அன்பானவர்களே, வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் உடனிருந்து வழிநடத்துவதற்காக தேவன் நம்மோடு கூட இருக்கிறார். கவலைப்படாதிருங்கள். அவர் ஏற்கனவே எல்லாவற்றையும் திட்டம்பண்ணிவிட்டார். இன்றைக்கும், "நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்" (சங்கீதம் 118:15) என்ற வசனம் வாக்குத்தத்தமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. நீதிமானின் கூடாரங்கள் எப்படியிருக்கும் என்பதை இது காட்டுகிறது. ஆனாலும் பலவேளைகளில், "என் பிள்ளைக்கு திருமணம் நடக்கவில்லை", "கடன் ஏறிக்கொண்டே போகிறது", "வியாதி எங்களை வாட்டுகிறது", என்றோ, "எங்கள் வீட்டுக்குள் அடிமைத்தனம் புகுந்துவிட்டது" என்றோ நாம் சந்திக்கும் பிரச்னைகளை குறித்தே இன்றும் பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லா பிரச்னைகளோடும் போராடி, பயத்தால் நிரம்பியிருப்பதால் வீடே இருளாகக் காணப்படலாம். ஆனாலும், அன்பானவர்களே, இவை எல்லாவற்றையும் மாற்றுவதற்காகவே தேவன் இருக்கிறார்.

இந்த வசனத்தை நாம் சுதந்தரித்து இரட்சிப்பின், ஜெயத்தின் கெம்பீர சத்தத்தை மறுபடியும் நம் வீட்டில் கேட்கப்பண்ணுவோம். அபியா, யூதாவின் ராஜாவாக இருந்தபோது, இஸ்ரவேல் ராஜாவாக இருந்த யெரொபெயாமின் எட்டு லட்சம்பேர் கொண்ட படையை தன் நான்கு லட்சம்பேர் கொண்ட படையால் எதிர்த்தான். யெரொபெயாம் கர்த்தரை விட்டுவிலகியிருந்தபோது, அபியா, "எங்களுக்கோ கர்த்தரே தேவன்" என்று அறிக்கை பண்ணினான். கர்த்தரின் ஆசாரியரை எக்காளங்களை ஊதும்படி அவன் முன்னே நிறுத்தினான். யுத்தம் தொடங்கியபோது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். யுக்திகளைக் காட்டிலும், யோசனையை காட்டிலும், வீரத்தைக் காட்டிலும் தேவனுடைய வல்லமையை அவர்கள் நம்பினார்கள். யெரொபெயாமின் சேனை பின்னிருந்து அவர்களை வளைந்துகொண்டபோது, தோல்வி உறுதியாகியிருந்த நிலையில், அவர்கள் சத்தத்தை உயர்த்தி கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர், அவர்களுக்கு ஜெயத்தைக் கொடுத்தார். கர்த்தரே அவர்களுக்காக யுத்தம் செய்தபடியால், கொஞ்சம்பேர் அநேகரை ஜெயித்தார்கள்.

உபத்திரவங்கள் சூழ்ந்திருந்தாலும் நீதிமானின் கூடாரங்கள் இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தால் நிறைந்திருக்கும். காருண்யா கிறிஸ்தவ பள்ளியின் விடுதிக்கு சென்றது நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு தளத்திலும் மாணவ மாணவியர் கைகளில் கிட்டார் என்ற இசைக்கருவியை வைத்து, துதிப்பாடல்களை பாடி ஆண்டவரை உயர்த்திக்கொண்டிருந்தார்கள். விடுதி முழுவதுமே இரட்சிப்பின் கெம்பீர சத்தம் எதிரொலித்தது. அன்பானவர்களே, உங்கள் வீடும் அப்படியே நிறைந்திருக்கட்டும். கவலையோ, பயமோ, தோல்வியோ இருக்காது; துதி, விசுவாசம், ஜெயத்தின் சத்தம் மட்டுமே ஒலிக்கும். ஆண்டவரின் பிரசன்னத்தை நம் இல்லங்களுக்குள் இன்று வரவேற்போம். நம் வாழ்வின் எல்லா மூலைகளிலும் அவரது ஜெயம் முழங்கட்டும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்வின் எல்லா தருணங்களிலும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் அடிகளை நீர் ஏற்கனவே திட்டம் பண்ணியிருக்கிறீர் என்றும் எனக்கு ஜெயத்தை ஆயத்தம்பண்ணியிருக்கிறீர் என்றும் முழுவதும் நம்புகிறேன். ஆண்டவரே, என் இல்லத்தில் உமது சமாதானம், சந்தோஷம், பிரசன்னம் நிறைந்திருப்பதாக. பயம், கவலை இவற்றின் சத்தத்தை, துதியின் கெம்பீர பாடல் மேற்கொள்ளட்டும். என் பெலவீனத்தை உம் பெலனும், நீர் அளிக்கும் வெற்றியின் கண்ணீரும் நிரப்புவதாக. என் இல்லம் உம் மேலான விசுவாசத்தினால், ஸ்தோத்திர கீதங்களால் நிரம்பட்டும். என் பெலத்தை அல்ல; உம் பலத்த கரத்தையே நான் சார்ந்திருக்க எனக்குக் கற்றுக்கொடும். ஆண்டவரே, என் வீடு இடைவிடாத சந்தோஷத்தால், ஓயாத ஜெயத்தால் நிரம்பியிருக்கவேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தால் ஜெபிக்கிறேன், ஆமென்.