அன்பானவர்களே, இன்றைக்கு, "கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக" (2 தீமோத்தேயு 4:22) என்ற அருமையான வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல், தீமோத்தேயுவையும் அவன் சபை மக்களையும் இப்படி ஆசீர்வதிக்கிறான். அந்த நாட்களில் மக்கள், "தேவன் உங்களோடிருப்பாராக," என்று வாழ்த்துவது வழக்கம். ஆனால், பவுல், இன்னும் ஆழமாக வாழ்த்துகிறான். தேவனுடைய ஆவியானவர் தீமோத்தேயுவுடன் இருக்கவேண்டும் என்றும், தேவ கிருபை அனைவருடனும் இருக்கவேண்டும் என்று அவன் விரும்பினான்.
தன் சுயபெலத்தால் எல்லாவற்றையும் செய்து முடிக்க இயலாது என்று பவுல் அறிந்திருந்தான். தேவனுடைய உதவியில்லாமல் தீமோத்தேயுவால் ஊழியத்தை செய்ய முடியாது என்று புரிந்திருந்தான். ஆகவே, அவர் தேவ ஆவியானவர், தீமோத்தேயுவை பெலப்படுத்தி, ஊழியத்தில் பயன்படுத்தவேண்டும் என்றும் விரும்பினான். பவுல்தாமே, "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு," என்று அறிவித்தான் (பிலிப்பியர் 4:13). இயேசுவும், "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது," (யோவான் 15:5) என்று கூறியிருக்கிறார். நாம் எந்நேரமும் இயேசுவில் நிலைத்திருக்கவேண்டும்; தேவ ஆவியானவருடன் இணைந்திருக்கவேண்டும். ஆண்டவர், நம்மை தம் ஆவியினால் பெலப்படுத்தி, தம் நோக்கத்தை நிறைவேற்ற நமக்கு உதவவேண்டுமென்று விரும்புகிறார். அவரது பிள்ளைகளை தம் சமுகத்தாலும் கிருபையாலும் ஆசீர்வதிப்பதற்கு விரும்புகிறார். இதுவே உண்மையான தகப்பனின் உள்ளம். யாக்கோபு வயது முதிர்ந்தவனானபோது, தன் பன்னிரண்டு குமாரரையும் ஆசீர்வதிக்க விரும்பினான். தன் குமாரரை அழைத்து வரும் காலங்களில் அவர்களுக்கு என்ன நடக்கும் என்று கூறினான் (ஆதியாகமம் 49:1). அவன் அவர்கள் ஒவ்வொருவரைக் குறித்தும் தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்கள் எதிர்காலத்தைக் குறித்துப் பேசினான். அவன் அவர்களை ஆசீர்வதித்து, அவர்கள்மேலான தன் அன்பை வெளிப்படுத்தினான்.
எங்கள் அப்பா, சகோதரர் தினகரன், இப்படியே செய்தார். தம் வாழ்க்கையின் இறுதியில், தன் நாட்கள் நெருங்குகிறது என்பதை அறிந்து, அவர் குடும்பத்தில் அனைவரும் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று விரும்பினார். அவர் பெலவீனமாக இருந்தபோதும், தம் கரங்களை ஒவ்வொருவர் தலைமீதும் வைத்து எங்களை முழு மனதுடன் ஆசீர்வதித்தார். தகப்பனுடைய அன்பு எவ்வளவு அழகாக வெளிப்பட்டது! நம் பரம தகப்பனின் உள்ளமும் அப்படியே இருக்கிறது. அவர் நம்மை ஆசீர்வதிக்கவும், பெலப்படுத்தவும், தம் ஆவியால் நிரப்பவும் விரும்புகிறார். அன்பானவர்களே, தேவ ஆவியானவர் உங்கள் ஆவியுடனே இருப்பாராக; அவர் கிருபை எப்போதும் உங்களுடன் இருப்பதாக. உங்கள் பெலவீனத்தில் அவரே உங்களைப் பெலப்படுத்தி, எந்த முடிவை எடுக்கும்போதும் வழிநடத்தி, தம் நோக்கத்தை நிறைவேற்றி முடிக்க உதவுவாராக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம் பரிசுத்த ஆவியானவர் எங்களுக்குள் வாசம்பண்ணுவது எத்தனை சிலாக்கியம்! ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவரையும் உம் ஆவியால் நிரப்புவீராக. உம் தெய்வீக வல்லமை அவர்கள்மேல் வந்து, உம் நோக்கங்களை செய்துமுடிக்கும்வண்ணம் அவர்களைப் பெலப்படுத்துவதாக. அவர்கள் வாழ்வில் உம் கிருபை பூரணமாக விளங்கி, எல்லா நற்கிரியையையும் செய்யும்படி பெலப்படுத்துவதாக. அவர்கள் வாயின் வார்த்தைகளையும், இருதயங்களின் தியானங்களையும் ஆசீர்வதித்தருளும். வியாதிப்பட்டோருக்காக ஜெபிக்கும்படியும், பிறரை ஆசீர்வதிக்கும்படியும், வாழ்வின் எல்லா நிலையிலும் வளர்ந்து பெருகும்படியும் பெலப்படுத்துவீராக. பலத்தினாலும், பராக்கிரமத்தினாலும் அல்ல; உம் ஆவியினாலே எல்லாம் செய்துமுடிக்கப்படுவதாக. அதைரியத்தை அகற்றும்; அவர்கள் கைகளைப் பெலப்படுத்தும்; உமக்கு தைரியமான சாட்சிகளாக விளங்கப்பண்ணவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


