அன்பான சகோதர, சகோதரிகளே, இன்றைக்கு, "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை" (யாக்கோபு 1:17) என்ற அருமையான வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவன் ஒன்றை வாக்குப்பண்ணினால், நிச்சயமாய் செய்வார். வேதம், "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல," என்று கூறுகிறது (எண்ணாகமம் 23:19). அவர் தம் மனதை மாற்றுகிறவரல்ல. இயேசு, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நாம் அவருக்குச் செய்யவேண்டியவற்றில் தவறினாலும், அவர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.
அவர் பூரண சற்குண தேவனாயிருக்கிறார். வேதம், "உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்," என்று கூறுகிறது (மத்தேயு 5:48). அவர் பூரணராயிருப்பதினால், பூரணமான ஈவுகளைத் தருகிறார். உலகம் தோன்றுவதற்கு முன்னரே தம் பிள்ளைகளுக்கு நன்மையானவற்றை அவர் திட்டம் பண்ணியுள்ளார். தாம் திட்டமிட்டவற்றை அவர் மாற்றுவதில்லை. தாவீது, தேவன் தனக்கு ஆச்சரியமானவற்றை திட்டம்பண்ணியுள்ளார் என்று கூறுகிறான். அதேபோல், கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலும் ஆச்சரியமானவற்றை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். வேதம், "உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது," (சங்கீதம் 31:19) என்று கூறுகிறது. அவருடைய நன்மை, நம் கண்கள் காண்பவற்றுக்கும், காதுகள் கேட்பவற்றுக்கும், நம் மனம் எண்ணுவதற்கும் அப்பாற்பட்டது. அவரை நம்புகிறவர்களுக்கும் நேசிக்கிறவர்களுக்கும் அவரது நன்மை பெரிதாயிருக்கிறது. நாம் தேவனை விட்டு அடிக்கடி விலகுகிறவர்களாயிருக்கிறோம். ஆனாலும், நம் பரம தகப்பன் உதாரகுணமுள்ளவராகவும் நேசிக்கிறவராகவும் இருக்கிறார். இயேசு, "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத்தேயு 7:11) என்று கூறியுள்ளார்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதில் எவ்வளவு பிரியமாயிருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். குழந்தை பிறந்த அன்றிலிருந்து அதன் எதிர்காலத்திற்காக, அதற்கு நன்மையானவற்றை அளிப்பதற்காக, தாங்கள் கடினமாய் உழைத்து சம்பாதித்த பணத்தை சேமித்து வைப்பார்கள். பூமிக்குரிய பெற்றோர் இப்படிச் செய்தால், பரம தகப்பனானவர் தம் பிள்ளைகளுக்கு பூரணமான ஈவுகளைக் கொடுக்க எவ்வளவு பிரியமாயிருப்பார்?
என் மகள் ஸ்டெல்லா ரமோலோ, சின்னவளாக இருந்தபோது, ஏதாவது வேண்டுமென்றால் 'மம்மி மா' என்று என்னை அழைப்பாள். அவள் அப்படி அழைக்கும்போது என் உள்ளம் உருகிப்போகும். நான் ஓடிச்சென்று, அவளை அணைத்துக்கொண்டு, "என் பிள்ளையே உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்பேன். அதேபோன்றே உங்கள் பிள்ளைகள் "அம்மா" அல்லது "அப்பா" என்று அழைக்கும்போது உங்கள் உள்ளம் அவர்களை ஆசீர்வதிக்கும்படி உருகும். பரம தகப்பனின் உள்ளமும் இவ்வாறே இருக்கிறது. நீங்கள் இருக்கும்வண்ணமே தேவனிடம் செல்லுங்கள். அவருக்கு முன்பாக பாசாங்கு செய்யாதீர்கள். நடிக்காதீர்கள். அவர் நன்மையானவற்றை மாத்திரமே கொடுப்பார் என்று விசுவாசித்து திடநம்பிக்கையோடு அவரிடம் செல்லுங்கள். தேவன் எப்போதும் நல்லவராகவே இருக்கிறார். நன்மையான நேரமோ, இக்கட்டான நேரமோ தைரியமாய் அவரை அணுகுங்கள். தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள் யாவரையும் அவர் மிகுதியாய் ஆசீர்வதிப்பார் என்று வேதம் கூறுகிறது (ரோமர் 10:12).
'மகிமையின் மனிதர்' என்று அழைக்கப்பட்ட தேவனுடைய ஓர் ஊழியர் இருந்தார். ஒருநாள் அவர் மகன் அதிகமாய் சுகவீனப்பட்டான். பையனுக்கு மருந்து வாங்கி வருமாறு அவர் மனைவி கூறினார்கள். அவர் போகும் வழியில் ஏழைக் குழந்தை ஒன்றைப் பார்த்தார். அதற்கு இருந்த தேவையைக் கண்டு அவர் உள்ளம் உருகியது. தன்னிடம் இருந்த பணம் எல்லாவற்றையும் அவர் அந்தக் குழந்தைக்குக் கொடுத்துவிட்டார். வியாதிப்பட்டிருந்த தன் மகனைக் குறித்த கவலையுடன் அவர் வீடு திரும்பினார். வழியில் சாலையோரமாக முழங்காற்படியிட்டு, "தகப்பனே, தகப்பனே," என்று ஜெபித்தார். அதற்குமேல் அவரால் எதையும் கூற இயலவில்லை. அவர் வீடு திரும்பியபோது, அவர் மனைவி, "நம் மகன் சுகமாகிவிட்டான்," என்று சந்தோஷத்துடன் கூறினார்கள். விசுவாசத்தோடு நாம் எளிமையாக கூப்பிட்டாலும் ஆண்டவர் பதில் அளிக்கிறார்; அற்புதத்தைச் செய்கிறார்.
அன்பானவர்களே, தேவன் நம் தேவைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் தம் மகிமையின் ஐசுவரியத்தினாலே சந்திக்கிறார். அவர் நன்மையானதும் பரிபூரணமானதுமான ஈவுகளைக் கொடுக்கிறவராயிருக்கிறார். இன்றும் விசுவாசத்தோடு அவரிடம் கேளுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் காத்திருக்கும் பரிபூரணமான ஈவு வந்துகொண்டிருக்கிறது. அவர் நம்புங்கள்; ஸ்தோத்திரியுங்கள்; அவரது நன்மையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, நீர் நன்மையானதும் பரிபூரணமானதுமான ஈவை கொடுப்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்று என் தேவைகள் எல்லாவற்றையும் திடநம்பிக்கையோடு உம்மிடம் கொண்டு வருகிறேன். ஆண்டவரே, என் இருதயத்தின் விருப்பங்களை உம் பூரண சித்தத்தின்படி அருளிச் செய்யும். எனக்கு உம் ஆசீர்வாதங்கள் வந்து சேரும்படி ஒருவரும் பூட்டக்கூடாத வாசல்களை திறப்பீராக. சுகத்திற்காக, திருமணத்திற்காக, பிள்ளைக்காக, வேலைக்காக, பதவி உயர்வுக்காக, சீர்ப்படுவதற்காக, வெற்றிக்காகக் காத்திருப்பவர்கள் உம் கிருபையைப் பெற்றுக்கொள்ளட்டும். உம் உண்மையையும் நன்மையையும் நம்புவதற்கு எனக்கு உதவும். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் உம் பூரண கிருபையை பொழிந்தருளும். உம் பரிபூரண ஈவுகள் எங்களில் விளங்கி, உம் நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வரட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


