பிரியமானவர்களே, வெளிச்சத்தாலும் சுகத்தாலும் நிறைந்த வாழ்க்கை ஆண்டவர் உங்களுக்குத் தருவார். உங்கள் வாழ்வில் அவரது வெளிச்சம் நிரம்பியிருக்கும். எல்லாம் இருளாகத் தெரிவதால், சுகமில்லாததால் நீங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறீர்களா? ஆண்டவரே, உங்கள் வெளிச்சமாயிருக்கிறார். தேவன் உங்கள் ஒளியாயிருக்கிறார். ஆண்டவரே, உங்கள் ஆரோக்கியமாயிருக்கிறார். அவரே அதை உங்களுக்குத் தந்தருளுவார். வேதம், "விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்" (ஏசாயா 58:8) என்று கூறுகிறது. ஆண்டவர், இன்றைக்கு இந்த ஆசீர்வாதத்தை உங்களுக்குத் தருவாராக. தகப்பனே, உம் பிள்ளைகளுக்கு வெளிச்சம் நிறைந்த வாழ்க்கையை கொடுத்தருளும். வியாதியின் பிடியிலிருந்து உம் பிள்ளைகளை எழுப்பியருளும். கடனின் பிடியிலிருந்து அவர்களை எழுப்பியருளும். எல்லா இக்கட்டும், முறிவும், பொல்லாத மக்களால் உண்டான இடுக்கண்களின் நாட்களும், வீட்டில் உள்ளவர்களால், பொல்லாத உறவினர்களால், குடும்பத்தினரால் உண்டான பயங்கரங்களும், தீமைகளும் முடிந்துபோவதாக. சுகவாழ்வு அவர்களுக்கு துளிர்ப்பதாக. விடுதலையை நாங்கள் கட்டளையிடுகிறோம். எல்லாமும் மறுரூபமாகட்டும். சந்தோஷத்தின் நாட்கள் வரட்டும். இயேசுவே, இதைச் செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்.
பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பார். "தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்" (ஆதியாகமம் 1:3,4) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் இருளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா? இயேசுவின் நாமத்தில், வெளிச்சம் உண்டாவதாக என்று கட்டளையிடுகிறேன். இருள் மறைந்துபோகட்டும். வெளிச்சம் உண்டாகட்டும். வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்.
ஆண்டவர், "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" (யோவான் 8:12) என்று கூறுகிறார். ஆண்டவர்தாமே உங்களுக்கு பரிசுத்தத்தையும், ஜீவ வெளிச்சத்தை பெற்றுக்கொள்ளும் கிருபையையும் தருவாராக. வேதம், "தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்" (சங்கீதம் 18:28) என்று கூறுகிறது. ஆண்டவரே, இவர்கள் விளக்கை, பரிசுத்த விளக்கை ஏற்றுவீராக. ஜீவ வெளிச்சம் இவர்களுக்குள் பிரகாசிக்கட்டும். எல்லா இருளும் வெளிச்சமாகட்டும்.
வேதம், "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம் 119:105) என்று கூறுகிறது. தகப்பனே, உம் வசனத்தை அவர்களுக்குத் தந்தருளும். உம் வசனத்தின் வாயிலாக பேசும். "அப்பா, நான் இந்த வார்த்தையைப் பற்றிக்கொள்கிறேன்." இந்தத் தருணத்தில் ஆண்டவர் தம் கிருபையைத் தருவார்; பாதையில் வெளிச்சத்தை அருளுவார். பாவத்தின், இருளின் எல்லா கட்டுகளிலிருந்தும் அவர் உங்களை விடுவிப்பார். உங்கள் கண்களுக்கு அவர் வெளிச்சத்தைத் தந்து, நீங்கள் நடக்கவேண்டிய வழியைப் போதிப்பார். உதிக்கிற உங்கள் ஒளிக்கு ஜாதிகளும், உங்கள் வெளிச்சத்தை நோக்கி ராஜாக்களும் வருவார்கள் என்று வேதம் கூறுகிறது (ஏசாயா 60:1,3).
உங்கள் வாழ்வில் அது நடக்கவேண்டுமென இயேசுவின் நாமத்தில் நான் கட்டளை கொடுக்கிறேன். உங்கள் கண்கள் வெளிச்சமாகி, பரிசுத்தத்தால் நிரம்பியிருக்கட்டும். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது (மத்தேயு 6:22). அப்படிப்பட்ட வெளிச்சத்தால் ஆண்டவர் உங்களை நிரப்புவாராக. நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் (மத்தேயு 5:14). உங்கள் வாழ்க்கை தம் மகிமைக்காய் பிரகாசிக்கும்படி ஆண்டவர் தம் வெளிச்சத்தால் உங்களை நிரப்புவாராக. வேதம், "நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்" (எரேமியா 30:17) என்று கூறுகிறது. இதே காரணத்திற்காக, இயேசு தம்மையே சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார்; தம் சரீரம் காயப்பட அனுமதித்தார். "அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்," (ஏசாயா 53:5) என்று வேதம் கூறுகிறது. இப்போது, இயேசுவின் நாமத்தால் அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமாக்கப்படவேண்டும் என்று கட்டளையிடுகிறேன். இயேசுவின் நாமத்தினால் கிறிஸ்துவின் ஜீவன் உங்களுக்குள் வருவதாக. ஆண்டவரே, எல்லா இருளும் வெளிச்சமாவதாக. வியாதிகள், பெவீனங்கள், குறைவுகள் எல்லாம் அகலுவதாக. சுகம் வருவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், கிறிஸ்துவின் ஜீவன் அவர்களுக்குள் வரட்டும். ஆண்டவரே, ஆஸ்துமா சுகமாகட்டும். இன்றே அந்த வியாதி மறைந்துபோகட்டும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்க்கையை உம் வெளிச்சத்தாலும் சுகத்தாலும் நிரப்பியருளும். எல்லா இருளையும், வியாதியையும், கடனையும், பாவத்தையும், பயத்தையும், கட்டுகளையும் என் வாழ்விலிருந்து அகற்றும். உம் வசனம் என் கால்களுக்கு தீபமாய் விளங்கி, என்னை பாதையில் வழிநடத்தட்டும். உம் வெளிச்சத்திலும் பரிசுத்தத்திலும் நான் தொடர்ந்து நடக்க உதவும். கிறிஸ்துவின் ஜீவன் என்னை நிரப்பி, என் சரீரத்தில் ஆரோக்கியத்தையும், என் இருதயத்திற்கு சமாதானத்தையும் அருளட்டும். எல்லா காயத்தையும் ஆற்றி, ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகளால் அவதிப்படுகிற யாவரையும் பெலப்படுத்தும். இக்கட்டான நாட்கள் சந்தோஷமானவையாக மாறட்டும். உம் வெளிச்சம் என் வாழ்க்கையில் பிரகாசிக்கட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


