அன்பானவர்களே, இயேசு உங்களுக்கு அற்புதங்களைச் செய்ய விரும்புகிறார். ஏன் தெரியுமா? தன்னை தேவனாக காண்பிப்பதற்காக அல்ல; உங்கள்மேல் மனதுருகுவதால் அப்படி சொல்கிறார். இயேசு திரளான மக்களைக் கண்டபோது மனதுருகினார் என்று வேதம் கூறுகிறது (மத்தேயு 9:35,36). அவர்கள், மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல இருப்பதாக அவர் கூறினார். அவர்கள் எங்கே செல்வார்கள்? எப்படி பிழைப்பார்கள்? நானே பிரதான மேய்ப்பன். நான் அவர்களுக்காக என் ஜீவனை அளிப்பேன். அவர்கள் பாவங்களையும் துக்கங்களையும் வேதனையையும் எடுத்துப்போடுவேன். நான் அவர்களை வாழ வைப்பேன் என்ற மனதுருக்கத்துடன் இயேசு உங்களைக் காண்கிறார். அதற்காகவே அவர் உங்களுக்கு அற்புதங்களைச் செய்கிறார்; கண்ணீரைத் துடைக்கிறார்; துக்கத்தை சந்தோஷமாக மாற்றுகிறார். இன்றைய வாக்குத்தத்தம், "வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது" (மத்தேயு 28:18) என்று கூறுகிறது. இயேசு, "சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, என் நாமத்தில் எதையும் கேளுங்கள். நான் அதை உங்களுக்குச் செய்வேன். உங்கள் பெரிய பிரச்னைகளைக் காட்டிலும் என் நாமம் பெரிதாயிருக்கிறது. ஆனால், நீங்கள் என் நாமத்தினாலே கேட்கவேண்டும்," என்று கூறுகிறார். "தேவன் எல்லாவற்றையும் செய்வார்," என்று உட்கார்ந்துவிட்டு பிறகு என்னை குறைசொல்லக்கூடாது. என் மகனே / என் மகளே, என்னிடம் கேள். ஜெபி. என்னிடம் கேள். அவ்வளவுதான். நான் செய்வேன். நீ கேட்கிறவற்றை செய்வேன்." எவ்வளவு தாழ்மை! அவர் நம்மீது கொண்டிருக்கும் அன்பு எவ்வளவு பெரியது. அவர், "என் பிள்ளையே, அப்பா, உனக்காகக் காத்திருக்கிறேன். அப்பா, உனக்காக எல்லாவற்றையும் செய்வேன்," என்று கூறுகிறார். அவர் உங்களை நேசிக்கிறார்.

இயேசு இந்த உலகில் இருந்தபோது என்ன அற்புதங்களைச் செய்தார்? முதலாவது, அவர் ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தார் (மத்தேயு 1:18). அவரால் ஒரு கன்னியின் வயிற்றில் பிறக்க முடியுமானால், உங்களுக்காக ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்க முடியாதா? அவர் உங்கள் வீட்டை ஆசீர்வதிப்பார்; உங்கள் படிப்பை, பொருளாதாரத்தை, இல்லறத்தை, எதிர்காலத்தை ஆசீர்வதிப்பார். ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உங்களுக்காக உண்டாக்குகிறார். அது அவருடைய வல்லமையாகும் (ரோமர் 4:17).

இரண்டாவதாக, பெருங்காற்றடித்து அலைகள் உயரமாக எழும்பியபோது, அவர் தண்ணீர்மேல் நடந்தார் (மாற்கு 6:49,50). அவர், "பயப்படாதே, நான்தான்," என்று கூறினார். அவர்கள், அவரை படகில் ஏற்றிக்கொண்டபோது, புயல் அமர்ந்தது. சமாதானமுண்டாயிற்று. இன்று அவர் உங்கள் படகுக்குள், உங்கள் வாழ்க்கைக்குள் வரும்போது சமாதானமுண்டாயிருக்கும். அதுவே இயேசு உங்களுக்குச் செய்யும் அற்புதம்.

