அன்பானவர்களே, ஆண்டவர் உங்களை தம் பாதுகாப்பின் கீழ், பராமரிப்பின் கீழ் வைத்துக்கொள்ள விரும்புகிறார். "எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்" (நீதிமொழிகள் 1:33) என்று வேதம் கூறுகிறது. ஆண்டவரிடமிருந்து வரும் ஞானம், நம்மை இடறாமல் காத்துக்கொள்வதோடு, பயத்தை அகற்றுகிறது; ஆபத்தின் நடுவிலும் சமாதானமாக வாழும்படி செய்கிறது. எவ்வளவு பெரிதான கிருபை இது!
என் தந்தை, சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன், தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில், மிகவும் பெலவீனப்பட்டிருந்தார்; அதிகமாக இருமிக்கொண்டிருந்தார். அப்போதும் அவர், "ஆண்டவரே, தயவுசெய்து எனக்கு இன்னும் கொஞ்சம் நாட்களைக் கொடும். ஊழியத்திற்கும் காருண்யாவுக்கும் ஏகப்பட்ட கடன் இருக்கிறது. இந்தக் கடனை என் மகன்மேல் வைத்துவிட்டுச் செல்ல நான் விரும்பவில்லை. தயவுசெய்து அவற்றை அடைத்து, என் மகன் சமாதானமாக வாழ்ந்து ஊழியத்தைத் தொடர்ந்து செய்யவும் வழி உண்டாக்குவதற்கு உதவும். இதற்காக ஜெபிக்கும்படி என் உறவினர் எர்னஸ்டிடமும் மற்ற போதகர்களிடமும் கேட்டுக்கொண்டார். ஆனாலும் ஆண்டவர் தம் சமுகத்திற்கு என் தந்தையை எடுத்துக்கொண்டார். அவரை அடக்கம் செய்த பிறகு நான் மிகவும் கலங்கிப்போயிருந்தேன். "ஆண்டவரே, என் தந்தை இருந்ததுபோல இத்தனை லட்சம் மக்களுக்கு யாரால் தந்தைபோல் இருக்க முடியும்? இந்த மாபெரும் பொறுப்பை நான் எப்படி சுமப்பேன்? யார் அவர்களைச் சுமப்பார்கள்?" என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.
இருபத்து மூன்று நாட்களுக்கு பின்னர், CSI பேராயர் அருள்பெருட்திரு தேவ கடாட்சம் ஏற்பாடு செய்திருந்த இயேசு அழைக்கிறார் நற்செய்தி கூட்டத்தில் பிரசங்கிக்க நாகர்கோவில் புறப்பட்டேன். ஜெபித்து என்னை கூட்டத்திற்கு அனுப்புவதற்கு என் தந்தை இனிமேல் இருக்கமாட்டார் என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது, ஆண்டவரே தம்மை எனக்கு வெளிப்படுத்தி, "என் மகனே, இதுவரை நான் உன் தந்தை வழியாக உன்னோடு பேசி, வழிநடத்தினேன். இப்போதிலிருந்து நானே உனக்கு தந்தையாக இருப்பேன். நானே எல்லாவற்றையும் உனக்குப் போதிப்பேன். என் ஞானத்தின்படியும் வழிநடத்துதலின்படியும் உன் வாழ்க்கையை, உன் குடும்பத்தை, ஊழியத்தை நடத்து; எல்லாமும் செழிக்கும்," என்று கூறினார்.
அவர், "இந்தப் பாரத்தை நீ சுமக்கவேண்டாம். நானே சுமப்பேன். உனக்கு நான் சொல்வதைச் செய்வாயாக," என்று கூறினார். அதன் பிறகு அவர் இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு ஒரு புதிய வழிகாட்டுதலைக் கொடுத்தார். தீர்க்கதரிசன முகாம் ஒன்றை நடத்தும்படி கூறினார்; இயேசுவைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கும் ஆயிரக்கணக்கான மக்களை எழுப்புவதாக வாக்குக்கொடுத்தார். இந்தியா முழுவதும், உலகமெங்கும் தம் சாட்சியை அறிவிப்பதற்காக குமாரரையும் குமாரத்திகளையும் எழுப்புவதாகவும் கூறினார்.
2008ம் ஆண்டு நாங்கள் இதைத் தொடங்கினோம். முதல் முகாமில் ஏறத்தாழ 2,000 பேர் கலந்துகொண்டனர். விரைவிலேயே ஆண்டவர் பெரிய பொதுக் கூட்டங்களை நடத்தும்படி கட்டளை கொடுத்தார். நுழையும் இடங்களில் ஜெப வீரர்கள், வீராங்கனைகள் நிறுத்தப்பட்டனர். தொலைக்காட்சிகளில் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்படி காமிராக்களும் பயன்படுத்தப்பட்டன. அப்போது LED திரைகள் இல்லை. ஆகவே, 16 தொலைக்காட்சி திரைகளைக் கொண்டு மேடையில் பெரிய திரையை உருவாக்கினோம். ஆண்டவர் அற்புதங்களை நடப்பித்தார்; அவரது பிரசன்னம் கூட்டங்களை நிரப்பியது. என் பிள்ளைகள் சாம், ஷேரன் இருவரும் ஆராதனையை நடத்தினர். தீர்க்கதரிசனத்துடன் பேசி, மக்களை பெயர் கூறி அழைக்கும் கிருபையை ஆண்டவர் எனக்குக் கொடுத்தார். கட்டுகளிலிருந்து, வேதனையிலிருந்து, துக்கத்திலிருந்து விடுதலை கிடைத்ததாக மக்கள் சாட்சி கூறினர்; அநேகர் பரிசுத்த ஆவியின் நிறைவை அனுபவித்தனர். அவர்கள் வாழ்வும் மறுரூபமடைந்தது; பாவம் அகற்றப்பட்டது; அவர்கள் வாழ்வின் பரிசுத்தம் வந்தது.
