்கத்துடன் நீங்கள் கேட்கும்போது, கேட்கிறவற்றைப் பெற்றுக் கொள்வீர்கள்.
இரண்டாவதாக, ஆண்டவர் இயேசு, நாம் தேவனிடம் கேட்கிறவற்றைப் பெற்றுக்கொள்வோமென்று நம்ப வேண்டும் என்று கூறுகிறார். நாம் தேவனிடம் கேட்கும்போது, அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதையும், ஆண்டவரிடம் கேட்கிறவற்றைப் பெற்றுக்கொள்வோம் என்றும் அறிந்திருக்கவேண்டும் என்றும் வேதம் கூறுகிறது (மத்தேயு 21:22; 1 யோவான் 5:15).
மூன்றாவதாக, தேவனுடைய வார்த்தையின்படி நாம் கேட்கவேண்டும். வேதம், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்" என்று கூறுகிறது (யோவான் 15:7). ஆகவே வேதத்தை, தேவனுடைய வார்த்தையை வாசியுங்கள். தேவனுடைய வாக்குத்தத்தத்தை சுதந்தரித்து ஜெபியுங்கள். வேதத்தில் அவர் எழுதியிருக்கிறதை நிறைவேற்றும்படி கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அதை விரும்புங்கள். அந்த விருப்பம் நிறைவேற்றப்படும். உலகப்பிரகாரமானவற்றை, இச்சைக்குரியவற்றை கேளாமல், அவர் தம் வார்த்தையில் வாக்குப்பண்ணியிருக்கிறவற்றை கேளுங்கள்; தேவனுடைய பரலோக ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
நான்காவதாக, தேவனுடைய சித்தத்திற்கேற்றவற்றை கேளுங்கள். தேவன், உலகதோற்றத்திற்கு முன்னமே உங்களுக்காக எல்லாவற்றையும் திட்டம்பண்ணியுள்ளார் (எபிரெயர் 4:3). தேவனுடைய வார்த்தையின்படி, அவரது சித்தத்தை உங்களுக்குக் காண்பிக்கும்படி பரிசுத்த ஆவியானவரை கேளுங்கள் (ரோமர் 8:26,27). நாம் எதையாகிலும் அவரது சித்தத்தின்படி கேட்டால் அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே நம்முடைய நம்பிக்கையாயிருக்கிறது (1 யோவான் 5:14).
ஐந்தாவதாக, "ஆண்டவரே, நான் உம் சித்தத்தையே செய்யவேண்டும்," என்று கூறி கேளுங்கள். நீங்கள் எவற்றை கேட்கிறீர்களோ, அவற்றிற்கு அவர் பதிலளிப்பார். தேவனுடைய பார்வைக்கு பிரியமானவற்றை நாம் செய்யும்போது, நாம் கேட்கிறவற்றையெல்லாம் அவர் அருளிச்செய்வார் (1 யோவான் 3:21,22).
ஆறாவதாக, தேவனுடைய ராஜ்யத்திற்காக நீங்கள் கனி கொடுக்கும்போது, நீங்கள் கேட்கிறவற்றை தேவன் அருளிச்செய்வார். வேதம், "நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்" (யோவான் 15:16) என்று கூறுகிறது. நீங்கள் இயேசுவிடம் சுகப்படுத்தும்படி கேட்கும்போது, அவர் சுகப்படுத்துவார். ஏழைகளுக்கு வேண்டியவற்றை கொடுக்கும்படி கேட்கும்போது அவர் பதிலளிப்பார். வாழ்க்கையை மறுரூபமாக்கும்படி கேட்கும்போது, அவர் பதிலளிக்கிறார்; இரட்சிப்பை அளிக்கிறார். இவை தேவ ராஜ்யத்திற்கான கனிகள். கேளுங்கள், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும் என்று வேதம் கூறுகிறது (யோவான் 16:24). "நான் ஜெபித்தேன். பரிசுத்தமாக வாழ்ந்தேன். ஆகவே, அற்புதத்தைப் பெற்றுக்கொண்டேன்," என்று ஒருபோதும் சொல்லாதிருங்கள். தேவனுடைய கிருபையில் களிகூருங்கள். அப்போது நீங்கள் வேண்டுவதற்கு மேலானவற்றை அவர் அருளிச்செய்வார். உங்கள்பேரில் கெம்பீரமாய் களிகூருவார் (எபேசியர் 3:20; செப்பனியா 3:17). தேவன்தாமே இந்த ஆசீர்வாதங்களை உங்களுக்குத் தந்தருளுவாராக.
ஜெபம்:
அன்பு ஆண்டவரே, நான் ஜெபிக்கும்போது செவிகொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். சுத்தமான நோக்கங்களுடனும் நம்பிக்கையுள்ள இருதயத்துடனும் உம்மிடம் கேட்பதற்கு எனக்குக் கற்றுத்தாரும். உம் வார்த்தையை நம்புவதற்கும், உம் வாக்குத்தத்தங்களை சுதந்தரிக்கவும் எனக்கு உதவி செய்யும். உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக உம் சித்தத்தை எனக்கு வெளிப்படுத்தும். ஆண்டவரே, என் ஜெபங்கள் உம்முடைய ராஜ்யத்திற்கான கனிகளைக் கொடுக்கட்டும்; நீர் என் ஜெபத்திற்கு பதில் அளிப்பதால் என் வாழ்க்கை சந்தோஷமாகட்டும். உம்முடைய கிருபையில் மாத்திரமே நான் களிகூருவேன் என்று இயேசுவின் அருமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


