எனக்கு அருமையானவரே, வேதம், "இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்" (ஏசாயா 50:4) என்று கூறுகிறது. இன்னொரு மொழிபெயர்ப்பில் 'தேவன் ஞானவானின் நாவைத் தந்தருளினார்' என்று எழுதப்பட்டுள்ளது. ஆம், தேவனுடைய ஒரு வார்த்தை, இளைப்படைந்து பாடுபடுகிறவர்களை தூக்கியெடுக்கிறது. அப்படி தூக்கியெடுப்பதற்கு ஒரு கருவி தேவை. அந்தக் கருவி நீங்களாகவும் நானாகவும் இருக்கிறோம். அந்த வார்த்தையைப் பேசுவதற்கு அவர் கல்விமானின் நாவை, ஞானமுள்ள நாவை, தேவனுடைய மொழியைப் பேசுகின்ற நாவை தருகிறார்; அந்த நாவு இளைப்படைந்த இருதயங்களுக்கு அவருடைய வார்த்தையைப் பேசுகிறது. அதனாலே இயேசு, தம் சீஷர்களிடம், "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: நவமான பாஷைகளைப் பேசுவார்கள்" (மாற்கு 16:17) என்று கூறினார். இயேசுவை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் புதிய பாஷையை பேச வேண்டும். ஏன்? நாம் பெரும்பாலும் 'பழைய பாஷை'யையே பேசுகிறோம். நம்முடைய பிரச்னைகளையே திரும்ப திரும்ப பேசுகிறோம். "ஆண்டவரே, என்னுடைய பாடுகளை பாரும்," "நான் எப்போதும் வேதனையில் இருக்கிறேன்," "நான் ஒடுக்கப்படுகிறேன்," "ஏன் அவளுக்கு மட்டும் ஆசீர்வாதம்? எனக்கு இல்லை?" இப்படிப்பட்ட ஜெபங்கள் பதில்களை கொண்டு வருவதில்லை. நாம் நம்முடைய பிரச்னைகளையே பேசுகிறோம். தேவன் தம்முடைய திட்டத்தையே நாம் பேசவேண்டும், நம்முடைய வேதனையை அல்ல என்று நினைக்கிறார். அவருடைய திட்டம் எப்போதும் நன்மைக்கானதாகவே இருக்கிறது. ஆகவேதான் அவர் கல்விமானின் நாவை, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படும் நாவை கொடுக்கிறார்.
நாம் நவமான பாஷைகளை, பரலோகத்திலிருந்து வரும் வார்த்தைகளை பேசும்படி பரிசுத்த ஆவியானவரால் நிரப்புகிறார். வேதம், 'பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்' (ஏசாயா 28:11) என்று கூறுகிறார். நீங்கள் தேவனுடைய பாஷையை பேசும்போது, இளைப்பாறுதலை பெறுகிறீர்கள்; இளைப்படைந்தோர் தாங்கப்படுகிறார்கள். அவருடைய கிருபையினால் பொதுக் கூட்டங்களிலும் தொலைக்காட்சியிலும் என்னால் பெயர்களை அழைக்க முடிகிறது. நான் ஜெபிக்கும்போது, ஆண்டவர் என்னுடைய ஆவிக்குரிய கண்களை திறக்கிறார்; என் முன்னே நிற்கும் மக்களுக்கு அவருடைய பதில்களை நான் பார்க்க முடிகிறது. அவருடைய மனதுருக்கம் என் உள்ளத்தை நிறைக்கிறது. நான், "ஆண்டவரே, இந்த ஜனங்கள் என்னுடைய ஜெபத்தை நம்புகிறார்கள். நான் என்ன செய்யவேண்டும்?" என்று கூப்பிடுகிறேன். பரிசுத்த ஆவியானவர் எனக்குள் எழும்புகிறார். "நான் அற்புதங்களைச் செய்கிறேன் என்று அவர்களிடம் சொல்," என்று கூறுகிறார். சில நேரங்களில், அவர், "பாவத்தை விட்டு அவர்களை மனந்திரும்பும்படி கூறு. நான் அவர்களை விடுவிப்பேன்," என்றும் கூறுகிறார். அநேகர், "மனந்திரும்புங்கள். ஆசீர்வதிக்கப்படுவீர்கள்," என்று மட்டும் கூறுவார்கள். ஆனால், தேவன் தம் பிள்ளைகளுக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை அறிவிப்பதற்கு மறந்துவிடுவார்கள். மக்கள் நம்பிக்கையற்றவர்களாக, கண்டிக்கப்பட்டவர்களாக கடந்து செல்வார்கள். ஆனால் நம் தேவன், இளைப்படைந்தவர்களை தாங்குகிறவராக, மனந்திரும்புவதற்கு அழைக்கிறவராக இருக்கிறார். அவர் ஆசீர்வாதங்களை ஊற்றுகிறவராகவும் இருக்கிறார். ஆகவே தேவனுடைய ஊழியன், உண்மையையும் நம்பிக்கையையும் கொடுக்கும் தேவனுடைய பாஷைகளை பேச வேண்டும்.
