நண்பர்களே, இன்று எஞ்ஜினியர்கள் தினம். தினமும் நமக்காக அநேக புதிய காரியங்களை உருவாக்கும் அனைத்து எஞ்ஜினியர்களை பாராட்டி, அவர்களுக்காக ஜெபிப்போம். எஞ்ஜினியர்களாக இருக்கும் உங்களையும் தேவன்தாமே வல்லமையாக பயன்படுத்துவாராக. இன்று,  "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக" (1 தெசலோனிக்கேயர் 3:13) என்று வேதம் கூறுகிற வசனத்தைத் தியானிப்போம். "தேவனுக்கு முன்பாக நான் பிழையற்றவன்(ள்), பரிசுத்தமானவன்(ள்) என்று அழைக்கப்படுவது எப்படி? தேவன் எப்படி என் வாழ்க்கையை, பரிசுத்தமானதாக, உத்தமமானதாக காண்பார்? அது எப்படி சாத்தியம்?" என்று நீங்கள் கேட்கலாம்.

தேவன், நோவாவை நீதிமானாகக் கண்டார் என்று வேதம் கூறுகிறது. அப்படியே யோபை உத்தமன் என்றும் கர்த்தருக்கு முன்பாக கறையற்றவன் என்றும் தேவன் கண்டார். அப்படி ஒரு பெயரை அவர்கள் பெற்றால், நண்பர்களே, தேவ கிருபையினால் நம்மாலும் அது கூடும். நம் வேலையில், நம் ஒவ்வொருவரும் அதிகாரி ஒருவர் இருக்கும் நிலையில் எப்படி பரிசுத்தமாகவும் உத்தமமாகவும் காணப்படுவது? நம் உயர் அதிகாரி, நாம் சரியான காரியங்களைச் செய்வதைக் கண்டு, நம்மைக் குறித்து மகிழ்ச்சியாயிருக்கும்படி அவருக்குப் பிரியமானவற்றையே செய்கிறோம். நேரத்துக்கு வேலைக்கு வருகிறோம்; விதிகளைக் கடைப்பிடிக்கிறோம்; சரியாக வேலையைச் செய்வதில் கவனமாக இருக்கிறோம். நம் அதிகாரியிடம் அவற்றை கொண்டு செல்கிறோம்; நாம் செய்தவற்றைக் குறித்து அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் நம்மைக் குறித்து மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு, "அதிகாரி என்னைக் குறித்து நல்லபடி சொல்லிவிட்டார். நல்லது என்று கூறிவிட்டார்," என்று எண்ணுகிறோம். அது நமக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

நம் ஆண்டவராகிய இயேசுவுக்காகவும் அப்படியே வேலை செய்கிறோம். "நல்லது" என்று ஆண்டவர் என்னிடம் கூறவேண்டும். அந்தப் பயமே தேவனுக்கு முக்கிய இடம் அளிக்கிறது. தேவனின் எதிர்பார்ப்பு, அதிகாரியின் எதிர்பார்ப்பை விட மிகவும் உயர்வாக இருப்பதால், தேவனுக்காக வேலை செய்வது மிகவும் சிரமமானது. நாம் பெரிய காரியங்களைச் செய்யவேண்டுமென்று அவர் விரும்புகிறார். நம் வாழ்க்கை பூரணமானதாக இருக்கவேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். ஆனால், நண்பர்களே, அவரைப் பிரியப்படுத்துவதற்கு தேவ பயம் அவசியமென்றாலும், அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்ற காரியங்களைச் செய்யும்படி, தீமையை அகற்றுவதே மிக முக்கியமானதாயிருக்கிறது. பரிசுத்தமாகவும் உத்தமமாகவும் இருக்கவேண்டுமென்று தேவ பயம் உங்களுக்கு இருந்தால், உங்கள் வாழ்க்கையில் எப்பக்கமும் தம் பெலன் பூரணமாக விளங்கும்படி தேவன் செய்வார். உங்கள் பெலவீனங்களில் தம் அபிஷேகத்தை அவர் பூரணப்படுத்துவார்; உங்கள் வாயிலாக செயல்பட ஆரம்பிப்பார். உங்கள் உள்ளத்தை மாத்திரமே அவர் பார்க்கிறார்.

உங்களுக்கென்று தேவன் எண்ணியுள்ள காரியங்களை செய்துமுடிக்கும் நீதியுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா? உங்கள் இருதயம் அவருக்குக் கீழ்ப்படிய விரும்புமானால், உங்களுக்குத் தேவையான யாவற்றையும் அவரே பயிற்றுவிப்பார். அவரது கிருபை, உங்கள் குறைவுகளை மேற்கொள்ள வைக்கும்; தம் சித்தத்தை நிறைவேற்றும்படி உங்கள் வாழ்க்கை வாயிலாக அவர் கிரியை செய்வார். நீங்கள் அவரை சார்ந்துகொள்ளும்போது, உங்கள் அடிகளை அவர் வழிநடத்துவார்; தம் நீதிக்கு உங்கள் வாழ்க்கை சாட்சியாவதற்கு, "நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக" என்ற வசனத்தின்படி உதவுவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்கு முன்பாக பரிசுத்தமாகவும் உத்தமமாகவும் வாழ்வதற்கான கிருபை என்மேல் வருவதாக. உமக்காக பெரிய காரியங்களை செய்து, உம் சித்தத்தை நிறைவேற்றும்படி உமக்கு பிரியமான தேவ பயத்தை எனக்கு தந்தருளும். என் வாழ்க்கையில் நீர் கொண்டுள்ள நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஆர்வமுள்ள இருதயத்தை எனக்கு அருளிச்செய்யும். என் உள்ளத்தை பெலப்படுத்தும்; பெலவீனத்திலே உம் பெலம் பூரணமாக விளங்கட்டும். எனக்குள் கிரியை செய்து, நீதியான காரியங்களை செய்யும்படி என்னை தகுதிப்படுத்தும். எல்லா தீமையையும் விரட்டிவிட்டு, உமக்கு முன்பாக உத்தமமாக வாழ்வதற்கு எனக்கு உதவும். என்னை பரிசுத்தமானவனா(ளா)கவும் உத்தமமமானவனா(ளா)கவும் மாற்றி, என் வாழ்க்கை உம் நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வரப்பண்ணும். எல்லா காரியங்களையும் கிறிஸ்துவினால் செய்யும்படி என்னை பெலப்படுத்தும் உம் கிருபைக்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன், ஆமென்.