எனக்கு அருமையானவர்களே, "நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 43:2). சங்கீதம் 124:1-5 வரையுள்ள வசனங்களில், "மனுஷன் நமக்கு விரோதமாய் எழும்பினபொழுது, கர்த்தர் நமது பட்சத்தில் இராவிட்டால், அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின் மேல் பெருகி கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டு போயிருக்கும்" என்று தாவீது ஆண்டவரிடத்தில் தன்னுடைய வேதனைகளையெல்லாம் கொட்டுவதை நாம் வாசிக்கிறோம். இந்த ஆழமான தண்ணீர் என்பது, நம் வாழ்க்கையில் வருகிற பிரச்சனையைக் குறிக்கிறது. இந்தப் பிரச்சனையிலிருந்து ஆண்டவர் எப்படி தாவீதை விடுவித்தார்? சங்கீதம் 18:16,18 ஆகிய வசனங்களில், "உயரத்திலிருந்து அவர் கையை நீட்டி, என்னை பிடித்து ஜலப்பிரவாகத்திலிருந்து என்னை தூக்கிவிட்டார்; என் ஆபத்து நாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள். கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்" என்றும், "என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னை தப்புவித்தார்" என்றும் தாவீது சொல்லுகிறான். ஆம் பிரியமானவர்களே, கர்த்தரே நமக்கு அடைக்கலமும், பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமாயிருக்கிறார் (சங்கீதம் 46:1). வெள்ளம்போல் சத்துரு வரும்பொழுது ஆவியானவர் அவனுக்கு விரோதமாய் கொடியேற்றுகிறவராய் நம்மோடு கூடவே இருக்கிறார் (ஏசாயா 59:19).
சகோதரர் ஜான்சன் தினகரன் என்பவருக்கு மனைவியும், மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவருடைய தகப்பனார், இவருக்கு வீடு ஒன்றை கட்டிக்கொடுத்தார். ஆனால், சகோதரர் ஜான்சன் குடும்பமாக வெளியூர் செல்லவேண்டியிருந்ததால், தன்னுடைய வீட்டை, வழக்கறிஞர் ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டு போனார். சில மாதங்கள் அவர் ஒழுங்காக வீட்டு வாடகை கொடுத்தார். அதன்பின்பு, வாடகை கொடுப்பதை நிறுத்திவிட்டார். சகோதரர் ஜான்சன், அவரிடம், வீட்டு வாடகை பணத்தைக் கேட்டபொழுது, இவருக்கு எதிராக அவர் வாதாட ஆரம்பித்தார். பின்பு அவர், நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து, அங்குமிங்குமாக இவரை அலக்கழித்தார். இவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சரியாக தூங்கவுமில்லை. சாப்பிடவுமில்லை. இதினிமித்தம் குடும்பத்தில் சமாதானமும் இல்லாமல்போனது.
இந்நிலையில், சகோதரர் ஜான்சன் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு வந்து, அங்கிருந்த ஜெப வீரர்களிடம் தன்னுடைய பிரச்சனையைக் கூறி, இந்த பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலையைப் பெற்றுத் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். உடனே அவர்கள் இந்த சகோதரனுக்காக ஜெபித்து, ஒரு வாக்குத்தத்த வசனத்தைக் கொடுத்தார்கள். என்ன ஆச்சரியம் பாருங்கள், சில நாட்களுக்குள், அந்த வழக்கறிஞருக்கு விரோதமான எதிரிகள் சிலர், அவருக்கு எதிராக எழும்ப ஆரம்பித்தார்கள். கடுமையான போராட்டத்தின் மத்தியில் என்ன செய்வதென்று தெரியாமல், அவர், சகோதரர் ஜான்சனின் வீட்டை அவருக்கே கொடுத்துவிட்டு, வழக்கையும் வாபஸ் பெற்றுக்கொண்டார். அதோடுகூட, வீட்டு வாடகை பணம் அனைத்தையும் செலுத்தினார். சகோதரர் ஜான்சனுக்கு ஒரே சந்தோஷம். ஜெப கோபுரத்திற்கு வந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார். அவருக்கு கொடுக்கப்பட்ட வசனத்தின்படியே அது நடந்தது. அதேபோல ஆண்டவர் உங்களுக்கும் செய்வாராக. உங்களை எல்லா வழக்குகளிலிருந்தும் வெளியே கொண்டு வருவார். தண்ணீர் எவ்வளவு ஆழமாக இருந்தாலும், அதிலிருந்து உங்களை தூக்க அவர் வல்லவராயிருக்கிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, ஆழமான தண்ணீர்களிலிருந்து நீர் என்னை தூக்கி நிறுத்த வல்லவராயிருக்கிறபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த பிரச்சனையினிமித்தம் எனக்கு சமாதானமே இல்லை, வீட்டில் எவ்வளவு கஷ்டம், பணம் எல்லாம் செலவழிந்து கொண்டேயிருக்கிறது. இவற்றிலிருந்து எனக்கு பூரண விடுதலையைத் தாரும் சுவாமி. பிரச்சனைகளில் தவிக்கிற எனக்கு நீரே துணை நின்று உதவி செய்வீராக. என் ஆபத்துக்காலத்திலே நீரே அநுகூலமான துணையாயிருந்து என்னை காத்துக்கொள்ளும். எல்லா பிரச்சனைகளையும் நீக்கி, நிரந்தர விடுதலையை கட்டளையிடுவீராக. இன்றைக்கே என் வாழ்வில் அற்புதம் நடக்கட்டும். இழந்த அனைத்தையும் திரும்ப சந்தோஷமாய் பெற்றுக்கொள்ள கிருபை தருவீராக. உம்முடைய சமாதானம் என் வீட்டை நிரப்பட்டும்.