அன்பானவர்களே, இன்று தேவன் நம்மோடு பேசுகிறார்; நமக்குள் தம் ஜீவனை அனுப்புகிறார். வேதம், "அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து..." (1 பேதுரு 1:8) என்று கூறுகிறது. ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்கும்போது அந்த சந்தோஷம் நமக்குள் வருகிறது. நாம் அதை அனுபவிக்கிறோம். சில மக்களைப் பார்த்தால், அவர்கள் தங்கள் பணத்தை பொக்கிஷமாக நினைத்து, எந்த வங்கியில் வைத்தால் அது பத்திரமாக இருக்கும் என்று தேடுவார்கள்; ஒருவேளை அது திருடப்பட்டாலும் எனக்கு உத்தரவாதம் வேண்டும் என்று பணத்திற்கு காப்பீடு செய்வார்கள். தங்கள் பொக்கிஷத்தைக் காத்துக்கொள்ள சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தேடுவார்கள்; தங்களுக்கென்று அதைக் காத்துக்கொள்ள எல்லாவற்றையும் செய்வார்கள். ஏகப்பட்ட முயற்சிகளைச் செய்தாலும், அதைக் குறித்து சமாதானமடையமாட்டார்கள்.

ஆனால், நாங்கள் ஆண்டவர் இயேசுவையே எங்கள் சம்பத்து என்று விசுவாசித்து, அவரையே எங்கள் பொக்கிஷமாக்கிக் கொண்டிருப்பதால் சத்தியத்தை அறிந்திருப்பதால் ஏற்படும் பரிபூரண சந்தோஷத்தால் எங்கள் உள்ளங்கள் நிரம்பியிருக்கின்றன. சத்தியம் என்பது என்ன? இயேசுவே சத்தியமாயிருக்கிறார். அவர் வாயிலாக, அவரது இரத்தத்தினால் நாம் அவருடைய பிள்ளைகளாகிறோம். நம் பாவங்கள்போக நாம் கழுவப்பட்டு, முழு விடுதலை பெறுகிறோம். எந்தக் குற்றவுணர்வும் நம்மை கீழாக தள்ள முடியாது.

நமக்கு ஜீவனைத் தரும்படியாக அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். சிலுவையில் தாம் செய்தவற்றினால் நித்திய ஜீவனையும் திறந்தார். எங்கள் இருதயங்களில் அந்த சந்தோஷம் இருக்கிறது. இந்த உலகிலும் மறு உலகிலும் எங்களுக்கு எதுவும் குறைவுபடவில்லை. எங்கள் ஜீவன் பாதுகாப்பாக இருக்கிறது. அதுவே நாங்கள் விசுவாசித்து வாழ்வதான சொல்லிமுடியாத சந்தோஷமாயிருக்கிறது. இதற்காக தேவனை துதிப்போமா? இந்த நம்பிக்கையே எல்லா துக்கத்தையும் அகற்றி, எங்கள் வாழ்வில் முற்றிலுமாய் நிரம்பியிருக்கிறது.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன்; உம் நிரம்பி வழியும் சந்தோஷத்தை என் உள்ளத்தில் பெற்றுக்கொள்கிறேன். இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக நீரே என் சிறந்த பொக்கிஷமாக இருப்பீராக. என் பாவங்களையெல்லாம் கழுவி, என்னை முற்றிலும் விடுவிக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்வை மீண்டும் எந்தக் குற்றவுணர்வோ, பயமோ ஆட்கொள்ளாதிருப்பதாக. உம் சத்தியத்தின் சந்தோஷத்தில் நாள்தோறும் வாழ்வதற்கு எனக்கு உதவும். நான் சந்திக்கும் எல்லா சூழ்நிலையிலும் இந்த சந்தோஷம் நிரம்பி வழியட்டும். இன்னும் அதிகமாய் உம்மை நம்புவதற்கு எனக்குக் கற்றுத்தாரும். உம் சிலுவையின் வாயிலாகவும் உயிர்த்தெழுதலின் வாயிலாகவும் அருளுகிற நித்திய ஜீவனுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஒருபோதும் வாடாத சந்தோஷத்திற்காக உம்மை துதிக்கிறேன், ஆமென்.