மூன்றாவதாக, அவர் அனைவர் மேலும் கைகளை வைத்தபோது, சுகம் பெற்றனர் (லூக்கா 8:43,44). அவர் உங்களைத் தொடுவார். அவர் உங்களைத் தொடும்போது, நீங்கள் சுகம்பெறுவீர்கள். ஆம், நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிட்டு, "இயேசுவே, நீர் மாத்திரமே எனக்கு உதவ முடியும்," என்று கூறும்போது, இயேசுவின் வல்லமை உங்கள் வாழ்வில் பாயும்; சுகம் வரும். நீங்கள் குணமாக்கப்படுவீர்கள்.

நான்காவதாக, அவர் ஐந்து அப்பங்களை எடுத்து, அவற்றை திரள் கூட்டத்தினரை போஷிக்கும்படி பெருகப்பண்ணினார். திரளானோரை போஷிக்கும் அற்புதம் (லூக்கா 9:16,17). உங்கள் குடும்பத்துக்கு அவர் இதைச் செய்ய மாட்டாரா? அவர் உங்களை போஷிப்பார்; கடன்படாமல் காப்பாற்றுவார்.

அடுத்ததாக, அவர் உங்களை வியாதியிலிருந்து விடுவிப்பார். உங்கள் நோயைக் குணமாக்குவார். வியாதியை உங்களை விட்டு விலக்குவார் (லூக்கா 13:10-12). ஒரு பெண், பதினெட்டு ஆண்டுகளாக கூனியாயிருந்தாள். இயேசு அவளை அழைத்தார்; பிசாசை விரட்டினார்; அவளைத் தொட்டார்; அவளை பரிபூரணப்படுத்தினார். அவள் முற்றிலும் குணம்பெற்று நிமிர்ந்து நின்றாள். தேவன், உங்களுக்கு அப்படிச் செய்வார். இயேசுவுக்கு பரலோகத்திலும் பூமியிலும் அதிகாரம் உண்டு. அவர் உங்களை மனதுருக்கத்தோடு நோக்குகிறார். "பயப்படாதே, நான்தான்," என்று கூறுகிறார். இன்று நீங்கள் அவரது நாமத்தில் கேட்டால், அவரிடம் ஜெபித்தால், அவர் உங்கள் கண்ணீர் யாவையும் துடைப்பார். உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார். உங்கள் வாழ்வில் சமாதானத்தைக் கொண்டு வருவார். உங்கள் குடும்பத்துக்கு வேண்டியவற்றைக் கொடுப்பார்; உங்கள் வியாதியை குணமாக்குவார்; ஒன்றுமில்லாமையிலிருந்து உங்களுக்கு ஆசீர்வாதங்களை உண்டாக்குவார். உங்களை நேசிக்கும் இயேசுவின் அற்புதம் அதுவாகும்.

ஜெபம்:
தகப்பனாகிய தேவனே, அன்போடும் மனதுருக்கத்தோடும் என்னை நீர் நோக்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் கண்ணீரை, போராட்டங்களை, என் இருதயத்தில் உள்ள பாரங்களை நீர் அறிந்திருக்கிறீர். ஆண்டவரே, சகல அதிகாரமும் உமக்கு உள்ளது என்று விசுவாசிக்கிறேன். தயவாய் என் வாழ்வினுள் வந்து எனக்குள்ளான எல்லா புயலையும் அமர்த்தும். ஒன்றுமில்லாத நிலையில் எனக்கு ஆசீர்வாதங்களை உண்டாக்கி, என் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பீராக. என் சரீரம், மனம், குடும்பம், எதிர்காலம் எல்லாவற்றையும் உம் சுகமளிக்கும் வல்லமை தொடுவதாக. விசுவாசத்தோடு ஜெபிக்கவும், உம்மை முழுவதுமாய் நம்பவும் எனக்குக் கற்பித்தருளும். உம் சமாதானம், சந்தோஷம், அற்புதங்கள் என் வாழ்வில் புரண்டு வருவதாக என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.