அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்" (ஆதியாகமம் 22:14) என்பதாகும். கர்த்தருடைய பர்வதத்தில் அது அருளப்படும். ஆம், கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு எல்லா ஆசீர்வாதங்களை அருளப்போகிறார். எவற்றுக்காகவெல்லாம் நீர் காத்திருக்கிறீர்களோ அவை எல்லாவற்றையும் கர்த்தர் உங்களுக்கு அருளப்போகிறார். அளவற்றவிதத்தில் உங்களுக்கு அருளி கனப்படுத்துமாறு அவர் செயல்படுவார். எந்த இடத்தில் நீங்கள் கீழாக்கப்பட்டீர்களோ அதே இடத்தில் கர்த்தர் உங்களைக் கனப்படுத்துவார். எந்த இடத்தில் மக்கள் உங்களை வேடிக்கையாக்கினார்களோ, பரியாசம் பண்ணினார்களோ, அதே இடத்தில் கர்த்தர் உங்களைக் கனப்படுத்துவார்.

ஆம், எல்லாமே உங்களுக்கு விரோதமாக நடக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். சிலவேளைகளில் நாம் யாரையாவது அதிகம் நம்பியிருப்போம்; ஆனால், அவர்கள் நம்மை மோசமாக கைவிட்டிருப்பார்கள். நீங்கள் புண்படுத்தப்பட்டதாகவோ, ஏமாற்றப்பட்டதாகவோ, உங்களுக்குச் சாதகமாக எதுவுமே நடக்கவில்லை என்றோ நினைக்கலாம். அதே நபர் முன்னே நீங்கள் கனப்படும்வண்ணம் ஆண்டவர் உங்களுக்கு ஆசீர்வாதங்களை அருளிச்செய்வார். நான் பள்ளியில் படித்தபோது, என்னுடைய ஓர் ஆசிரியையிடம், "டீச்சர், அலுவலகத்தில் இருக்கும் இவர் எப்போதும் என்னை வைத்து வேடிக்கை செய்கிறார். எந்த உதவியும் செய்யமாட்டேன் என்கிறார். இது என்னை அதிகமாய் புண்படுத்துகிறது," என்று கூறியது நினைவில் உள்ளது. அந்த நேரத்தில், என் ஆசிரியை, எனக்கு மறக்காத ஒரு காரியத்தை நினைவுறுத்தினார்கள்.

அந்த ஆசிரியை, "உன் வாழ்க்கை ஒரு டிரைன் போன்றதாகும். நீ முன்னே சென்றுகொண்டே இருப்பாய். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நிலையம் வரைக்கும் மாத்திரமே வருவார்கள். அவர்கள் உன்னை நிறுத்தவும், கீழே தள்ளவும் முயற்சிப்பார்கள். ஆனால், நீ உயர்ந்த இடத்தை அடையும் வரைக்கும் தேவன் உனக்கானவற்றை கொடுத்துக்கொண்டே இருப்பார்," என்று கூறினார்கள். மக்கள் உன்னை கீழே தள்ள முயற்சிப்பார்கள். வளர விடாமல் தடுப்பார்கள். மகா உயரங்களை அடையவிடாமல் நிறுத்த முயற்சிப்பார்கள். ஆனாலும் ஆண்டவரின் அருட்கொடையால் நீங்கள் அவர்களைக் காட்டிலும் மகா உயரங்களை அடைவீர்கள்; அவர் உங்களைக் கனப்படுத்துவார். பத்து, பதினைந்து ஆண்டுகள் கடந்தும் இன்னும், "அவர்கள் உன் வாழ்க்கையின் இறுதி வரையில் வரமாட்டார்கள்," என்ற உண்மையை நினைவில் வைத்திருக்கிறேன். உங்களை விழத்தள்ளுவதற்கு அவர்கள் முயற்சிக்கலாம்; ஆனால் உங்களைத் தூக்கி விட தேவன் இருக்கிறார். கர்த்தருடைய பர்வதத்திலிருந்து இந்த அருட்கொடை சிறந்த ஆசீர்வாதமாக, நேரடியாக இயேசுவினிடமிருந்தே வந்து சேரும். ஆகவே, இன்று இதை இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கானவற்றை அருளுகிறவராகிய, என் யேகோவாயீரேவாகிய உம்மை நம்புகிறேன். நான் புண்படுத்தப்பட்ட, விழத்தள்ளப்பட்ட இடங்களை நீர் பார்க்கிறீர். ஆண்டவரே, அதே இடத்தில் எனக்கானவற்றை அருளிச்செய்து என்னை கனப்படுத்தும். மக்கள் என்னை நிறுத்த முயற்சிக்கும்போது நீர் உயர்த்துவீராக. நீர் எனக்காக திட்டம்பண்ணியுள்ள உயரமான ஸ்தலத்திற்கு என்னை எடுத்துச் செல்வீராக. உம்முடைய பரிசுத்த பர்வதத்திலிருந்து தெய்வீக அருட்கொடையை பெற்றுக்கொள்கிறேன் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.