இன்றைக்கு இந்த வரத்தைக் கேளுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்க முடியும். நவமான பாஷைகளை பேசுவதற்கான கிருபையை தேவனிடம் கேளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கையைக் குறித்த அவரது திட்டத்தை அறிந்துகொள்வீர்கள்; இளைப்படைந்தவர்களுக்கு அவரது வார்த்தைகளை அளித்து, அற்புதங்களைப் பெற்றுக்கொள்ள உதவுவீர்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் பேசும்போது, மக்கள் உங்களில் இயேசுவை காண்பார்கள்; உங்களை நேசிப்பார்கள்; உங்களைப் பற்றிக்கொள்வார்கள். தேவன்தாமே கல்விமானின் நாவை உங்களுக்குத் தருவாராக. ஓர் அருமையான சாட்சி. திருமதி மனோரமாவுக்கும் இரண்டு பிள்ளைகள். அவர்கள் மகள் ரட்சணா, ஆறு மாதக் குழந்தையாயிருந்தபோதே ஈரலில் பிரச்னையால் அவதிப்பட்டாள். பள்ளிக்குச் ஒழுங்காக செல்ல முடியவில்லை; சரியாக சாப்பிடவோ, தூங்கவோ முடியவில்லை. அடிக்கடி இரத்தம் மாற்ற வேண்டியதிருந்தது. குடும்பமே பயந்துபோயிருந்தது. பதினெட்டு ஆண்டுகள் வேதனைக்குப் பின்னர் பிலாஸ்பூரில் (சத்தீஸ்கர்) நடந்த இயேசு அழைக்கிறார் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அந்த பெரிய கூட்டத்தில் பரிசுத்த ஆவியானவர், "ரட்சணா, உங்களுக்கு ஈரலில் பிரச்னை இருக்கிறது. இயேசு உங்களை குணமாக்குகிறார்," என்று கூறும்படி ஏவினார். தேவ வல்லமை அவர்கள் மேல் இறங்கியது. ரட்சணா பூரண குணம் பெற்றார்கள். இன்றைக்கு அவர்கள் பூரண நலத்துடன் இருக்கிறார்கள். நன்றாக படிக்கிறார்கள். அரசு வேலைக்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை, தேவனிடமிருந்து ஒரு வார்த்தை. இப்போது அவர்கள் குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்; பிள்ளைகள் இளம் பங்காளர்களாக இருக்கிறார்கள். நீங்களும் அந்தக் குரலாக இருக்கலாம். அந்த வார்த்தையை பரலோகத்திலிருந்து கொண்டு வரலாம். இன்றைக்கு தேவனிடம் உங்களை ஒப்படைப்பீர்களா?
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய ஞானத்தினாலும், மனதுருக்கத்தினாலும், ஆவியினாலும் நிறைந்த கல்விமானின் நாவை நீர் எனக்குத் தருகிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, இனி நான் என்னுடைய வேதனையைக் குறித்துப் பேசாமல், உம்முடைய நோக்கத்தைக் குறித்து மாத்திரமே பேசுவேன். உம்முடைய உள்ளத்தைக் காட்டுகின்ற வார்த்தைகளை, இளைப்படைந்தோரை தாங்கும் வார்த்தைகளை, புண்பட்டோருக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை நான் பேசுவதற்கு தயவாய் உதவி செய்யும். விலையேறப்பெற்ற உம்முடைய அருமையான பரிசுத்த ஆவியினால் என்னை நிறைத்து, குற்றப்படுத்தாமல் உம்முடைய தெய்வீக திட்டத்தைப் பற்றி பேசும் நவமான பாஷையை எனக்கு தந்தருளும். மற்றவர்களின் தேவைகளை காண்பதற்கு என் ஆவிக்குரிய கண்களையும், உம்முடைய சத்தத்தை தெளிவாக கேட்பதற்கு என்னுடைய காதுகளையும் திறந்தருளும். உம்முடைய மனதுருக்கம் என் மூலமாக பாய்ந்து செல்வதாக. தேவையில் உள்ளோருக்கு ஜீவனை, சுகத்தை, வழிகாட்டுதலை கொடுப்பதற்கு என்னை கருவியாக்கும். மக்கள் என்னில் இயேசுவை காணட்டும்; உம்முடைய சத்தியத்தை என் மூலம் கேட்கட்டும்; உம்முடைய அன்பால் இழுக்கப்படட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.