அன்பானவர்களே, இன்றைக்கு இயேசுவை பூரணமாக அனுபவிப்போம். எல்லா ஆசீர்வாதங்களுக்கும் மேலாக அவர் நமக்கு திருப்தியை அளிக்கிறார். இன்றைக்கு நமக்குள் இருந்து, நமக்கு, "சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து" (1 பேதுரு 1:8) என்று வாக்குக் கொடுக்கிறார். ஆம், இவ்வகையான சந்தோஷத்தை நமக்குள் ஊற்றுவதற்கு அவர் விரும்புகிறார். இந்த உலகில் அப்படிப்பட்ட சந்தோஷத்தை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? நீங்கள் கைவிடப்பட்டிருக்கிறீர்களா அல்லது இருதயத்தில் எந்த சந்தோஷமும், பூரண மகிழ்ச்சியும் இல்லாமல் வெற்று நம்பிக்கையுடன் நாள்களை கழித்துப்போடுகிறீர்களா? அன்பானவர்களே, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமான பெரிய சந்தோஷத்திற்கான வழி இன்று ஆண்டவரால் திறக்கப்படுகிறது.
இந்த வசனம், "அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து" என்று கூறுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் ஜெப கோபுரத்திற்கு நான் சென்றிருந்தபோது, ஓர் இளைஞன் என்னை சந்திக்க வந்தான். "அண்ணா, நான் UTurn குழுவில் சேர விரும்புகிறேன். வாலிபர் ஊழியத்தில் பங்கு பெற விரும்புகிறேன். நான் ஓவியம் வரைவேன்; கிராபிக்ஸ் டிசைன் செய்வேன். ஆகவே, உதவி செய்ய விரும்புகிறேன்," என்று கூறினான். நான், "அது மிகப்பெரிய உதவி," என்று கூறி, அவனுக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன். நான் ஜெபித்தபோது, பரிசுத்த ஆவியானவர் அசைவாடினார்; அவனை நிரப்பினார். ஆண்டவருடைய பிரசன்னம் இருதயத்தை நிரப்ப, சந்தோஷத்தினால் நிறைந்து அவன் அழ ஆரம்பித்தான். அவனால் நிறுத்த முடியவில்லை; அடக்கிக்கொள்ளவும் முடியவில்லை.
நாங்கள் மற்ற எல்லா மக்களையும் சந்தித்தோம்; அவர்கள் சென்ற பிறகும் அவன் முழங்காலிட்டு, அழுதபடி தேவனை துதித்துக்கொண்டிருந்தான். தேவனுடைய பிரசன்னத்தை அவனால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. தேவன், இன்றைக்கு அப்படிப்பட்ட எல்லையற்ற சந்தோஷத்தோடு நீங்கள் வாழவேண்டும் என்று விரும்புகிறார். அப்படிப்பட்ட சந்தோஷமுள்ள இருதயம், ஒருபோதும் பயப்படாது; ஒன்றைக் குறித்தும் கவலைப்படாது. தேவன், தாமே உங்களுக்குப் போதுமானவராக இருப்பார். இந்த இருதயத்திற்காக அவரை துதித்து பெற்றுக்கொள்வோமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் உம்மை பூரணமாய் அனுபவிக்க வாஞ்சிக்கிறேன். உம்முடைய பிரசன்னத்தால் என்னை நிரப்பும். உம்மை நம்புவதாலும் விசுவாசிப்பதாலும் மட்டுமே கிடைக்கக்கூடிய சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமான சந்தோஷத்தால் என் இருதயம் நிரம்பி வழியட்டும். சந்தோஷம் தூரமாக இருந்த, நாள் கழிந்தால் போதும் என்று இருந்த காலம் இருந்ததை அறிக்கையிடுகிறேன். ஆனாலும் ஆண்டவரே, இன்றைக்கு நீர் எனக்கு புதிய ஒரு வழியை திறக்கிறீர்; ஆழமாக மகிழ்ந்து களிகூரும்படி செய்கிறீர். இந்த சந்தோஷம் என் ஆத்துமாவின் மூலைகளை நிறைத்து, எல்லா பயங்களையும் போக்கட்டும். துக்கத்தை உம்முடைய அன்பின் பிரசன்னம் மாற்றட்டும். என் வாழ்வில் நீரே போதுமானவராக இருப்பதற்காக ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.