அன்பானவர்களே, "உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்" (ஏசாயா 30:18). இது, தேவன் உங்களுக்குத் தரும் வாக்குத்தத்தம்! தாம் மனதுருக்கமுள்ள தேவனானதால், கர்த்தர் உங்கள்பேரில் இரக்கமாயிருப்பார். பலவேளைகளில் நாம் நியாயத்தின் தேவனாக அவரை எண்ணுகிறோம்; ஆனால், உங்கள்பேரில் இரக்கமாயிருப்பதற்காக, நியாயம் செய்கிறார். முதலாவது, தம்மிடமாய் மனந்திரும்புகிறவர்கள்மேல் அவர் இரக்கமாயிருக்கிறார். வேதம், "நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால்...இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை" (2 நாளாகமம் 30:9) என்று கூறுகிறது. அன்பானவர்களே, வேதம், "உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்" (நெகேமியா 9:31) என்றும் கூறுகிறது. அதே தேவன் நாமும் இரக்கமுள்ளவர்களாயிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். "ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்" (பிரசங்கி 10:12) என்றும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும், "இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்" (நீதிமொழிகள் 16:24) என்றும் வேதம் சொல்லுகிறது. மற்றவர்களுக்கு, நம்முடைய பரம விரோதிக்கும் சுகத்தை, மதுரத்தை, ஆறுதலை அளிக்கும் கிருபையுள்ளவர்களாக நாம் இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆண்டவர் தம் மிகுந்த இரக்கத்தினால் நம்மை மன்னித்தார்; நாமும் மற்றவர்களிடம் இரக்கமுள்ளவர்களாயிருப்போம்.
இரண்டாவது, வார்த்தைகளில் நாம் இரக்கமுள்ளவர்களாயிருக்கவேண்டும். வேதம், "அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக" (கொலோசெயர் 4:6) என்று கூறுகிறது. எதிர்கொள்கிறவர்களாக நாம் இருக்கும்படி ஆண்டவர் விரும்பவில்லை. நமக்கு எதிராக பேசவோ அல்லது நம்மை மேற்கொள்ளவோ யாரும் வராதபடி எப்போதும் கிருபை நிறைந்தவர்களாக இருப்பது அவசியம். மூன்றாவதாக, கணவர்மார் அனைவரும் தங்கள் மனைவியரிடம் கிருபையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். "புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்" (1 பேதுரு 3:7) என்று வேதம் கூறுகிறது. ஆம், உங்கள் ஜெபங்களை எதுவும் தடுக்கக்கூடாது. வாழ்க்கைத் துணையாகிய மனைவியரிடம் நாம் இரக்கமுள்ளவர்களாயிருக்கவேண்டும்; ஒருபோதும் குற்றஞ்சாட்டுகிறவர்களாக, எதிராக பேசுகிறவர்களாக இருக்கக்கூடாது. நம் ஜெபங்கள் தடைபடாதபடிக்கு ஒருவருக்கொருவர் தாழ்மையாகவும், அன்பாகவும், கனப்படுத்துகிறவர்களாகவும், தேவனோடு இணைந்திருப்பவர்களாகவும் காணப்படவேண்டும்.
நான்காவதாக, கொடுப்பதில் இரக்கமுள்ளவர்களாயிருக்கவேண்டும். நீதிமான் இரக்கத்துடன் உதாரத்துவமாகக் கொடுக்கிறான். தேவன் உங்கள்மேல் கிருபையாயிருக்கும்படி எல்லாவற்றிலும் இதைக் கட்டளையிடுவாராக. கிருபையாயிருக்க சித்தமுள்ளவராயிருக்கும் தேவன், மனந்திரும்பி, கருணையுடன் பேசி, தாழ்மையுடன் உங்கள் குடும்பத்தை நேசித்து, இரக்கத்துடன் கொடுக்கும்படி தமது கிருபையை உங்கள்மேல் பொழிந்தருள்வாராக. கிருபையுள்ள தேவன்தாமே உங்கள் வாழ்க்கையை, தம் கிருபையை உண்மையாக உலகிற்குக் கொண்டு செல்கின்றதாக மாற்ற விரும்புகிறார்.
ஜெபம்:
கிருபையுள்ள கர்த்தரே, நீர் மனதுருக்கத்தாலும் இரக்கத்தாலும் நிறைந்திருக்கிறீர். என்மேல் அனுதினமும் கிருபையாயிருப்பதற்கு வாஞ்சையாயிருப்பதினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தாழ்மையுள்ள இருதயத்துடன் மனந்திரும்பி உம்மிடம் வருவதற்கு எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். என் வாயின் வார்த்தைகள் கிருபையும், மதுரமும், மற்றவர்களை குணமாக்குகிறவையுமாயிருப்பதாக. என்னை விரோதிக்கிறவர்களுக்கும் அன்பு காட்ட எனக்கு உதவும். என் பேச்சு உம் அன்பையும் ஒருமனதையும் காட்டுவதாக இருக்கட்டும். குடும்பமாக, ஒருவர்பேரில் ஒருவர் இரக்கமுள்ளவர்களாயிருக்கவும் கனப்படுத்தவும் உதவி செய்யும். நீர் எனக்குத் தருவதுபோல, மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு விரும்பும் உதாரகுணமுள்ள இருதயத்தை எனக்கு அருளிச்செய்திடும். உம் கிருபை என் மூலமாக பாய்ந்து நான் சந்திக்கிற ஒவ்வொருவருக்கும் கிடைக்க அருள்புரியவேண்டுமென்று இயேசுவின் அருமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


