அன்பானவர்களே, நீதியான பெண்மணியா? நீங்கள் நீதிமானா? ஆண்டவர் நீதியாய் நடக்கிறவர்களுக்கு சிறந்த ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணுகிறார். வேதம், "நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்" (நீதிமொழிகள் 13:25) என்று கூறுகிறது. இதற்கு என்ன அர்த்தம்? அவர்கள் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள் என்று அர்த்தமாகுமா? இல்லை. ஆண்டவர், அவர்களை வாழ்வில் எல்லாவிதங்களிலும் திருப்தியாக்குவார் என்றே அர்த்தம். அவர்களுக்கு எந்த உபத்திரவமோ, குறைவுகளோ இருக்காது. ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்து, மிக உயர்வாக கனப்படுத்துவார்.
ஆம், என் வாழ்வில் சமீபத்தில் இப்படி நடந்தது. என்னுடைய தேர்வு ஒன்றை நான் எழுதிக்கொண்டிருந்தபோது, முக்கியமான குறிப்பு ஒன்றை விட்டுவிட்டேன். செயல்முறை தேர்வின்போது அது நடந்தது. நான் தவற விட்டதை உணராமல், கேள்வி பதில் வேளைக்குச் (viva) சென்று அமர்ந்தேன். எனக்கு எப்படியிருந்திருக்கும் என்று உங்களில் பலரால் எண்ணிப்பார்க்கமுடியும். கேள்வி பதில்வேளையில் பேராசிரியர், "இதை நீங்கள் செய்தீர்களா?" என்று கேட்டார். உடனே நான், "ஆண்டவரே, அவ்வளவுதான். முடிந்தது. அடுத்த ஆண்டும் நான் வந்து இந்தத் தேர்வை எழுதவேண்டும்," என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், உண்மையைச் சொல்லிவிடவேண்டும் என்று எண்ணி, அவரிடம், "இல்லை சார். இதைச் செய்ய மறந்துபோனேன்," என்று கூறினேன். உடனே பேராசிரியரின் முகம் மாறியதைக் கண்டேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. ஆனாலும் அவர், "உங்களுக்கு பத்து நிமிஷம் தருகிறேன். போய் அதை மறுபடியும் செய்துவிட்டு வாருங்கள்," என்றார். அதைச் செய்துவிட்டு திரும்பினேன். நான் திரும்பி வந்தபோது, அவர் கூறியது என்னை அதிகமாய் தொட்டது. அவர், "ஷில்பா, நீங்கள் பெரிய தவறு செய்திருந்தீர்கள். இதனால் பாடத்தில் தோல்வியடைந்தும் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் உங்கள் தவற்றை உண்மையாய் ஒப்புக்கொண்டதால் உங்களை மன்னித்தேன்," என்று கூறினார்.
ஆமாம், அருமையானவர்களே, நாம் உண்மையாகவும் நீதியாயும் இருக்கும்போது இப்படித்தான் ஆண்டவரின் கிருபையை அனுபவிக்கிறோம். அந்தத் தருணத்தில் நான், "ஆண்டவரே, என்ன நடந்தாலும், நான் உண்மையைக் கூறிவிடப்போகிறேன். நான் தோல்வியுற்று அடுத்த ஆண்டு தேர்வு எழுத வேண்டியதிருந்தாலும் பரவாயில்லை," என்று எண்ணினேன். ஆனால், ஆண்டவர், நாம் நீதியை தெரிந்துகொண்டு அவருடைய நாமத்தை தரித்து செல்லும்போது நம்மை கிருபையுடன் நோக்குகிறார். இன்று நீதியாய் நடந்திடுங்கள். சூழ்நிலை இக்கட்டாக இருந்தாலும், நீதியை தெரிவுசெய்யுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார். அவர் என்னை ஆசீர்வதித்தார்; நான் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். ஆம், நீங்கள் நீதியாய் நடக்கும்போது ஆண்டவரின் தயவு உங்கள்மேல் இருக்கும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, ஆச்சரியமான உம் ஆசீர்வாதங்களுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் வழிகளை விட்டு நான் விலகிப்போய், பாவஞ்செய்த, இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்காக பொய் கூறிய தருணங்களை மன்னித்தருளும். சின்ன விஷயங்களில்கூட உண்மையாக, நீதியாக இருப்பதற்கு எனக்கு உதவும். என் தவறுகளை ஒப்புக்கொள்ளவும், எப்போதும் சரியானவற்றையே தெரிவு செய்யவும் எனக்கு தைரியத்தை அளித்திடும். உம் கிருபை எப்போதும் என் மீதும் உமக்குப் பிரியமான பிள்ளைகள்மேலும் இருப்பதாக. தேர்வு எழுதுகிறவர்களை ஆசீர்வதித்தருளும்; அவர்கள் படித்த எல்லாவற்றையும் நினைவில் வைப்பதற்கும், நன்றாக எழுதவும், மகா உயரங்களுக்கு எழும்பவும் உதவும். அவர்கள் வாழ்க்கை உம் நாமத்திற்கு மகிமை கொண்டு வரட்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


