அன்பானவர்களே, இன்று உங்களோடு தொடர்புகொள்வதில் மகிழ்ச்சி. "கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை" (ரோமர் 8:1) என்ற வசனத்தைத் தியானிப்போம். இந்த ஆச்சரியமான வாக்குத்தத்தின்படி நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஆக்கினைத்தீர்ப்பிருக்காது.
விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை இயேசுவின் முன் பரிசேயர் கொண்டு வரும் ஒரு சம்பவத்தை வேதத்தில் பார்க்கிறோம். இயேசு, ஆலய பிராகாரங்களில் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். பரிசேயர் அவரிடம் குற்றம் கண்டுபிடிக்க விரும்பினார்கள். அவர்கள் அந்தப் பெண்ணைக் கொண்டு வந்து, "மோசேயின் நியாயப்பிரமாணப்படி இந்தப் பெண் கல்லெறியப்படவேண்டும். நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்கள். இயேசு மௌனமாயிருந்தார்; அவர்களோ தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். பிறகு அவர், "உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் கல்லெறியக்கடவன்," என்று கூறினார். ஒருவர் பின் ஒருவராக கற்களைப் போட்டு விட்டு எல்லோரும் சென்றுவிட்டார்கள்.
பிறகு இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து, "ஸ்திரீயே, அவர்களை எங்கே? யாரும் உன்னை நியாயந்தீர்க்கவில்லையா?" என்று கேட்டார். அவள், "இல்லை ஆண்டவரே," என்று பதில் கூறினாள். இயேசு, "நானும் உன்னை நியாயந்தீர்ப்பதில்லை. போ. இனி பாவஞ்செய்யாதே," என்று கூறினார். தேவ இரக்கத்திற்கு இது எவ்வளவு வல்லமையான உதாரணம்! இயேசு, பாவியை நியாயந்தீர்க்கவில்லை. ஆனால், பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு நீதியாய் நடக்கும்படி அன்போடு அவளை அழைக்கிறார். அவளது கடந்த கால தவறுகளைக் கொண்டு முத்திரையிடவில்லை. மாறாக, அவளுக்கு மீட்பையும், புத்தம் புது ஆரம்பத்தையும் அளிக்கிறார்.
அவ்வண்ணமே, உங்கள் கடந்த காலத்தைக் கொண்டு மக்கள் முத்திரையிடலாம். அவர்கள் உங்களை தோற்றுப்போனவள்(ன்), பொய்யள்(ன்), ஏமாற்றுகிறவள்(ன்), மோசடிசெய்கிறவள்(ன்); மீட்பே இல்லாதவள்(ன்) என்று சொல்லலாம். அவர்கள் உங்கள் வாழ்க்கையிலிருந்து எந்த நன்மையும் கிடைக்காது என்று கூறலாம். நீங்கள் செய்த தவறுகளால் சிலர் உங்களை நிராகரித்திருக்கலாம்; புறம்பே தள்ளியிருக்கலாம். ஆனால் இயேசு வித்தியாசமாய் உங்களைப் பார்க்கிறார். அவர் உங்களை அன்புடன், இரக்கத்துடன், மனதுருக்கத்துடன் நோக்குகிறார்.
இன்று இயேசு, உங்களைப் பிடித்து வைத்திருக்கும் எல்லா பாவம், தோல்வி, காயத்திலிருந்தும் மீட்டுக்கொள்ள விரும்புகிறார். நீங்கள் குற்றத்திலும் வெட்கத்திலும் அகப்பட்டிருக்க அவர் விரும்பவில்லை. மாறாக, அவரது அன்பும் நீதியும் நிறைந்த புதிய வாழ்க்கைக்கு உங்களை அழைக்கிறார். பாவத்தை மேற்கொள்ள உங்களுக்கு உதவுவார்; அவரோடு நெருங்கி சஞ்சரிக்க பெலன் தருவார்.
அன்பானவர்களே, எல்லா பாவத்தையும், எல்லா வேதனையான நினைவையும், எல்லா அடிமைத்தனத்தையும், எல்லா காயத்தையும், தேவனை விட்டு புறம்பே இழுக்கும் எல்லாவற்றையும் பின்னே விட்டுவிடுங்கள். இன்றே கிறிஸ்துவின் மன்னிப்பையும் மீட்பையும் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் அளிக்கும் புதிய ஆரம்பத்தை அணைத்துக்கொள்ளுங்கள். தம்மோடு வாழும்படி தேவன் அன்போடு அழைக்கிறார்; அவர் வழிகளில் நடந்திடுங்கள்; அவரது பிள்ளையாக இருப்பதால் கிடைக்கும் சமாதானத்தை சந்தோஷமாய் அனுபவியுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை என்ற ஆச்சரியமான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எங்கள் பாவங்களை மன்னித்து, புதிய ஆரம்பத்தைத் தரும் உம் இரக்கத்திற்காக நன்றி செலுத்துகிறேன். எல்லா பாவ பழக்கத்தையும், அடிமைத்தனத்தையும், கவனச்சிதறலையும், உம்மிடமிருந்து விலக்கும் எல்லா பாரங்களையும் விட்டுவிட எங்களுக்கு உதவி செய்யும். நிராகரிப்பு, குறைகூறுதல் எங்களில் உண்டாக்கிய காயங்களை குணமாக்கியருளும்; மற்றவர்கள் எங்கள்மேல் போட்டுள்ள முத்திரைகளையும் அகற்றிடும். எங்கள் உள்ளங்களை உம் அன்பினால் நிறைத்து, கிறிஸ்துவுக்குள் நாங்கள் புதுச்சிருஷ்டிகளாயிருக்கிறோம் என்பதை நினைவுப்படுத்தியருளும். எல்லா சோதனைகளையும் மேற்கொண்டு, அனுதினமும் நீதியில் நடப்பதற்கு எங்களை உம் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தியருளும். உம் சத்தத்திற்கு செவிகொடுக்கவும், உம் வார்த்தையின்படி நடக்கவும், பரிசுத்தமாகவும், உம் பார்வைக்குப் பிரியமானபடியும் வாழவும் எங்களுக்கு உதவி செய்யும். உம் பிள்ளைகள் உம்மோடு புதிதாய் பயணிப்பதால் உம் சமாதானம், சந்தோஷம், பெலன் அவர்களை நிரப்பவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