ஆண்டவர் தேசத்திற்காக ஒரு நாளின் 24 மணி நேரமும் ஜெபிக்கும்படியாக டெல்லியில் ஒரு ஜெப கோபுரத்தை நிறுவுவதற்கும், அதன் பிறகு ஜெருசலேமிலும் ஒரு ஜெப கோரத்தை நிறுவவும், ஜெப கோபுரங்களை விரிவுபடுத்தவும் கட்டளை கொடுத்தார். காருண்யாவில் நீர், உணவு, ஆரோக்கியம் சார்ந்த ஆராய்ச்சிகளை செய்யவும் கூறினார். கல்லூரியாக இருந்த காருண்யாவை பல்கலைக்கழகமாக வளரச் செய்ததோடு அதன் ஆராய்ச்சியையும் ஆசீர்வதித்து மேம்பட உதவினார். சீஷாவை விரிவுபடுத்தி, ஏழைகளையும் முதியோரையும் பராமரிக்கும்படி கூறினார். இதனால் முதியோருக்கான இல்லங்கள், மறுவாழ்வு மையங்கள், கல்வி மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சிகள், வீடுகளை இழந்தோருக்கு வீடு, மருத்துவ முகாம்கள், இலவச மருத்துவ சேவை, சிறுபிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் ஆதரவு அளிக்கும் பல முயற்சிகள் செய்யப்பட்டன. அவரது கட்டளைகளைப் பின்பற்றுவதால், ஊழியத்தின் தேவைகளை அருளுவதில் ஆண்டவரும் உண்மையுள்ளவராயிருக்கிறார். ஜெப கோபுரங்களை பெருகப்பண்ணுகிறார்; கூட்டங்களின் வாயிலாக பல லட்சம்பேரை ஆசீர்வதிக்கிறார்; அரசாங்க தலைவர்களிடம் வாசல்களை திறக்கிறார்; எங்களோடு இணைந்து ஊழியம் செய்வதற்கு அநேகரை எழுப்புகிறார். இதுவே ஆண்டவரிடமிருந்து வரும் ஞானமும் வழிநடத்துதலுமாயிருக்கிறது.
தினமும் அதிகாலை 3 முதல் 4 மணிக்குள் ஆண்டவர் என்னை எழுப்புகிறார்; அன்றைக்குச் செய்யவேண்டியவற்றை காண்பிக்கிறார். அவரது வழிகாட்டுதலை நான் செய்கிறேன். யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆண்டவருக்கு முன்பு நீதியாக நாம் நடக்கவேண்டும்; உத்தமமாகவும் உண்மையாகவும் இருக்கவேண்டும். எல்லா போராட்டம், எதிர்ப்பின் நடுவிலும் ஆண்டவர் எங்களுக்கு பெரிய கிருபையை காண்பித்துள்ளார். எங்களுக்காக ஜெபிக்கும், எங்களோடு இணைந்து முழு நேரமாகவும் தன்னார்வலராகவும் ஊழியம் செய்யும் ஆயிரக்கணக்கானோருக்காகவும் அவரை ஸ்தோத்திரிக்கிறேன். இந்த ஊழியத்தின் வாயிலாக அவர் தொடர்ந்து பரிபூரண பலனை கொடுக்கிறார். உங்களை எங்களுக்கு அருமையாக ஈவாகவும் கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு நாள் காலையிலும் ஆண்டவர் தம் ஞானத்தையும் வழிநடத்துதலையும் உங்களுக்குத் தரவேண்டும் என்பதே என் விண்ணப்பமாயிருக்கிறது. இடறாமல், பயமில்லாமல், சமாதானத்தோடு வாழ்வதற்கு அவர் உங்களுக்கு உதவுவாராக. நீங்கள் அவரது நோக்கங்களை நிறைவேற்றி, மகா உயரங்களுக்கு எழும்புவீர்களாக. ஆண்டவர்தாமே உங்களை தம் தெய்வீக பாதுகாப்பில் காத்துக்கொண்டு, தம் ஞானத்தை உங்களுக்குத் தந்து, அவரது பரிபூரண சித்தத்தின்படி பத்திரமாகவும், சமாதானமாகவும் நடக்கும்படி செய்வாராக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் ஞானத்தில் நடக்கவும், அனுதினமும் உம் வழிநடத்துதலை நம்பவும் எனக்கு உதவி செய்யும். என் தகப்பனாக, என்னை தற்காக்கிறவராக, எனக்கு வழிகாட்டுகிறவராக, சுமக்க இயலாத பாரத்தை எனக்காக சுமக்கிறவராக இருந்தருளும். என் குடும்பத்தை உம் பாதைகளில் வழிநடத்தி, எங்களை உம் மகிமைக்காக பயன்படுத்தியருளும். இயேசுவை குறித்து சாட்சி கொடுக்க அநேகரை எழுப்பி, அவர்களை லட்சக்கணக்கானோருக்கு ஆசீர்வாதமாக மாற்றியருளும். தேவைகள் எல்லாவற்றையும் அருளிச் செய்யும். உமக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு ஞானத்தை அளிப்பதோடு, தேவையுள்ளோரையும் விசாரித்திடும். அனுதினமும் காலையில் உம் பரிசுத்த ஆவியானவர், பத்திரமாகவும் சமாதானமாகவும் பயமின்றியும் நடப்பதற்கு எனக்கு உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


