அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி ...ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்" (நியாயாதிபதிகள் 3:9) என்பதாகும். அவர்கள் தேவனுக்கு விரோதமாக பாவஞ்செய்து, அவரை விட்டு புறம்பே திரும்பினார்கள்; தங்களைச் சுற்றிலும் உள்ளவர்களின் வழிகளைப் பின்பற்றினார்கள். ஆகவே, கர்த்தர், விரோதிகள் அவர்களை ஒடுக்குவதற்கு அனுமதித்தார். அவர்கள் உதவிக்காகக் கூப்பிட்டபோது, அவர் காலேபின் தம்பியின் மகன் ஒத்னியேலை அவர்களை விடுவிக்கும்படி எழுப்பினார். அப்படியே கர்த்தர் ஏகூத், தெபொராள், கிதியோன் ஆகியோர் உள்பட வலிமையோடு செயல்பட்டு இஸ்ரவேல் மக்களை மீட்டுக்கொண்ட மற்ற நியாயாதிபதிகளையும் எழுப்பினார்.

கொடுமையும், இக்கட்டுகளும் நேரிடும்போது நாமும் தேவனை நோக்கியே கூப்பிடவேண்டும். யோபு மிகுந்த உபத்திரவத்தை அனுபவித்து, அவன் சார்பில் யாராவது இடைப்படவேண்டும் என்று வாஞ்சித்தான். யோபு, "எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே," (யோபு 9:33) என்று கூறினான். தனக்கு நெருக்கம் நேரிட்டிருக்கும்போது தேவனுக்கும் தனக்கும் இடையே யாராவது தனக்கு உதவியாக நிற்கவேண்டும் என்று அவன் விரும்பினான். பிரச்னைகள் நம்மை திணறச் செய்யும்போது, நாம் யாராவது நமக்கு உதவி செய்வார்களா என்று பார்ப்போம். இறுதியில் நம்முடைய மெய்யான மீட்பரான இயேசுவிடம் வந்து சேருவோம். அவரால் நம்மை பாவத்திலிருந்து, அடிமைத்தனத்திலிருந்து, கொடுமையிலிருந்து, பயத்திலிருந்து, மரணத்திலிருந்து விடுவிக்க முடியும். எப்பொழுதெல்லாம் அவரை நோக்கிக் கூப்பிடுகிறோமோ அப்போதெல்லாம் அவர் நம் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, நமக்கு உதவி செய்ய வருகிறார்.

அக்டோபர் 2ம் தேதி அப்படி ஓர் அற்புதத்தை நாங்கள் கண்டோம். மகாராஷ்டிரா, சாங்கிலியைச் சேர்ந்த விஷால் கெய்க்வாட் என்ற அன்பு சகோதரர், நீண்டகாலமாக தொண்டை வலியினால் அவதிப்பட்டு வந்தார். ஆண்டவர் தன்னை சுகப்படுத்தவேண்டும் என்று அவர் ஊக்கமாக ஜெபித்து, காத்திருந்தார். அன்று மக்களுக்காக ஜெபித்தபோது, நான், "ஆண்டவரே, தொண்டையில் பிரச்னையினால் அவதிப்படுகிறவர்களை சுகமாக்கும்," என்று பிரார்த்தித்தேன். அந்தத் தருணத்திலிருந்து விஷால், சுகத்தை உணர தொடங்கினார்;  பூரண சுகம் பெற்றார். அவர் தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு, விசுவாசத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்.

அன்பானவர்களே, நீங்களும் இன்று ஆண்டவரை நோக்கி, "தேவனே என்னை குணமாக்கும். இந்த பிரச்னையிலிருந்து என்னை விடுவித்தருளும்," என்று கூப்பிடலாம். இன்றே உங்கள் இரட்சணியத்தின், விடுதலையின் நாள். உங்களுக்குச் சகாயம் செய்யவே இயேசு இருக்கிறார்.

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, நீரே என் மெய்யான மீட்பர். உம் பிள்ளைகளை எல்லா பிரச்னைகள், ஒடுக்குதல்களிலிருந்தும் வெளியே கொண்டு வாரும். தொடரும் இடுக்கண்கள், உறவு சிக்கல்கள், சரீர பாடுகளிலிருந்து அவர்களை மீட்டருளும். "ஆண்டவரே, என்னை இரட்சியும்" என்று கூப்பிட்ட பேதுருவைக் காப்பாற்றியதுபோல, உம் கரத்தை நீட்டி, உம் பிள்ளைகளை இரட்சித்தருளும். அவர்கள் வீடுகளில் தவறான புரிதல்களை அகற்றி, சமாதானத்தை திரும்ப தந்தருளும். அவர்கள் தொண்டையை, நாவினை, சிறுகுடலை, ஈரலை, சிறுநீரகத்தை இன்னும் பாதிக்கப்பட்ட எல்லா உறுப்பையும் தொட்டருளும். வலிப்பினால், நடுக்கத்தினால், நரம்பு கோளாறுகளால், புண்களால், வேதனையால், காதுகளிலிருந்து சீழ் வெளியேறுவதால், கால் வீக்கத்தினால், தலைகளைப் பாதிக்கும் பிரச்னைகளால் அவதிப்படுவோர் அனைவரையும் சுகமாக்கும். தங்கள் இக்கட்டுகளினால் தொடர்ந்து முறையிடும் பிள்ளைகளை ஆறுதல்படுத்தும்; அவர்களைக் குணமாக்கியருளும்; பக்தியில் நடத்திடும்; குடும்பத்துக்கு அவர்களை மகிழ்ச்சியாக மாற்றியருளும். எல்லா தலைவலியையும் அகற்றி, கொடுமையிலிருந்து உம் மக்களை விடுவித்தருளும். விஷாலின் தொண்டை வலியை சுகமாக்கியதுபோல, அதுபோன்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறவர்களைச் சுகமாக்கும். அற்புதங்களைச் செய்து எங்கள் ஜெபங்களுக்குப் பதில் அருளுவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.