அன்பானவர்களே, இன்றைய தினம் கர்த்தரின் சந்தோஷத்தால் நீங்கள் நிரப்பப்பட போகிறீர்கள். ஆம், ஆண்டவர் அப்படியே இன்றைக்கு வாக்குக்கொடுக்கிறார். "தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்" (ஆதியாகமம் 21:6) என்று வேதம் கூறுகிறது. அவ்வண்ணமே, ஆண்டவர் உங்களை தம் நகைப்பினாலும் சந்தோஷத்தினாலும் இன்று நிரப்புவார். குழந்தைகள், ஏதாவது ஒன்றை முதன்முதலாக பார்க்கும்போது எப்படி சிரிக்கின்றன என்பதை கவனித்திருக்கிறீர்களா? எங்கள் குட்டி மகன் ஜேடன் ஒவ்வொருமுறை மின்விசிறியைப் பார்க்கும்போதும் மிகவும் ஆச்சரியப்பட்டு சிரிப்பான்; அடக்கமாட்டாமல் சிரிப்பான்.
ஒருநாள், நாங்கள் எல்லோரும் காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஜேடன் முன் இருக்கையில் என் மடியில் உட்கார்ந்திருந்தான். நான், என் கணவர், எங்கள் மகள் கேட்டி எல்லாரும் குளிர்கண்ணாடி (கூலிங்கிளாஸ்) அணிந்திருந்தோம். திடீரென ஜேடன் எங்களைப் பார்த்தான். மிகுந்த ஆச்சரியமடைந்தான். சிரிக்க ஆரம்பித்தான்; சிரித்துக்கொண்டே இருந்தான். அந்தச் சிரிப்பில் வெகுளித்தன்மை இருந்தது. அவ்வாறே, தேவனும், உங்கள் வாழ்க்கையில் சிறிய காரியங்களிலும் நீங்கள் சந்தோஷத்தை காணும்படி இன்றைக்கு நகைப்பினால் நிரப்புவார். ஆண்டவரின் சமாதானத்தாலும் சந்தோஷத்தாலும் நீங்கள் நிரப்பப்படப் போகிறீர்கள்.
நம்மை வருத்தப்படுத்தும் பல விஷயங்கள் உள்ள உலகில் வாழ்கிறோம். நம் தேர்வுகளைக் குறித்து, எதிர்காலத்தைக் குறித்து, பிள்ளைகளைக் குறித்து கவலைப்படுகிறோம். ஆண்டவர், இன்று நம்மை தம் சமாதானத்தினால் நிறைத்து, நகைத்துக்கொண்டே இருக்கப்பண்ணுவார். நான் கல்லூரியில் இருந்தபோது ஒருநாள், என்னோடு பணிபுரிகிறவர்களுள் ஒருவர், "மேடம், நீங்கள் எப்போதும் எப்படி மகிழ்ச்சியாக, புன்னகைத்துக்கொண்டே இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். நான், "சகோதரி, எனக்குத் தெரியாது. ஆனால், ஆண்டவரின் சந்தோஷம் எனக்குள் இருக்கிறது," என்று கூறினேன். அதேவண்ணம், இன்று கர்த்தரின் சந்தோஷம் உங்களை நிரப்பி உங்கள் வாழ்க்கையைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும்.
ஜெபம்:
பரம தகப்பனே, நீர் எனக்குள் வைத்திருக்கும் தெய்வீக சந்தோஷத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்று என் இருதயத்தை உம் நகைப்பினாலும் சமாதானத்தினாலும் நிரப்பும். என் மனதிலிருந்து எல்லா கவலையையும், பயத்தையும், பாரத்தையும் அகற்றி, சிறிய காரியங்களிலும் சந்தோஷத்தை காண்பதற்கு எனக்கு உதவி செய்யும். உம் சந்தோஷம் என்னிலும் என் வழியாகவும் நிரம்பி வழிவதாக. உம் பரிபூரண சமாதானம் எப்போதும் என் உள்ளத்தைக் காத்துக்கொள்ளட்டும். நன்றியோடு உம் வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொண்டு இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


