அன்பானவர்களே, இன்று, "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்" (ஏசாயா 41:10) என்ற வசனத்தை தியானிப்போம். இதில், கர்த்தர், பலமுறை 'நான்' என்று கூறுகிறார். 'நீ பயப்படாதே... நான் உன்னுடனே இருக்கிறேன்' என்று கூறுகிறார். ஆகவேதான் தாவீது, "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்" (சங்கீதம் 23:4) என்று கூறுகிறான். "தேவன் நம்மோடு இருந்தால், யார் நமக்கு விரோதியிருப்பான்?" எந்தத் தீமையும் நம்மை அணுக முடியாது. ஆகவேதான் பக்தன், "கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?" என்று கூறுகிறான். நாம் எந்த மனுஷனுக்கும் பயப்பட தேவையில்லை. நமக்கு விரோதமாக எதுவும் எழும்பும் என்று அஞ்ச தேவையில்லை. நீங்கள் இருளின் பள்ளத்தாக்கின் வழியே நடந்தாலும் தேவன், "என் நீதியின் வலக்கரத்தால் உன்னை தாங்குவேன்," என்று கூறுகிறார்.

சென்னை, பாடியநல்லூரைச் சேர்ந்த சகோ. எபெனேசரின் சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவருக்குத் திருமணமாகி 17 ஆண்டுகளாகிவிட்டன. திருமணத்திற்கு முன்பு அவர் எப்போதாவது குடிப்பார். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சிறு வாக்குவாதம் நடந்தது. அது பெரியதாகி, இருவரும் பிரிந்துவிட்டனர். அவர் கவலைப்பட்டு, அதிகமாகக் குடிக்கத் தொடங்கினார். சிலவேளைகளில் அவர் குடித்துவிட்டு, சுயநினைவில்லாமல் சாலையில் விழுந்து கிடந்தார். இந்தப் பழக்கத்தினால் வேலையை இழந்தார். அவரது உறவினர்கள் அவரை தவிர்க்க ஆரம்பித்தார்கள். அவரது சகோதரி மேரி மாத்திரமே தாய்போல அவரைக் கவனித்துக் கொண்டார்கள். அவரை சென்னையிலுள்ள இயேசு அழைக்கிறார் ஜே.சி. ஹவுஸ் ஜெப கோபுரத்துக்கு அழைத்து வந்தார்கள். அங்கு அவருக்காக ஜெப வீரர்கள் ஜெபித்தார்கள்; அவர் ஆறுதல் பெற்றார். அவர் அடிக்கடி ஜெப கோபுரத்திற்கு செல்ல ஆரம்பித்தார். ஒருநாள் தியான அறையில் அவர், "ஆண்டவரே, என் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னியும். இந்த தீயப் பழக்கத்தை எடுத்துப்போடும். தயவாய் எனக்கு உதவி செய்யும்," என்று ஜெபித்தார். நாட்கள் கடந்தன; அனைவரும் அவரை விட்டுவிலகினர்.

ஆனால் தேவன் அவரை விட்டுவிடவில்லை. தேவனின் மாறாத அன்பு அவரை முழுவதுமாக விடுவித்தது. குடிப்பழக்கத்திலிருந்து அவர் முற்றிலுமாக வெளிவந்தார். ஆண்டவர் அவரை பூரணமாக விடுவித்தார். 30 ஆண்டு நெடிய குடிப்பழக்கத்திலிருந்து, ஆண்டவர் அற்புதவிதமாக அவரை விடுவித்தார். அவர் மனைவி திரும்பி வந்தார்கள். இப்போது மகிழ்ச்சிகரமாக வாழ்கிறார்கள். இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டது. இன்று அவர், "குடிப்பழக்கத்திலிருந்து நான் விடுவிக்கப்பட்டுள்ளேன்," என்று கூறுகிறார். அவர் ஜெப கோபுரத்திற்கு வந்து தேவனுக்கு நன்றி செலுத்தினார். அன்பானவர்களே, உங்கள் பாவத்தைக் குறித்து குற்றவுணர்வு கொள்ளாதீர்கள். உங்கள் பாவத்தை மறைக்காமல் தேவனுக்கு முன்பாக அறிக்கை பண்ணுங்கள்; தேவன் உங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிப்பதற்கு இரக்கமுள்ளவராயிருக்கிறார். மனங்கலங்காதிருங்கள். பயப்படாதிருங்கள். உங்கள் பாவ பழக்கங்களிலிருந்து வெளியே வருவதற்கு தேவன் உங்களுக்கு உதவுவார்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என்னோடு எப்போதும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பயம் எழும்பும்போது, எனக்கு உதவுவதற்காக நீர் என்னோடு இருக்கிறீர் என்பதை நினைவுப்படுத்தும். எனது பெலவீனத்திலும் நம்பிக்கையற்ற நிலையிலும் நீரே என் பெலனாயிருக்கிறீர். உம் நீதியின் வலக்கரத்தால் என்னை இறுகப்பற்றிக்கொள்ளும். ஆண்டவரே, என் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து என் இருதயத்தை சுத்திகரிப்பீராக. என் வாழ்வில் காணப்படும் அடிமைத்தன சங்கிலிகளையும் பயத்தையும் அறுத்துப்போடும். உம் சமுகத்தில் பயமின்றி நடப்பதற்கு எனக்குக் கற்றுக்கொடும். ஒருபோதும் மாறாத உம் நித்திய இரக்கத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் எப்போதும் உம்மையே முழுதாக நம்புகிறேன் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.