அன்பானவர்களே, இன்று ஆண்டவர் தம் வெளிச்சத்தை நம்மீது பிரகாசிக்கப்பண்ணுவார். வேதம், "கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்?" (சங்கீதம் 27:1) என்று கூறுகிறது. கர்த்தரே நம் வெளிச்சமாயிருக்கிறார்; அவரே நமக்கு இரட்சிப்பை அருளுகிறார்; தம் ஆச்சரியமான, மகிமையான ஒளியினால் அவர் நம்மை மீட்கிறார். சிலவேளைகளில் இருள் நம்மை சூழ்ந்துகொள்கிறதல்லவா? சின்ன குழந்தை அறையில் தூங்கப்போகும்போது, விளக்கு அணைக்கப்பட்டிருந்தால், இருளைக் கண்டு பயந்துபோகும். அப்பாவோ, அம்மாவோ வந்து சிறிய விளக்கை எரியச் செய்தால், குழந்தை பயப்படாதிருக்கும். அதன்பிறகே அந்தக் குழந்தை சமாதானத்துடன் படுக்கச் செல்லும். அன்பானவர்களே, நம் நிலையும் அப்படிப்பட்டதாகவே இருக்கிறது.
நாம் வெளிச்சத்தைக் காணும்போது, இருளுக்குப் பயப்படாதிருப்போம். இயேசுவே வெளிச்சமாயிருக்கிறார்; நாம் அவரை நோக்கித் திரும்பவேண்டும். பரிசுத்த ஆவியின் வாயிலாக அவரது வெளிச்சம் நமக்குள் பிரகாசிக்கும்போது, எதினாலும் வெல்ல முடியாத தைரியத்தை நாம் பெறுவோம். தேவனின் இரட்சிப்பின் கரம் வந்து நம்மை மீட்கும். ஆகவே, எப்போதும் உங்கள் இருதயத்தை அந்த வெளிச்சத்தை நோக்கி திரும்புங்கள். நீங்கள் உபத்திரவத்தில் இருந்தாலும், அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். சரீரத்தை மாத்திரம் கொல்ல வல்லவர்களாக இருப்பவர்களுக்கு, ஆத்துமாவை கொல்ல முடியாதவர்களுக்கு பயப்படாதிருங்கள். சரீரத்தையும் ஆத்துமாவையும் நரகத்தில் அழித்துப்போட வல்லவராயிருக்கிறவருக்கே பயந்திடுங்கள். அன்பானவர்களே, நம் ஆத்துமாவுக்காக நாம் வாழ்ந்தே ஆகவேண்டும்.
ஆத்துமா நித்தியமாய் ஜீவிக்க இடங்கொடுத்தால், நாமும் நித்தியமாய் வாழ்ந்திடுவோம். நம் ஆத்துமா மரித்தால், நமக்கு நித்தியம் கிடைக்காது. உங்கள் நோக்கம், என் ஆத்துமா வாழவேண்டும் என்று இருந்தால், ஒரு மனுஷனும், ஒரு பிசாசும் உங்கள் ஆத்துமாவை தொட இயலாது. இவ்வுலகத்திலும் மறு உலகிலும் நீங்கள் எதற்கும் பயப்படமாட்டீர்கள். எப்போதும் தேவ சித்தத்தை நீங்கள் செய்வதால் அவர் உங்களைப் பாதுகாப்பார் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
நம் ஆத்துமா நித்தியமாய் வாழும்படி நாம் அவருக்கு மாத்திரமே பயப்படவேண்டும். நீங்கள் அவருக்குப் பயப்பட்டால், நம்மை மீட்பதற்கு அவர் வருவார். அவர் உங்களை இரட்சிப்பார் என்பதை அறிந்து உங்கள் இருதயம் சமாதானமாயிருக்கும். பிரச்னைகள் மேற்கொண்டுவிடுமோ என்று நீங்கள் கவலைப்படமாட்டீர்கள். இப்போது நீங்கள் இருளின் வழியாக கடந்து சென்று கொண்டிருந்தாலும், தேவனுடைய வெளிச்சம் நம் வாழ்வில் பிரகாசித்து இரட்சிக்கும்படி ஜெபிப்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் தெய்வீக ஒளியை என்மேல் பிரகாசிக்கப்பண்ணி, எல்லா பயத்தையும் இருளையும் என் வாழ்விலிருந்து அகற்றும். மிரட்டல்களை, உபத்திரவங்களை, வியாதியை, நிச்சயமில்லாத நிலையை, பயத்தை நான் எதிர்கொள்ளும்போதெல்லாம் என் வெளிச்சமாகவும் இரட்சிப்பாகவும் விளங்கிடும். உம் பரிசுத்த ஆவியினால் என் உள்ளத்தையும் ஆத்துமாவையும் நிரப்பிடும்; உம்மை நம்புவதற்கான தைரியத்தை எனக்குத் தந்திடும். என் ஆத்துமாவை பாதுகாத்து, உம் சித்தத்தின்படி வாழ்வதற்கு எனக்கு உதவி செய்தருளும். எல்லா இக்கட்டுகளிலிருந்தும் உம் பிள்ளைகளை மீட்டு, அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளையெல்லாம் மாற்றிப்போடும். குடிப்பழக்கம், தீய பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கையை அழிக்கும் எல்லாவற்றிலுமிருந்தும் அவர்களை முற்றிலும் விடுவித்தருளும். உம் இரட்சிப்பின் புயம் அவர்களைப் பாதுகாத்து, சமாதானம், விடுதலை, சுகம் மற்றும் அற்புதங்களை கொண்டு வரட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


