அன்பானவர்களே, பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று, கர்த்தர், "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்" (எரேமியா 29:13) என்று வாக்குக்கொடுக்கிறார். பெண்களாகிய நாம் ஒன்றை செய்துகொண்டிருக்கும்போதே மற்ற பல காரியங்களைக் குறித்தும் யோசித்துக்கொண்டிருப்போம். நம் உள்ளம் பற்பல சிறிய காரியங்களால் நிரம்பியிருக்கிறது. பெண்கள், பல காரியங்களை ஒரே நேரத்தில் செய்வதில் சிறந்தவர்கள் என்று பொதுவாக கூறுவார்கள். ஆம், அது நல்ல விஷயம்தான். ஆனால், இன்று, ஆண்டவர் தம்மை நாம் முழு இருதயத்தோடும் தேடவேண்டும் என்று கூறுகிறார். நம் உள்ளம் தேவனை தவிர வேறு காரியங்களால் நிரம்பியிருக்கிறதா? நாம், அலங்காரம் (makeup) செய்து நன்றாக தோற்றமளிக்கவேண்டும் என்று நினைப்பதற்கு முதலிடம் அளிக்கிறோமா? தேவனை காட்டிலும் அதற்கு சிறப்பான இடம் கொடுக்கிறோமா? தேவனை தேடுகிறதைக் காட்டிலும் நம் பிள்ளைகளை, கணவரை கவனிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோமா? ஆம், எல்லாமே முக்கியமானவைதாம். நன்றாக தோற்றமளிப்பது, குடும்பத்தை, வேலையை கவனிப்பது எல்லாம் முக்கியமானவைதாம். ஆனால், நம் இருதயத்தில் தேவன் இருக்கவேண்டிய இடத்தை அவை எடுத்துக்கொள்கிறதா? அன்பானவர்களே, இதைக் குறித்து நாம் யோசிப்போம். இவை பெண்களுக்கு மாத்திரமானதல்ல; எல்லோருக்கும் பொருந்துபவையாகும்.
நம் முழு இருதயத்தையும் இயேசுவுக்குக் கொடுக்கும்போது, அவர் நம் வாழ்வுக்கான எல்லாவற்றையும் பொறுப்பெடுத்துக்கொள்வார். அது கடினமானது என்று எனக்குத் தெரியும். ஆனால், அதே காரியத்தை நான் கடந்து வந்திருக்கிறேன். நாம் ஜெபிப்பதற்காக அமரும்போதுதான் பல காரியங்களை யோசிக்க தோன்றும். "என் பிள்ளை ஒழுங்காக சாப்பிடுவானா? என் கணவர் வேலையிலிருந்து பத்திரமாக வீடு திரும்புவாரா? நான் திரும்பவும் வேலைக்குச் செல்ல முடியுமா? எப்படி நான் நேரத்துக்கு வாடகை கொடுக்கப்போகிறேன்? இரவிலே யாராவது வந்து நம்மை தாக்கிவிடுவார்களோ?" ஜெபிக்க அமரும்போதுதான் இவற்றையெல்லாம் சிந்திப்போம். ஆனால், இன்று கர்த்தர், 'நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்' என்று கூறுகிறார். இன்று, அமர்ந்திருந்து தேவ பிரசன்னத்தில் திளைப்போம். அப்படிச் செய்யும்போது, நம் முழு இருதயத்தோடும் ஆண்டவரைத் தேடும்போது, அவர் நம் விருப்பங்களையெல்லாம் அருளிச்செய்வார்.
ஆகவே, உங்கள் அறையில் அமைதியான ஒரு மூலையில் அமர்ந்து முதலில் உங்கள் கவலைகளையெல்லாம் கடவுளிடம் கூறுங்கள். நாம் அப்படிச் செய்யும்போது ஆண்டவர் தம் சமாதானத்தால் நம்மை நிரப்புவார். அது, அவரை நம் முழு இருதயத்தோடும் தேடுவதற்கு ஏதுவாகும். அன்பானவர்களே, நம் வாழ்வில் எல்லாவற்றையும் அவர் பொறுப்பெடுத்துக் கொள்வார். நம் முழு உள்ளத்தோடும் அவரை தேடும் காரியத்தை மாத்திரமே செய்யவேண்டும். இன்று அதைத் தடுக்கிறது எதுவாக இருந்தாலும், சமூக ஊடகமாக இருந்தாலும், தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் உங்கள் நண்பராக / தோழியாக இருந்தாலும், உங்கள் குடும்பத்தினராக இருந்தாலும் அதை ஆண்டவர் முன் வைத்திடுங்கள். அன்பானவர்களே, அவரை முழு உள்ளத்தோடும் தேடும்போது, ஆண்டவர் உங்கள் விருப்பங்கள் எல்லாவற்றையும் அருளிச்செய்வார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்றைக்கு உம்மிடம் ஜெபிக்கிறேன். தகப்பனே, என் இருதயத்தை மற்ற எல்லா காரியங்களாலும் நிரப்பியிருக்கிறேன். மற்ற பலவித காரியங்களால் என் கவனம் சிதறுகிறது. ஆண்டவரே, உம் சமுகம் என்மேல் வரவேண்டும் என்று ஜெபிக்கிறேன். தகப்பனே, என் இருதயம் உம்மால் மட்டுமே நிறைந்திருக்கவும், கவனம் சிதறாமல் என் முழு இருதயத்தோடும் உம்மை தேடவும் எனக்கு உதவி செய்யும். தகப்பனே, சமூக ஊடகம், தொலைபேசி என்ற அடிமைத்தனங்கள் உள்ளிட்ட, உம்மோடு நான் நடப்பதை தடுக்கும் எல்லா காரியங்களையும் அகற்றி, என் உள்ளத்தில் அவை இருந்த இடத்தினை உம் பிரசன்னத்தால் நிரப்பவேண்டுமென்று ஜெபிக்கிறேன். முழு இருதயத்தோடும் உம்மை தேடவும், உம் சமாதானத்தோடு வாழவும் எனக்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


