அன்பானவர்களே, இன்று கர்த்தர், "நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று" (ஓசியா 14:4) என்று கூறுகிறார். தேவனால் கூடாத காரியம் எதுவுமில்லை! கர்த்தரால் எந்தச் சூழ்நிலையையும் மாற்ற இயலும். அவரால் உங்கள் சீர்கேட்டை சரிசெய்யமுடியும். இந்த உலகில் பரிசுத்தவான் யாருமில்லை. எல்லோரும் தேவனை விட்டு விலகி, அவரது மகிமையை இழந்துபோனோம். ஆனால், இன்று கர்த்தர் நம் சீர்கேட்டை குணமாக்கப்போகிறார். கர்த்தர், "நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்" (எசேக்கியேல் 36:25) என்று கூறுகிறார். அவர் இங்கு, "தெளிப்பேன், சுத்தமாக்குவேன்," என்று கூறுகிறார். உங்கள்மேல் கொண்ட அன்பினால் இதைச் செய்கிறார். முதலில் அவர், விலையில்லாமல் உன்னை நேசித்தேன் என்கிறார். தமது மகத்தான அன்பினிமித்தம் அவர் நம்மை சுத்திகரிக்கிறார்.

ஆகவே, தாவீதைப்போல தேவனைநோக்கி முறையிடுவோம். தாவீது, "நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்" (சங்கீதம் 51:7) என்று கூறுகிறான். எல்லோரும் இதுபோன்ற சுத்தத்தை விரும்புவார்கள் அல்லவா? இயேசு, சீஷர்களின் கால்களைக் கழுவியபோது, பேதுரு, "ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல; கைகளையும் தலையையும் கூட கழுவும்," என்று கூறினான். நாம் பூரண சுத்தத்தை விரும்புகிறோம். இஸ்ரேலில் மக்கள் சடங்காச்சார சுத்திகரிப்பை நம்புகிறார்கள். எந்த வீட்டுக்குள்ளும், தங்கள் ஆலயத்திற்குள்ளும் செல்லும் முன்னர் எப்போதும் கால்களையும் கைகளையும் கழுவுவார்கள். அன்பானவர்களே, தேவன் உங்களுக்கும் அப்படியே செய்ய விரும்புகிறார். அவர் உண்மையுள்ளவர். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9) என்று வேதம் கூறுகிறது. ஆம், அவர் எல்லா பொல்லாப்பிலிருந்தும் நம்மை மீட்க உண்மையுள்ளவராயிருக்கிறார். ஆகவேதான் கர்த்தர், "கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்," என்று கூறுகிறார். வேதம், "அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்" என்று கூறுகிறது. இன்னொரு பக்கம், "துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்" (தானியேல் 12:10). நாம் ஞானவான்களாக இருக்கவேண்டும்; தேவனிடம் மன்னிப்பைக் கேட்கவேண்டும்.

எனக்குத் திருமணமான புதிதில், காருண்யா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் ஆசீர்வதிக்கப்படும்படி இயேசு அழைக்கிறார் ஊழியம் வல்லமை ஊழியப் பயிற்சியை நடத்தியது. அந்நாட்களில் அதிக பிரச்னையை கொடுத்த, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சீர்கேடான மாணவர்கள் உள்பட அநேகர் வல்லமை ஊழியத்தில் கலந்துகொண்டனர். ஆனால், வல்லமை ஊழியத்தில் என் தகப்பனாரும் கணவரும் ஊழியம் செய்தபோது, ஜெப வேளையில் ஆண்டவர் அநேக மாணவரை பரிசுத்த ஆவியினால் நிறைத்தார். அப்போது, தேவ வல்லமை, பிரச்னையை கொடுத்த மாணவர்கள் மீது இறங்கியது. நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர். சகதியான தண்ணீர் நிறைந்திருந்த குழிக்குள் தூக்கி வீசப்பட்டனர்; அதில் புரண்டனர். ஆனாலும் பரிசுத்த ஆவியின் நிறைவில் மகிழ்ந்தனர். பிறகு ஆண்டவர் அவர்களை பரிசுத்த ஆவியால் சுத்திகரித்தார் என்பதை அறிந்துகொண்டேன். உங்களுக்கும் அப்படியே நடக்கும். நீங்கள் தேவனிடம், அவரது வல்லமையால் உங்களைச் சுத்திகரிக்கும்படி முறையிடும்போது, அவர் சுத்திகரிப்பார்.

ஜெபம்:
பரம தகப்பனே, என் பெலவீன தருணங்களிலும் விலையேதும் இல்லாமல் என்னை நேசிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, எல்லா பாவமும், எல்லா அசுத்தமும் நீங்கள் என்னை சுத்திகரியும். என்னை கழுவி, உறைந்த மழையைக் காட்டிலும் வெண்மையாக்கும். என் இருதயத்தை விட்டு எல்லா விக்கிரகத்தையும் தவறான ஆசைகளையும் அகற்றும். உம் பரிசுத்த ஆவியினால் என்னை நிறைத்து என் வாழ்க்கையை சுத்திகரித்தருளும். உம் வழிகளில் நடக்கவும் உம்மைப்போல பரிசுத்தமாயிருக்கவும் எனக்கு உதவும். உம் அன்பு என் சீர்கேட்டை குணமாக்கி, முற்றிலுமாக சீர்ப்படுத்தட்டும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.