அன்பானவர்களே, நீங்கள் எப்படி இரக்கத்தைப் பெற்றுக்கொள்வது என்பது குறித்து தியானிக்க விரும்புகிறேன். நீங்கள் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். பலமுறை நாம், "எனக்கு எல்லாமும் இருக்கிறது. அதிகாரமும் ஞானமும் இருக்கிறது," என்று எண்ணுகிறோம். ஆனால், இரக்கம் தேவைப்படும் நேரம் ஒன்று வரும். அதற்காக ஆண்டவர், "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" (மத்தேயு 5:7) என்று கூறுகிறார். நீங்கள் இரக்கமுள்ளவராக இருந்தால், உங்களுக்கும் இரக்கம் காண்பிக்கப்படும். தேவன் உங்களுக்கு இரங்குவார்; உங்கள் குடும்பத்தினர் இரக்கம் காண்பிப்பார்கள். வேலை செய்யுமிடத்திலும், சமுதாயத்திலும் இரக்கம் கிடைக்கும். நீங்கள் இரக்கத்தினால் நிறைந்திருப்பீர்கள். இரக்கம் தேவனால் அளிக்கப்படும் ஈவாகும். தேவன் நம்மேல் இரக்கமாயிருப்பதினாலேயே நாம் நிர்மூலமாகாதிருக்கிறோம் (புலம்பல் 3:22,23). தேவனுடைய இரக்கம் நம்மை பாதுகாக்கிறது. ஆம், அவர் இரவும் பகலும் நம்மேல் கண்ணோக்கமாயிருக்கிறார். மக்கள் சூழ்ந்துகொள்ளும்போதும், நம்மை அழிக்கும்படியாக சத்துரு எழும்பும்போதும், பாவம் நமக்குள் எழும்பும்போதும், தேவ இரக்கம் அனுப்பப்படுகிறது. அதுவே கிருபை என்றும் கூறப்படுகிறது.

தேவனுக்குக் கீழ்ப்படியாததினாலே யோனா கடலுக்குள் போடப்பட்டான். ஆனால், தேவனால் அனுப்பப்பட்ட பெரிய மீன், யோனாவை விழுங்கினாலும், அவனை அழிக்கவில்லை. அதுவே தேவனுடைய இரக்கமாகும். மீனின் வயிற்றிலிருந்து யோனா தேவனை நோக்கிக் கூப்பிட்டான் (யோனா 2:2). அவன் மிகவும் பயந்திருந்தான்; தேவனுடைய இரக்கம் வந்தது; அவனை சூழ்ந்துகொண்டது; பாதுகாத்தது. தேவனால் அனுப்பப்பட்ட மீனானது, தேவன் அவனுக்கு ஊழியம் வைத்திருந்த இடத்தில் அவனைக் கொண்டு சேர்த்தது. அவனுக்கு இரக்கம் காண்பிக்கப்பட்டபடியினால், அவன் நிர்மூலமாகாதிருந்தான்; அவனால் ஒரு தேசமே தேவனிடம் வந்தது. அதே கிருபை உங்கள் மேலும் வருகிறது. தேவனுடைய இரக்கம்; தேவனுடைய மன்னிப்பு, உங்களை ஒரு தேசத்திற்கும், ஒரு பட்டணத்திற்கும் ஆசீர்வாதமாக மாற்றுகிறது. இன்று தேவன் உங்களுக்கு இரக்கம் காண்பிக்க விரும்புகிறார். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிடுவோம். பாவங்களை அறிக்கையிடும் உங்களை மன்னிக்கவும், எல்லா அநியாயமும் நீங்கும்படி சுத்திகரிக்கவும் தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:9). இந்த கிருபையை தேவன்தாமே உங்களுக்குத் தந்தருள்வாராக.

வேதம், "ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்," என்றும், "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்," என்றும், "மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்," என்றும் கூறுகிறது (எபேசியர் 4:32; மத்தேயு 6:14; லூக்கா 6:37). ஆம், நாம் மன்னிக்கப்படும்படி, மன்னிப்போம். இரண்டாவதாக, கொடுப்பதன் வாயிலாக இரக்கத்தைக் காண்பிப்போம். அன்பான ஒரு தகப்பன் நன்மையானவற்றை கொடுக்கிறான் என்று வேதம் கூறுகிறது (மத்தேயு 7:11). அவ்வாறே, நம்மிடம் யாராவது கேட்கும்போது, இரக்கத்துடன் கொடுப்போம். அப்போது தேவன் நமக்குப் பலன் அளிப்பார். வேதம், "மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்," என்றும், "உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு," என்றும், "நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்," என்றும் கூறுகிறது (மத்தேயு 7:12; 5:40; எபிரெயர் 13:16). ஆகவே, இன்று கொடுப்போம்; இரக்கம் நம்மேல் வரும் (லூக்கா 6:38).

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை காக்கும் உம் பெரிதான கிருபைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் இரக்கமுள்ளவராயிருப்பதுபோல, இரக்கத்தோடு இருப்பதற்கு எனக்குக் கற்றுத்தாரும். உமக்கு முன்பாக அறிக்கை பண்ணும்போது, தயவாய் என் பாவங்களை மன்னித்தருளும். எல்லா அநியாயமும் நீங்கும்படி என் உள்ளத்தைக் கழுவி, சுத்திகரித்தருளும். மற்றவர்களை தயவாயும் முழுதாகவும் மன்னிப்பதற்கு எனக்கு உதவும். என்னை மனதுருக்கத்தினாலும், அன்பினாலும், கிருபையாலும் நிறைத்தருளும். உதாரத்துவமாகவும் மனப்பூர்வமாகவும் கொடுப்பதற்கு எனக்குப் போதித்தருளும். உமது இரக்கம் என்னை காத்து, என் வாழ்க்கை வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.