அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம் 119:105) என்ற வசனத்தை தியானிக்கப் போகிறோம். நம் பாதைக்கு தேவனுடைய வசனம் வெளிச்சத்தைத் தருகிறது. நாம் என்ன செய்யவேண்டும்? வேதம், "கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக" (கொலோசெயர் 3:16) என்று கூறுகிறது. அருமையான தேவ பிள்ளையே, தேவனுடைய வார்த்தையை வாசிப்பதற்கு தினமும் எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறீர்கள்? தேவனுடைய வார்த்தையை வாசிப்பதோடு, அதை தியானிக்கவும் வேண்டும். வேதம், "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்" (யோவான் 14:23) என்றும் கூறுகிறது. தேவனாகிய கர்த்தரும் இயேசு கிறிஸ்துவும் நம்மோடு தங்கியிருப்பது எவ்வளவு பெரிய காரியம்.
தேவனுடைய வசனத்தை எவ்வளவு அதிகமாக வாசிக்கிறீர்களோ, அந்த அளவு அதிகமாக தேவ சமுகத்தை வல்லமையாக உணர முடியும். அத்துடன், வேதத்தில், "சத்தியவசனத்திலும்...துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்...விளங்கப்பண்ணுகிறோம்" (2 கொரிந்தியர் 6:7,10) என்றும் வாசிக்கிறோம். நீங்கள் துக்கத்தோடு இருக்கலாம். ஆனால், தேவனுடைய வசனத்தை வாசிப்பதால் களிகூருவீர்கள். தேவ பிள்ளையே, தேவனுடைய வார்த்தைக்கு அவ்வளவு வல்லமை உண்டு. தேவனுடைய வசனத்தை வாசிப்பதை எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். தினந்தோறும் காலையில் உங்களால் முடிந்த அளவு அதிகமாக வாசிக்கவேண்டும். தேவனுடைய வசனத்தை நீங்கள் புசிக்கவேண்டும்; அதன் வாயிலாக, ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வேதம், "இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்" (யோவான் 16:24) என்று கூறுகிறது. தேவனுடைய வார்த்தையை வாசிப்பது மட்டுமல்லாமல், நீங்கள் ஆண்டவரிடம், "ஆண்டவரே, நான் எதையெல்லாம் வாசிக்கிறேனோ அந்த ஆசீர்வாதத்தை எனக்குத் தந்தருளும்," என்று கேட்கவும் வேண்டும். ஆண்டவர் இரட்டிப்பான பங்கை தந்தருள்வார். நீங்கள் எவற்றையெல்லாம் கேட்கிறீர்களோ, அவற்றையெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்; உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும். "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா" (லூக்கா 11:13) என்று வேதம் கூறுகிறது. அன்பான தேவ பிள்ளையே, தேவனுடைய வசனத்தை வாசிப்பதால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வந்து சேரும். தினமும் இதைச் செய்வதற்கு நம் வாழ்க்கையை அர்ப்பணிப்போமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நன்றியறிதலும் தாழ்மையுமுள்ள இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். என் வாழ்க்கையை வழிநடத்த உம்முடைய விலையேறப்பெற்ற வார்த்தையைக் கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. உம் வசனத்தை தினமும் வாசித்து தியானிக்க எனக்கு உதவி செய்யும். உம் வசனம் எல்லா ஞானத்திலும் அதிகமாய் எனக்குள் தங்கியிருப்பதாக. உம் சத்தியத்தால் என் இருதயத்தை நிறைத்து, அதற்கேற்ப வாழ்வதற்கு உதவி செய்யும். விசுவாசத்தில் உம்மிடம் கேட்கவும், உம் வாக்குத்தத்தங்களை நம்பவும் எனக்குக் கற்றுத்தாரும். நான் உம்மை முழு இருதயத்தோடும் தேடுகிறபடியால் உம் பரிசுத்த ஆவியால் என்னை நிரப்புவீராக. என் வாழ்க்கை எப்போது உம் வசனத்தில் வேரூன்றி இருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.