அன்பானவர்களே, இயேசுவின் வாயிலாக உங்களுக்கு அற்புதங்களைச் செய்ய தேவன் விரும்புகிறார். இயேசு, "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்" (யோவான் 14:12) என்று கூறியுள்ளார். உங்கள்மேல் இயேசு வைத்திருக்கும் அன்பைப் பாருங்கள். இயேசு, மாம்சத்தில் வந்த தேவன் என்றும், அதனால் அவரால் எந்த அற்புதத்தையும் செய்ய முடியும் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். ஆனால், இயேசு, "என் பிள்ளைகளே, என் நாமத்தினாலே உங்களையும் அற்புதங்களைச் செய்யப்பண்ணுவேன். நீங்கள் நான் செய்கிறவற்றை விட பெரிய அற்புதங்களையும் செய்வீர்கள்," என்று கூறுகிறார். தேவன், அற்புதங்களைச் செய்கிறவர்; தம் அற்புதங்களைச் செய்யும் வல்லமையினால் உங்களையும் அற்புதங்களைச் செய்யும் கருவியாக மாற்றுகிறார். வேதம், "ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" என்று கூறுகிறது (யோபு 5:9). அவர், "பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்," என்றும் வாக்குப்பண்ணுகிறார் (யாத்திராகமம் 34:10).

ஆம், தேவன் உங்களுக்கு அற்புதங்களைச் செய்வார். "என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்," என்று இயேசு கூறியிருப்பதால்தான், நாம் அவரிடம் ஜெபிக்கிறோம். நீங்கள் விசுவாசிக்கும்போது, அவரால் உங்களுக்கு அற்புதங்களைச் செய்ய முடியும் (ரோமர் 4:17). இயேசு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவராயிருந்தார். அவர், நீங்கள் விசுவாசித்தால் சகலமும் உங்களுக்குக் கூடும் என்று கூறுகிறார். நீங்கள் மாத்திரம் அற்புதங்களை அனுபவிப்பதோடு அல்லாமல், மற்றவர்களும் இயேசுவின் நாமத்தினால் அற்புதங்களை அனுபவிக்கும்படி செய்வீர்கள். இதை வேதத்தில், பேதுருவும் யோவானும், நடக்க முடியாத மனுஷனிடம், "இயேசுவின் நாமத்தினால் நீ எழுந்து நட," என்றதும், அவன் குணம் பெற்று நடந்தது குறிப்பிடப்பட்டுள்ளதைக் கொண்டு அறிகிறோம் (அப்போஸ்தலர் 3:16). தேவன், பவுலின் கைகளினாலே விசேஷித்த அதிசயங்களைச் செய்தார்; அவனது உறுமால்களும் கச்சைகளும் கூட சுகத்தையும் விடுதலையையும் அளித்தன (அப்போஸ்தலர் 19:11,12). ஆம், தேவன், நீங்களும் நானும் வல்லமையுள்ள இயேசுவின் நாமத்தை பிரசித்தப்படுத்தும்போது, அற்புதங்களைக் கொண்டு வருவதற்கு நம்மையும் பயன்படுத்துகிறார்.

அந்த அற்புதங்கள் வாயிலாக, மக்கள் இயேசுவின் அன்பை கண்டுகொண்டதுடன், நம்பிக்கையையும் பெற்றார்கள். இன்றைக்கு, மனுஷரால் மெய்யான தீர்வுகளை அளிக்க முடியாத நிலையில், உலகில் வேறு எந்த நம்பிக்கையும் இல்லாததால் தேவன் உங்களுக்குத் தேவைப்படுகிறார். இயேசு, சிலுவையில் பலியானதினிமித்தம், எல்லோருக்குமான கிரயத்தை செலுத்தி விட்டார்; பாடுகள், வியாதி, பாவம், வேதனை எல்லாவற்றிலுமிருந்தும் உங்களை விடுவிக்கும் வல்லமை அவருக்கு இருக்கிறது. விசுவாசிக்கிறவர்கள், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய முடியும் என்று இயேசு கூறியுள்ளார் (மாற்கு 16:17). அவரின் நாமத்தினால், பிசாசுகள் ஓடும்; வாழ்க்கை மறுரூபமாகும்; வியாதியாயிருப்போர் குணமடைவார்கள். இதற்காக, தேவனுக்கு நீங்களும் நானும் தேவையாயிருக்கிறோம். மற்றவர்கள் கூறுவதை நாம் கவனிக்காமல், இயேசு கூறியவற்றையே பற்றிக்கொள்வோம். நம்பிக்கையில்லாமல் இருப்போரிடம் இயேசுவின் நாமத்தில் செல்வோம். அப்போது அவர்கள் அற்புதங்களையும் விடுதலையையும் பெற்றுக்கொள்வார்கள். இந்தக் கிருபைக்காக தேவனை நோக்கிக் கூப்பிடுவோம். இயேசுவின் நாமத்தை சுமந்து செல்லும் கருவியாக மாறும்படி நம்மை ஒப்படைப்போம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் அற்புதங்களைச் செய்யும் தேவன் என்று நான் விசுவாசிக்கிறேன். உம்மை முழுமையாக நம்பி, சந்தேகப்படாமல் விசுவாசத்தில் நடக்க எனக்கு உதவும். என் வாழ்க்கையில் உமது மகிமைக்காக அற்புதங்களைச் செய்வீராக. குணமாக்குவதற்கும், நம்பிக்கையையும் விடுதலையையும் அளிக்கும்படிக்கும் என்னை உம் கருவியாகப் பயன்படுத்துவீராக. உம் வல்லமையினாலும் ஞானத்தினாலும் தைரியத்தினாலும் என்னை நிரப்பும். உம் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து, விசுவாசித்து நடக்க எனக்கு உதவும். என் வாயிலாக அநேகர் உம் அன்பை அனுபவிக்கச் செய்யவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.