எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு நாம், "தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்" (யோபு 5:10) என்ற வசனத்தை தியானிக்கப்போகிறோம். வேதம், "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்" (யாக்கோபு 4:10) என்று கூறுகிறது. தாழ்மை என்பது இயேசு கிறிஸ்துவின் குணங்களுள் ஒன்றாகும். வேதம், "கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் ... இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவருமாயிருக்கிறார்" (சகரியா 9:9) என்று கூறுகிறது. இயேசுதாமே, தாழ்மையாக வாழ்ந்தார்.
வேதத்தில் பல இடங்களில் "தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" என்றும், "மேன்மைக்கு முன்னானது தாழ்மை" என்றும் எழுதப்பட்டுள்ளது (லூக்கா 14:11; 18:14; நீதிமொழிகள் 15:33; 18:12). ஆகவே, அன்பானவர்களே, தாழ்மையென்னும் தெய்வீக தரம் நம்மிடம் இருக்கிறதா? என்று நம் வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்போம். நம்மை நாமே தாழ்த்தினால், ஆண்டவர்தாமே தம் ஏற்ற வேளையில் நம்மை உயர்த்துவார்; கனப்படுத்துவார்.
இந்த வசனத்தின் இரண்டாம் பகுதி, துக்கிக்கிறவர்கள் இரட்சிப்புக்கு உயர்த்தப்படுவார்கள் என்று கூறுகிறது. ஆம், தேவனுடைய வார்த்தை, உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று கூறுகிறது (யோவான் 16:20). இந்த உலகத்தில் நாம் பல்வேறு உபத்திரவங்களின் வழியாக, சோதனைகள் வழியாக செல்ல நேரிடுகிறது. ஆனால், நாம் ஆண்டவரை நம்பும்போது, அவரால் பெரிய அதிசயங்களைச் செய்ய முடியும். வேதம், "கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்" என்று கூறுகிறது (1 பேதுரு 1:6,7). அன்பானவர்களே, இன்றைக்கு பலவித காரணங்களால் நீங்கள் துக்கத்தில் இருக்கலாம். ஆனால், தேவனை நோக்கிப் பார்த்து, அவரையே இறுகப்பற்றிக்கொள்ளுங்கள். நிச்சயமாகவே அவரிடமிருந்து அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்று உம் முன்பாக என்னை தாழ்த்துகிறேன். தாழ்மையில் நடக்கவும் உம் வழிகளில் நம்பிக்கையாயிருக்கவும் எனக்குப் போதித்தருளும். என் துக்கத்தையும் மௌனமாக நான் வடிக்கும் கண்ணீரையும் நீர் அறிந்திருக்கிறீர். ஆண்டவரே, உம் வாக்குத்தத்தத்தின்படியே என் துயரத்தையெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றுவீர் என்று நம்புகிறேன். எல்லா உபத்திரவங்களினூடேயும் என் விசுவாசத்தை நீர் பெலப்படுத்தி, உமது ஏற்றவேளையில் உயர்த்தும்படி ஜெபிக்கிறேன். என் தேவனே, உம்மை மாத்திரமே நான் பற்றியிருக்கிறேன் என்று கூறி இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


