அன்பானவர்களே, தேவன் உங்களை நேசிக்கிறார். அவரது அன்பு ஆச்சரியமானது. அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்; விட்டுவிலகவும் மாட்டார். முடிவுபரியந்தம் உங்கள்மேல் அன்புகூருவார். இயேசு, "பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்," (யோவான் 15:9) என்று கூறியுள்ளார். இயேசு, மாம்சத்தில் வந்த தேவன். அவர் உங்களை நேசிக்கிறார். உங்களைச் சுற்றிலும் காணப்படும் பிரச்னைகளை பார்த்து ஒருபோதும், "கடவுள் என்னை நேசிக்கவில்லை," என்று கூறாதிருங்கள். சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும். இன்று நீங்கள் காணும் பிரச்னைகள் நாளை இருக்காது. ஆனால், உங்கள்பேரிலான தேவனுடைய அன்பு, இன்று மட்டுமல்ல, நாளையும் இருக்கும். அவரது அன்பு, உங்கள் துக்கம் எல்லாவற்றையும் சந்தோஷமாக மாற்றும். இயேசுவின் அன்பை நம்பிடுங்கள். அவர் உங்கள்மேல் கொண்டிருக்கும் அன்பினால்தான் சிலுவையில் அறையுண்டார். வேதம், உங்கள்மேல் அன்புகொண்டதால், தம்மைத்தாமே உங்களுக்காகக் கொடுத்தார்; உங்கள் பாவங்களை, சாபங்களை, வியாதியை, உபத்திரவங்களை எல்லாம் சுமந்து, அவற்றையெல்லாம் தம் தியாகத்தின் மூலம் அழித்து, நீங்கள் விடுவிக்கப்பட்டு, மன்னிப்பைப் பெற்று, சுகம் பெற்று, செழித்து கடைசியாக பரலோகத்தினுள் நுழைவதற்கான வழியை உண்டாக்கினார் என்று கூறுகிறது (கலாத்தியர் 2:20).

நீங்கள் பாவியாக இருந்தாலும், வேதம், "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்," என்று கூறுகிறது (ரோமர் 5:8). இது அவரது அன்பைக் காட்டுகிறது. உங்கள் பாவங்களை விட்டு இயேசுவிடம் திரும்புங்கள். அவர் உங்களை மன்னித்து, மறுரூபமாக்கி, தன் பிள்ளையாக்கட்டும். வேதம், "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" என்று கூறுகிறது (ஏசாயா 53:5). இயேசுவும் தம் அன்பை வெளிப்படுத்தும்வண்ணம், சீஷர்களின் பாதங்களைக் கழுவினார். முடிவுபரியந்தம் அவர்களிடம் அன்புவைத்தார் என்று வேதம் கூறுகிறது (யோவான் 13:1). அவரைப் பின்பற்றுவதினால் நீங்கள் படும் வெட்கம், வேதனை, அனுபவிக்கும் முள்கள், காயங்கள் எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். அவை எல்லாவற்றையும் அவர் கழுவி, நீங்கள் வெட்கமடைந்த இடத்தில் இரட்டிப்பான கனத்தைக் கொடுக்கிறார். அன்பு, உயிர்த்தெழுதவும் செய்யும். இயேசு, மார்த்தாளிடமும் மரியாளிடமும் லாசருவினிடமும் அன்புகூர்ந்தார். அவர் அழுது, லாசருவை பெயர் சொல்லி அழைத்து, மரணத்திலிருந்து எழுப்பினார். அன்பு உயிர்த்தெழுகிறது. அவர் உங்களையும் உயிர்த்தெழப்பண்ணுகிறார்.

நித்திய ஜீவனை விரும்பிய வாலிபன்மேல் இயேசு அன்புகூர்ந்தார். இயேசு, அவனை பார்த்தார்; அவன்மேல் அன்புகூர்ந்தார் என்று வேதம் கூறுகிறது (மாற்கு 10:21). பரலோகத்தை வாஞ்சிக்கும் அனைவரும் தேவனால் நேசிக்கப்படுவர். இயேசுவுக்காக எல்லாவற்றையும் விட்டவர்கள், நூறுமடங்கு பெறுவதோடு, நித்தியஜீவனையும் பெற்றுக்கொள்வர் என்று வேதம் கூறுகிறது (மத்தேயு 19:29). அந்த அன்பே உங்களை பரலோகத்திற்கு அழைத்துச்செல்லும். அவரது அன்பு குணப்படுத்தவும் செய்யும். திரளானோர் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல் இருப்பதை இயேசு கண்டபோது, அவர் அன்பினால் உருகி அவர்களைக் குணப்படுத்தினார். இறுதியாக அவர் அன்பு சத்துருக்களை சிநேகிப்பதற்கு உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது. பொறாமையும் பொல்லாங்கும் நிறைந்த இந்த உலகில், சிலுவையில் இயேசு, "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்," என்று ஜெபித்ததுபோல, உங்களை அன்பினாலும் மன்னிப்பினாலும் நன்மை செய்வதினாலும் முற்றும்ஜெயங்கொள்ளுகிறவர்களாக எழும்பப் பண்ணுகிறார். இயேசுவின் இந்த அன்பில் நிலைத்திருங்கள். அவரது அன்பின் மகிழ்ந்திடுங்கள். அன்பானவர்களே, இயேசு உங்களை நேசிக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, முடிவுபரியந்தம் என்மேல் அன்பு வைப்பதாக வாக்குக்கொடுத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். சிலுவைக்காக, மன்னிப்புக்காக, சுகம் அளிப்பதற்காக, உம்முடைய தியாகத்தினால் நான் பெற்றிருக்கும் விடுதலைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும், உம் பரிபூரண அன்பு என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்து, என் உள்ளத்திலிருந்து எல்லா துக்கத்தையும் பயத்தையும் அகற்றுவீராக. என் வாழ்வில் செத்துப்போய் காணப்படுகிறவை எல்லாவற்றையும் உம் கிருபையினால் உயிர்த்தெழச் செய்யும்; நீர் செய்ததுபோலவே மற்றவர்களை மன்னித்து அன்புகூரவும், உம்மையே முழுதாய் பின்பற்றவும் எனக்குக் கற்றுத்தாரும். எப்போதும் உம் அன்பில் நிலைத்திருக்க உதவும். உம்மையே முற்றிலுமாக நம்பி ஜெபிக்கிறேன், ஆமென்.