எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை" (லேவியராகமம் 26:6) என்பதே இன்றைய வாக்குத்தத்த வசனமாகும். நாம் எப்போது இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்? 3ம் வசனம், நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால் இந்த ஆசீர்வாதம் கிடைக்கும் என்று கூறுகிறது. நீங்கள் கர்த்தரின் வழிகளில் நடக்கிறீர்களா? இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள ஆண்டவரை நெருங்கி ஜீவிப்பது மிக மிக அவசியமாயிருக்கிறது.

தாவீது, "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" என்று கூறுகிறான் (சங்கீதம் 23:1). அன்பானவர்களே, அவ்வண்ணமே, கர்த்தரை உங்கள் தகப்பனாக, உங்கள் மேய்ப்பராக வைத்துக்கொள்ளவேண்டும். "கர்த்தர் என்னை வழிநடத்துவார்," என்பதே உங்கள் நம்பிக்கையாயிருக்கவேண்டும். சின்னவனான தாவீது, இராட்சதனாகிய கோலியாத்தின் முன்பாக நின்றான். கோலியாத், தலை முதல் கால் வரை கவசம் அணிந்திருந்தான். ஆனால், பாவம், தாவீதுக்கு மேய்ப்பனுக்கு இருப்பவற்றை தவிர வேறெதுவும் இல்லை. ஆனாலும், தேவனாகிய கர்த்தர்மேல் அவன் நம்பிக்கை இருந்தது. ஆம், நாம் எப்போதும் கர்த்தரையே நோக்கிப் பார்த்திருக்கவேண்டும். நாம் அவரைப் பற்றிக்கொள்ளவேண்டும்; அவருடன் பேச வேண்டும்; அவர் சமுகத்தில் காத்திருக்கவேண்டும். அப்படி பரிசுத்தமாக வாழவேண்டும்; எப்போதும் தேவனையே பற்றிக்கொள்ளவேண்டும். அப்போது ஆண்டவர் உங்கள்மேல் பிரியமாயிருப்பார்.

சின்னவனான தாவீது, கர்த்தர் தன்னுடன் இருந்ததால் கோலியாத்தை வெல்ல முடிந்தது. வேதம், "கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" என்றும், "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்" என்றும் கூறுகிறது (சங்கீதம் 34:10; 121:1,2). அன்பானவர்களே, நீங்கள் இன்றைக்கு எங்கே நோக்கிக்கொண்டிருக்கிறீர்கள்? இயேசுவின்மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? அவர்மேல் முழு நம்பிக்கையும் வைத்திருக்கிறீர்களா? இப்போது அவர் சமுகத்தில், "என் தகப்பனாகிய ஆண்டவரே எனக்கு உதவி செய்யும். உம்மையன்றி என்னால் எதுவும் செய்ய இயலாது. நீர் மாத்திரமே என் நம்பிக்கை," என்று கூறுவோம்.

ஜெபம்:
ஆண்டவரே, உம் கற்பனைகளில் நடக்கவும் உம் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் எனக்கு உதவி செய்யும். என் மேய்ப்பராயிருந்து அனுதினமும் என்னை வழிநடத்தும். உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளவும், தினமும் உம் சமுகத்தில் காத்திருக்கவும் எனக்குப் போதித்தருளும். இராட்சதர்கள் எனக்கு விரோதமாக எழும்பும்போது, என் நம்பிக்கை உம்மேல் இருப்பதாக. எனக்கு ஒத்தாசை தரும் உம்மீதே என் கண்கள் வைக்கப்பட்டிருக்கட்டும். உம்மாலன்றி என்னால் எதுவும் செய்ய இயலாது. என் வாழ்க்கையிலிருந்து எல்லா பயத்தையும் அகற்றிப்போட்டு உம் சமாதானத்தை அருளிச் செய்யும். ஆண்டவரே, நீர் மாத்திரமே என் நம்பிக்கையாயிருக்கிறீர் என்று அறிக்கை செய்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.