எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்றைய வாக்குத்தத்தம், "கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்" (எபிரெயர் 13:6) என்று கூறுகிறது. இது எவ்வளவு ஆசீர்வாதமான சிறந்த வாழ்வு! அன்பானவர்களே, எப்போதும் கர்த்தரை உங்களுடன் வைத்திருக்கவேண்டும். தாவீது, "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்" என்று கூறுகிறான். ஆம், உங்கள் அனுபவமும் அதுவாகவே இருக்கவேண்டும். கர்த்தர் உங்களோடு வசிக்கவேண்டும். அவர் எப்போதும் உங்கள் சகாயராயிருக்கவேண்டும். வேதம், "கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்" (சங்கீதம் 28:7) என்றும், "கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்" (சங்கீதம் 9:1) என்றும் கூறுகிறது. தகப்பனே, என் முழு இருதயத்துடனும் நான் உம்மை துதிப்பேன்.

அன்பானவர்களே, வேதம், "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே" (சங்கீதம் 103:1,2) என்று கூறுகிறது. ஆகவே, வேதத்தில், "நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்," என்று எழுதப்பட்டிருக்கிறபடி நாம் கர்த்தருக்குள் களிகூரவேண்டும் (சங்கீதம் 33:1). சங்கீதம், "நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்," என்றும் கூறுகிறது (சங்கீதம் 40:3). தேவனுடைய வார்த்தையை நாம் வாசித்தால் எவ்வளவு அருமையாக இருக்கிறது. நம் இரட்சகரின் இனிய சமுகத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். சிலநேரங்களில் நான் தனியே இருப்பேன். அப்போது, படுத்துக்கொண்டு, ஆண்டவருடன் பேசுவேன்; தேவனுடைய வார்த்தையை வாசிப்பேன்; கர்த்தருக்குள் களிகூருவேன்.

அருமையானவர்களே, உங்களுக்கு வாழ்வில் அப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறதா? ஆண்டவருடன் நேரம் செலவிடுவேன் என்று இப்போதே தீர்மானித்திடுங்கள். அவரது வார்த்தையை வாசியுங்கள்; அவரது சமுகத்தில் ஆனந்தமடையுங்கள். இன்றைக்கு இந்த அனுபவத்தைக் கொடுத்து ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்:
எங்கள் தகப்பனே, அற்புதமான உம் சமுகத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் வார்த்தையை வாசிக்கிற, உம்மை துதிப்பதற்கு நேரம் செலவழிக்கிற  ஒவ்வொரு பிள்ளைக்கும் இந்த மகத்தான அனுபவத்தை அளித்திடும். பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தை அவர்கள் அனுபவிக்கட்டும்; அவரை தங்கள் துணையாளராக, பெலனாக, கேடகமாக அறிந்துகொள்ளட்டும். அவர்கள் இருதயம் எப்போதும் உமக்குள் களிகூரட்டும். உம் சமுகத்தில் சந்தோஷத்தாலும், துதியாலும் அவர்கள் இல்லம் நிரம்புவதாக. உம் நன்மைகளை அவர்கள் ஒருபோதும் மறந்துபோகாதிருக்கவும், தங்கள் முழு இருதயத்துடனும் உம் பரிசுத்த நாமத்தை தொடர்ந்து துதிக்கவும் உதவும். தகப்பனே, இவர்களுடன் இருந்தருளும்; அனுதினமும் உம் இனிய சமுகத்தால் அவர்களை ஆசீர்வதிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.