அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்" (1 யோவான் 2:17) என்று கூறுகிறது. இது எவ்வளவு உண்மையாயிருக்கிறது! வேதம், "தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்" என்று கூறுகிறது (பிரசங்கி 2:26).

"உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்" என்ற வசனம் பாவி, பெருஞ்செல்வத்தை சேர்த்து வைக்கலாம் என்று நினைவுப்படுத்துகிறது. அவன் பொல்லாத வழிகளில் பெருஞ்செல்வத்தை சேர்க்கலாம்; பெரிய பேரை சம்பாதிக்கலாம். ஆனால், கணப்பொழுதில் அவை எடுக்கப்பட்டு போகும். நாம் ஜெயிப்பதையோ, மகிழ்ச்சியாய் இருப்பதையோ பிசாசு விரும்புவதில்லை. அவன் எல்லாவற்றையும் அழித்துப்போடவும், நாம் சேர்த்துவைத்திருப்பதை எடுக்கவும் முயற்சிக்கிறான்.

ஆனால், வேதம், "தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்," என்று கூறுகிறது (பிரசங்கி 2:26). துன்மார்க்கனால் சேர்க்கப்படும் எல்லா ஐசுவரியமும் பொக்கிஷங்களும், தேவனுக்குப் பிரியமான மனுஷனிடம் கொடுக்கப்படும். தேவனுடைய சித்தத்தை செய்கிறவனே அவருக்குப் பிரியமானவன். "தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்" என்று வேதம் கூறுகிறது (1 யோவான் 2:17). ஆம், அன்பானவர்களே, தேவனுடைய சித்தத்தின்படி நடப்பதை, அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதை, அவருக்குப் பிரியமாய் நடப்பதை நாம் தெரிந்துகொள்வோம்.

இயேசு, ஓர் ஐசுவரியவானையும் தரித்திரனாகிய லாசருவையும் குறித்து ஓர் உவமையைக் கூறியுள்ளார். லாசரு, அந்த ஐசுவரியவானின் வீட்டுக்கு வெளியே வாழ்ந்தான். தினமும் அந்த ஐசுவரியவானின் மேசையிலிருந்து ஏதாவது உணவு துண்டுகள் விழும் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். தூக்கி வீசப்படும் கொஞ்ச உணவுக்காக அவன் ஏங்கினான். ஆனால் ஐசுவரியவான் ஒருபோதும் லாசருவைக் குறித்து அக்கறைப்படவில்லை. வியாதிப்பட்டவனாய், கவனிக்க யாருமற்றிருந்த லாசருவின் புண்களை நாய்களும் நக்கின.

ஆனால், இருவரும் இறந்தபோது லாசரு, தேவதூதர்களால் ஆபிரகாமின் பக்கம் கொண்டு விடப்பட்டான். ஐசுவரியவானோ, பற்கடிப்பின் இடத்திற்குச் சென்றான். நெருப்பின் நடுவே கிடந்த அவன் பயங்கரமாய் பாடுபட்டான். அவன் தூரமாய் ஆபிரகாமுடன் லாசரு இருப்பதைக் கண்டு, "நான் இந்த அக்கினியில் வேதனை அனுபவிக்கிறேன். லாசரு தன் விரலை தண்ணீரில் தொட்டு என் நாவில் வைக்கும்படி அனுப்பிவிடவேண்டும். இந்த அக்கினியால் வேதனைப்படுகிறேன்," என்று கூப்பிட்டான். ஆனால், ஆபிரகாமோ வாழ்க்கையில் நடந்ததை அவனுக்கு நினைவுப்படுத்தினான். லாசரு, அவன் வீட்டு வாசற்படியில் கிடந்ததையும் ஐசுவரியவான் ஒருபோதும் அவனைக் குறித்து அக்கறைப்படவில்லையென்றும் கூறினான்.

அன்பானவர்களே, தேவ சித்தத்தின்படி வாழ்ந்து அவரை நாம் பிரியப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால், இந்த உலகத்தின் சிற்றின்பங்களைப் பற்றிக்கொள்ளும்படி விடப்படுவோம். இந்த உலகமும் அதன் இச்சைகளும் ஒழிந்துபோகும். ஆனால், தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றும் நிலைத்திருப்பான். அப்படிப்பட்ட மனுஷன் தேவனுடைய சந்தோஷத்தை, அவருடைய ஆசீர்வாதத்தை இந்த உலகில் அனுபவிப்பதோடு, அவருடன் நித்திய ஜீவனுக்குள்ளும் பிரவேசிப்பான். தேவ சித்தத்தை செய்கிறவர்களுக்கு அந்த நித்திய பலனே வாக்குப்பண்ணப்பட்டுள்ளது. இந்த உலகத்தின் சிற்றின்பங்களுக்காகவும் உலக இச்சைகளுக்காகவும் வாழ்வதற்குப் பதிலாக இந்தப் பலனை அடைய பிரயாசப்படுவோம்.

ஜெபம்:
அன்பு தகப்பனே, பரலோகத்தின் பாதையை எனக்கு தயவாய் திறப்பீராக. நான் ஒருபோதும் பரலோகத்தை தவறவிடாமல், நரகத்திற்குச் செல்லாமல் இருப்பேனாக. மகிமையுள்ள வீடாகிய உம் வாசஸ்தலத்தையும் தவறவிடாதிருப்பேனாக. அப்பா, உம் சித்தத்தைச் செய்வதற்கும், உமக்குக் கீழ்ப்படிவதற்கும் எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். உம் சத்தத்திற்குச் செவிகொடுக்கவும், நான் என்ன செய்யவேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்பதை புரிந்துகொள்ளவும், உம்முடன் நடக்கவும், உம் சித்தத்தை சந்தோஷத்துடன் நிறைவேற்றவும் உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.