அன்பானவர்களே, இன்று துக்கத்தோடு இருக்கிறீர்களா? எங்கு சென்றாலும் எல்லா இடங்களிலும் தோல்வியையே காண்கிறீர்களா? மருத்துவர்களே கைவிட்டுவிட்ட கொடிய வியாதியால் அவதிப்படுகிறீர்களா? ஆம், ஆண்டவர் தம் மகிழ்ச்சியினால் உங்கள் துக்கங்கள் எல்லாவற்றையும் மூடுவதாகக் கூறுகிறார். இந்த உலகத்தில் வாழும்போது, துக்கங்களும் உபத்திரவங்களும் இருக்கும். ஒவ்வொரு விசுவாசியும் சவால்களின் வழியாக கடந்து செல்ல நேரிடும். ஆனால், கர்த்தர் உபத்திரவ காலத்தில் உங்களை தம் மகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவதாக வாக்குப்பண்ணுகிறார். ஆம், தேவன் அருளும் பெரிதான சமாதானம் இன்றைக்கு உங்களை நிரப்பும்.

அதையே வேதம், "நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்" (ஏசாயா 35:10) என்று கூறுகிறது. உங்கள் வாழ்வில் துக்கம் காணப்பட்டாலும், கர்த்தரின் மகிழ்ச்சி இன்று உங்களை நிரப்பும். ஆம், இந்த உலகத்தில் நாம் சுமந்து செல்ல சிலுவை ஒன்று உண்டு. பாரங்கள், தியாகங்கள் இவற்றோடு நீங்கள் சிந்திய கண்ணீரையும் தேவன் துடைத்து உங்களை மகிழ்ச்சியினால் நிரப்புவார். யோபுவின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். அவன் உண்மையுள்ள மனுஷனாயிருந்தான்; ஆனாலும், எல்லாவித உபத்திரவங்களையும் சந்திக்க நேர்ந்தது. குடும்பத்தை, ஆரோக்கியத்தை, நண்பர்களின் ஆதரவை இழந்தான்.

இன்று நீங்களும் அவ்விதமாக, "ஆண்டவரே, நான் நம்பிய யாவரும் என்னை கைவிட்டனர். என் வாழ்க்கை துக்கத்தினால் நிறைந்திருக்கிறது," என்று கூறிக்கொண்டிருக்கலாம். ஆனால், ஆண்டவர், தம் மகிழ்ச்சி இன்றைக்கு உங்களை நிரப்பும் என்று வாக்குக்கொடுக்கிறார். அவர் உங்களை வேதனையில் விடமாட்டார். உங்கள் துக்கத்தை சந்தோஷமாகவும் வெட்கத்தை சமாதானமாகவும் மாற்றுவார். இன்றைக்கு இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, அவரது மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்வில் எல்லா துக்கத்தையும், எல்லா கண்ணீரையும், எல்லா பாரத்தையும் நீர் காண்கிறீர். உபத்திரவங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு நான் பெலவீனமாக உணரும் தருணங்களில் என்னை உம் சமாதானத்தினால் நிரப்பும். என் துக்கத்துக்குப் பதிலாக உம் சந்தோஷத்தையும் என் வெட்கத்துக்குப் பதிலாக ஆனந்தத்தையும் அருளிச்செய்யும். நான் வழியைக் காணாதவேளையிலும் உம் வாக்குத்தத்தத்தை நம்ப உதவி செய்யும். என் இருதயத்தை குணமாக்கும்; நான் இழந்தவற்றை திரும்ப தந்தருளும். என் பாரங்களைச் சுமந்து, சகிக்கும்படி என்னை பெலப்படுத்தும். உம் சந்தோஷம் என்னைத் தொடரட்டும்; என்னை நிரப்பட்டும். என் நல்ல நாட்கள் உம்மிடமிருந்து வருகின்றன என்று விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.