"அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக" (சங்கீதம் 20:4). இதுவே தேவன் உங்களுக்குத் தரும் வாக்குத்தத்தமாகும். நம் இருதயத்தின் விருப்பங்களை அருளிச்செய்ய நம் தேவன் விரும்புகிறவராயிருக்கிறார்; அவரே தமது திட்டங்களை நிறைவேற்றுகிறவராயிருக்கிறார். வேதம், "மனுஷர், தாங்கள் சுயமாக அநேக திட்டங்களை வைத்திருக்கலாம். ஆனால், தேவ பிள்ளையின் வாழ்வில் தேவனுடைய சித்தமே நிலைப்படும்," என்று சொல்கிறது. "அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்" (பிரசங்கி 3:11) என்று வேதம் கூறுகிறது. ஆம், நம்முடைய இருதயங்களுக்குள் விருப்பங்களை அவரே வைக்கிறதால், உங்களுக்கும் இப்படியே நடக்கும். ஆகவே, தேவன் ஒரு விருப்பத்தை, திட்டத்தை நம் உள்ளத்தில் வைக்கும்போது நாம் என்ன செய்யவேண்டும்? அந்த விருப்பத்தை நிறைவேற்றும்படி இயேசுவின் நாமத்தில் கேட்கவேண்டும் (யோவான் 14:13,14).
ஆண்டவர், "உனக்காக எல்லாவற்றையும் செய்வதற்கு எனக்கு இடம் கொடு," என்று கூறுகிறார். திருமணமானாலும், படிப்பானாலும், உங்கள் குடும்பமானாலும், முடிவு எடுக்கவேண்டுமானாலும், சொத்து வாங்கவேண்டுமென்றாலும், ஊழியம் செய்வதானாலும், உங்கள் பிள்ளைகளுக்கானவற்றை ஒழுங்கு செய்வதானாலும், ஆண்டவர், "நான் செய்வேன். என்னிடம் கேள்," என்கிறார். பார்வை தெரியாத மனுஷன் ஒருவர், இயேசுவை நோக்கிக் கூப்பிட்டார். ஆண்டவர் அவரை அழைத்து, "உனக்காக நான் என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறாய்?" என்று கேட்டார் (லூக்கா 18:41,42). பார்வையற்ற மனுஷன், "ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும்," என்றார். இயேசு, "பார்வையடைவாயாக. உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது," என்றார். அவ்வண்ணமே, நீங்கள் அவரிடம் கேட்கும்போது, "ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்," என்பார்; அவரே உங்களுக்காக அதைச் செய்வார்.
கர்த்தர், சாலொமோனுக்கு தோன்றி, "நீ விரும்புகிறதை என்னிடம் கேள்," என்றார் (1 இராஜாக்கள் 3:5). சாலொமோன் ஞானத்தைக் கேட்டபோது, தேவன் அவனுக்கு ஞானத்துடன் செல்வம், ஐசுவரியம், புகழ் இன்னும் அநேகவற்றைக் கொடுத்தார். ஆம், நீங்கள் கேட்கிறதைக் காட்டிலும் அவர் இன்னும் அதிகமானதைக் கொடுப்பார். ஆனால், முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். அப்போது "எல்லாமும் கூட கொடுக்கப்படும்" (மத்தேயு 6:33). நீங்கள் நீதியாய் வாழ்வதற்கு அவர் அழைக்கிறார். அப்படிச் செய்யும்போது, எல்லா ஆசீர்வாதமும் அவரது ஈவாக உங்களுக்குக் கூடுதலாக அளிக்கப்படும். ஆகவே, பயப்படாதிருங்கள். ஆண்டவரே, இந்த ஆசீர்வாதத்தை இன்று உங்களுக்குத் தருவார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் என்னுடைய இருதயத்தின் விருப்பங்களை, உம்முடைய பரிபூரண சித்தத்திற்கேற்ப எல்லா திட்டங்களையும் அருளிச்செய்கிறவராயிருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என்னுடைய விருப்பங்கள், கனவுகள், திட்டங்கள் எல்லாவற்றையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். உம்முடைய நோக்கத்திற்கேற்ற விருப்பங்களை, ஏற்றவேளையில் என் இருதயத்தில் வைப்பீராக. எல்லாவற்றையும் நேர்த்தியாய் செய்து முடிப்பீராக. இயேசுவே, பார்வையற்ற மனுஷனிடம், "நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்றிருக்கிறாய்?" என்று கேட்டவண்ணம், என்னிடம் இன்றைக்கு கேட்பீராக. உம்மால், நான் கேட்கிறதற்கும் நினைக்கிறதற்கும் அதிகமாக செய்யமுடியும் என்று அறிந்து, உம்முடைய நாமத்தில் தைரியமாக வந்து கேட்கிறேன். முதலாவது உம்முடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடவும், உம்முடைய நேரத்தில், உம்முடைய வழியில் எல்லா ஆசீர்வாதங்களும் கூடுதலாக கிடைக்கும் என்று நம்பவும் உதவி செய்யும். எனக்காக இவற்றை நீர் செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.