எனக்கு அன்பானவர்களே, நம் ஆண்டவரும் இரட்சருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தர், "பூமி தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்" (லேவியராகமம் 25:19) என்ற அருமையான வாக்குத்தத்தத்தை இன்று கொடுக்கிறார். இந்தப் பகுதியில், இஸ்ரவேல் மக்களுக்கு, நிலத்தை ஓர் ஆண்டு முழுவதும் விதைக்காமலும் அறுவடை செய்யாமலும் விட்டுவிடும்படி கர்த்தர் கட்டளையிடுகிறார். மனுஷீகப் பிரகாரமாக இது கூடாததாகக் காணப்படுகிறது. "நாம் எப்படி பிழைப்போம்? எதை சாப்பிடுவோம்?" என்றெல்லாம் அவர்கள் திகைத்திருக்கக்கூடும். ஆனால், தேவன், தாமே அவர்களுக்கு எல்லாவற்றையும் அருளிச்செய்வதாக உறுதியாகக் கூறினார். அவர்கள் திருப்தியாய் புசித்து, சுகமாய் வாழ்வார்கள் என்று அவர் வாக்குப்பண்ணினார்.
அதே தேவன் இன்று உங்களோடு பேசுகிறார். கூடாததாக காணப்படும் சூழ்நிலையிலும் அவரை நம்பும்படி கூறுகிறார். ஒருவேளை மருத்துவர்கள் உங்கள் நிலையைக் குறித்து நம்பிக்கை இழந்திருக்கலாம்; நீங்கள், பிள்ளைகள்மேல் நம்பிக்கை இழந்திருக்கலாம். பல வேலைகளுக்காக விண்ணப்பித்தும் கிடைக்காதிருக்கலாம் அல்லது பதவி உயர்வுக்காக பல ஆண்டுகள் காத்திருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாதிருக்கலாம். உங்களைச் சுற்றிலும் எல்லாமே அதைரியப்படச் செய்யக்கூடியவையாய் இருக்கலாம். ஆனாலும் ஆண்டவர், "என்னை நம்பு," என்கிறார். இஸ்ரவேல் மக்களுக்கு அவர் உண்மையாய் அருளிச்செய்தபடியே உங்களுக்கும் கொடுப்பார். கூடாதென்று காணப்படுகிறவற்றை அவர் செய்வார். உங்கள் வியாதியை அவரால் குணப்படுத்த முடியும்; உங்கள் குடும்பத்தை சீர்ப்படுத்த முடியும்; வேலைக்கான வாசலை திறக்க முடியும்; உங்களுக்கு உரைத்த எல்லா வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்ற முடியும்.
தேவனை விட்டு தூரமாய் அலைந்து திரிகிற பிள்ளைகளுக்காய், பெற்றோராய் கண்ணீருடன் ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்களா? மனந்தளராதிருங்கள். அவர்களை ஆண்டவரின் கரங்களில் ஒப்படையுங்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். உங்களைக் காட்டிலும் அவர், அவர்களை அதிகமாய் நேசிக்கிறார். மீண்டும் தம்மிடம் அவர்களைக் கொண்டு வர அவரால் முடியும். அவரால் கூடாத காரியம் ஒன்றுமேயில்லை. இன்று பயப்படுவதற்குப் பதிலாக விசுவாசிப்பதற்கு தீர்மானியுங்கள். உங்கள் சூழ்நிலைகளைக் காட்டிலும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்புங்கள். இஸ்ரவேலருக்கு அருளிச்செய்த கர்த்தர்தாமே உங்களுக்கும் நிச்சயமாய் வேண்டியவற்றைக் கொடுப்பார்; உங்களைப் பாதுகாப்பார்; சுகமாய் தங்கப் பண்ணுவார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, தேவையான அனைத்தையும் பெற்றுக்கொண்டு, உம் பராமரிப்பில் சுகமாய் வாழ்வேன் என்ற ஆச்சரியமான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். கூடாது என்று காணப்படும் சூழ்நிலைகளிலும் உம்மை நம்பும்படி என் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும். தாமதத்தாலோ, ஏமாற்றங்களாலோ, இக்கட்டான சூழ்நிலைகளாலோ நான் அதைரியப்பட்டுவிடாதிருக்க எனக்கு உதவும். ஆண்டவரே, என் குடும்பத்தை, என் பிள்ளைகளை, என் ஆரோக்கியத்தை, என் வேலையை இன்னும் எல்லா பாரங்களையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். உம்மை விட்டு அலைந்து திரியும் எல்லா பிள்ளையையும் திருப்பிக் கொண்டு வாரும்; அவர்களுக்கான உம் கிருபையை வெளிப்படுத்தும். வியாதியினால், குறிப்பாக முதுகு வலி, சிறுநீரக பிரச்னைகள், சரீரபிரகாரமான பெலவீனங்களால் வாடும் அனைவருக்காகவும் ஜெபிக்கிறேன். சுகமளிக்கும் உம் கரத்தை நீட்டி, இன்றே அற்புதம் செய்வீராக. உம் சித்தத்தின்படியே வேலைக்கு, பதவி உயர்வுக்கு, வேண்டியவற்றுக்கான அருட்கொடைக்கு வாசல்களை திறந்திடும். உம் சமாதானம் எங்கள் இருதயங்களை காத்துக்கொள்ளட்டும்; அனுதினமும் உம் தெய்வீக பாதுகாப்பை நாங்கள் உணரவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


