அன்பானவர்களே, இன்றைக்கு, "ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை" (ஏசாயா 49:15) என்ற தேவனுடைய அருமையான வாக்குத்தத்தத்தைத் தியானிப்போம். எவ்வளவு ஆறுதலான நிச்சயத்தை ஆண்டவர் தருகிறார்! தாயின் அன்பு, மேலான பாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனாலும், தேவன், ஒரு தாய், தன் பிள்ளையை மறந்தாலும், அவர் தம் பிள்ளைகளை ஒருபோதும் மறப்பதில்லை என்று கூறுகிறார். அவரது அன்பு, எந்த மனுஷ அன்பைக் காட்டிலும் சிறந்ததாக, ஆழமானதாக, உண்மையானதாக இருக்கிறது.
தன் இரண்டு வயது மகனுடன் வாடகைக் கார் ஒன்றில் பயணித்த ஒரு தாயைப் பற்றிய செய்தியைப் பார்த்தேன். அவள் போக இடத்தை அடைந்ததும், இறங்கிக் கொண்டாள்; அடுத்தப் பயணி ஏறினார். சிறிது நேரம் கழித்து, அந்த கார் ஓட்டுநருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் பேசிய பெண், "நீங்கள் கார் ஓட்டுநரா?" என்று கேட்டார். அவர், "ஆம்," என்று பதில் கூறியதும், அந்தப் பெண், "காரின் பின் இருக்கையில் இரண்டு வயது பையன் இருக்கிறானா? அவனை காரில் விட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்," என்று கூறினாள். குழந்தையின் அருகில் அமர்ந்திருந்த பயணி, குழந்தையை காரிலேயே இருப்பதை உறுதி செய்தார். அந்தத் தாய், தன் குழந்தையை உடனே திரும்ப அழைத்து வந்துவிடுமாறு ஓட்டுநரிடம் வேண்டிக்கொண்டாள். இந்தச் சம்பவம், அன்பான பெற்றோரும், அவர்கள் பொறுப்புகளினாலும் கவலைகளாலும் அழுத்தப்படும்போது காரியங்களை மறந்துபோகலாம் என்பதைக் காட்டுகிறது. தேவன் ஒருபோதும் எதற்குள்ளும் ஆழ்ந்துபோகமாட்டார். அவர் ஒருபோதும் தம் பிள்ளைகளை காணாமல் இருக்கமாட்டார். நொடிப்பொழுதும் பார்வையை விலக்கமாட்டார். கர்த்தம் தம் உள்ளங்கைகளில் உங்களை வரைந்திருக்கிறார். அவர் உங்கள் வாழ்க்கையைக் குறித்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். உங்கள் தேவைகள், போராட்டங்கள், உங்கள் எதிர்காலம், நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் அறிந்திருக்கிறார். அவர் மாறாத கவனத்தோடும் அக்கறையோடும் உங்களைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார்.
ஒருவேளை இன்று நீங்கள் தனிமையாக, மறக்கப்பட்டதாக, புண்பட்டதாக, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக எண்ணலாம். யாருக்கும் உங்கள் வேதனை தெரியாதென்றும், யாரும் உங்கள் சூழ்நிலையை புரிந்துகொள்ளவில்லையென்றும் நினைக்கலாம். ஆனால், ஆண்டவர் அதை அறிவார். அவர் உங்கள் கண்ணீர் யாவற்றையும் பார்க்கிறார்; உங்கள் வேண்டுதலுக்குச் செவிகொடுக்கிறார்; நீங்கள் சுமக்கும் பாரத்தைப் புரிந்திருக்கிறார். ஆகவே, இன்று இயேசுவை சார்ந்துகொள்ளுங்கள். அன்பான தாய் தன் குழந்தையைத் தேற்றுவதுபோல அவர் உங்களைத் தேற்றுவார். உங்கள் பலவீனத்தில் உங்களைப் பலப்படுத்துவார்; சவாலான தருணங்களில் உங்களை வழிநடத்துவார்; உங்கள் தேவைகள் யாவற்றையும் அருளிச்செய்வார். நீங்கள் அவருக்கு அருமையானவர்; அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். திடன்கொள்ளுங்கள். உங்களைச் சிருஷ்டித்த தேவன் உங்களை நினைவுகூருகிறார்; உங்களை விசாரிக்கிறார்; வாழ்வின் எல்லா நிலையின் வழியாகவும் உங்களை நடத்துகிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்க்கையில் விளங்கும் உம் கிருபைக்காகவும் மாறாத கரிசனைக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் தனிமையாக, மறக்கப்பட்டதாக, அதைரியமாக உணரும்போதெல்லாம் நீர் எப்போதும் என்னோடிருக்கிறீர் என்பதையும் ஒருபோதும் என்னை விட்டு விலகமாட்டீர் என்பதையும் நினைவுப்படுத்தும். ஆண்டவரே, வேதனையின்வேளையில் என் இருதயத்தை தேற்றும்; பலவீனத்தின் தருணங்களில் என் விசுவாசத்தைப் பலப்படுத்தும். உம் பரிபூரண சித்தத்தின்படி ஏற்றவேளையில் என் வாழ்வின் தேவைகள் எல்லாவற்றையும் அருளிச்செய்யும். அனுதினமும் உம் சமுகத்தை நம்பவும், எந்தப் பயமும் சந்தேகமும் இல்லாமல் உம் நித்திய அன்பில் இளைப்பாறவும் எனக்கு உதவி செய்யும். நீர் எப்போதும் என்னோடிருக்கிறீர் என்றும் ஒருபோதும் என்னைக் கைவிடமாட்டீர் என்று விசுவாசித்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


