அன்பானவர்களே, "நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை" (அப்போஸ்தலர் 18:10) என்று ஆண்டவர் பவுலிடம் கூறுவதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். எவ்வளவு ஆறுதலான நிச்சயம்! தேவன், "நான் உன்னுடனேகூட இருக்கிறேன்" என்பதை மறுபடியும் மறுபடியும் கூறுகிறார். தேவனாகிய கர்த்தர் நம்முடன் இருக்கும்போது யாராலும் நமக்கு விரோதமாக நிற்க முடியாது. அவர் நம்மை கண்ணோக்குகிறார்; தமது பிரசன்னத்தை நம்மை சூழ்ந்துகொள்ளப்பண்ணுகிறார்; தீங்குக்கு நம்மை பாதுகாக்கிறார். மக்கள் நமக்கு விரோதமாக எழும்பும்போது, நமக்கு எதிராக தீமையான காரியங்களை பேசும்போது சிலவேளைகளில் நாம் பயப்படலாம். ஆனால் ஆண்டவர், "பயப்படாதே" என்று கூறுகிறார். அவர் யோசுவாவுடன் இருந்ததுபோல, இன்றைக்கு உங்களுடனும் இருக்கிறார். "நான் ... உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்" (யோசுவா 3:7). அதே தேவன், உங்களை உயர்த்தி ஜனங்களுக்கு முன்பாக கனம்பண்ணுவார். உங்கள் வழிகளை வாய்க்கப்பண்ணி, உங்கள் வாழ்க்கையை தம் வல்லமைக்கான சாட்சியாக விளங்கப்பண்ணுவார்.
தேவ திட்டத்தில் நீங்கள் நடக்கும்போது, எதிர்ப்பும் அதைரியமும் வரக்கூடிய தருணங்கள் உண்டு. ஆனாலும் தேவன் உங்களை தற்காப்பதாக, பாதுகாப்பதாக வாக்குப்பண்ணுகிறார். ஒருவரும் உங்கள் ஆத்துமாவை சேதப்படுத்த அவர் அனுமதிக்க மாட்டார். வேதம், "எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையும் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்" (யாத்திராகமம் 23:27) என்று கூறுகிறது. கர்த்தர்தாமே உங்களுக்கு முன்னே போவார்; உங்களுக்காக யுத்தங்களை நடத்துவார்; உங்கள் பாதையிலிருந்து எல்லா தடைகளையும் அகற்றுவார். ஒருகாலத்தில் உங்களை விரோதித்தவர்கள் தேவ கிருபை உங்கள் வாழ்க்கையில் விளங்குவதைக் கண்டு அதிசயிப்பார்கள். நீங்கள் தமக்குச் சொந்தமானவர்கள் என்பதால் உங்களைக் குறித்த பயத்தை அவர்கள் உள்ளங்களில் வைப்பார். கர்த்தர் உங்களைக் கனிகொடுக்கிறவர்களாக மாற்றி, தாம் வாக்குப்பண்ணிய தேசத்தை தந்து, உங்கள் எல்லையை விரிவாக்குவார். வேதம், "நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன்" (சகரியா 2:5) என்று கூறுகிறது. கர்த்தர் அக்கினி மதிலாக உங்களைச் சூழ்ந்துகொள்வார்; எப்பக்கமும் உங்களைப் பாதுகாப்பார்; அவரது மகிமை உங்களில் பிரகாசிக்கும்.
அன்பானவர்களே, கர்த்தர் உங்கள் சகாயரும் உங்களைக் காக்கிறவருமாயிருக்கிறார். அவர், "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை" (யோசுவா 1:5) என்று கூறுகிறார். இந்த வாக்குத்தத்தத்தை இன்று விசுவாசியுங்கள். எல்லா காலத்திலும், எல்லா யுத்தத்திலும், அவர் செய்யும்படி உங்களை அழைத்திருக்கும் எல்லா வேலையிலும் உங்களோடு இருப்பார். தைரியமாக முன்னே செல்லுங்கள். உங்கள் வேலையையும் ஊழியத்தையும் சந்தோஷத்தோடு செய்திடுங்கள். ஒரு மனுஷனும் பூட்டக்கூடாதபடி அவர் வாசல்களைத் திறப்பார். அவர் உள்ளங்களை உருகப்பண்ணி, உங்களுக்கு தயை பாராட்டி, உங்கள் குரலைக் கேட்கப்பண்ணுவார். வேதம், கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல என்று கூறுகிறபடி, உங்களைப் பார்க்கிற யாவரும் தேவனோடு நீங்கள் நடப்பதை அறிந்துகொள்வார்கள் (உபாகமம் 34:12). ஆம், நீங்கள் தேவனுக்குப் பிரியமான பிள்ளை. அவரது சமுகம் மற்ற யாவரிடமிருந்தும் உங்களை விசேஷித்துக் காட்டும்.
ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, நீர் எப்போதும் என்னோடிருப்பதாக வாக்குக்கொடுத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உம் சமுகத்தில் நடக்கும்படி என்னை தைரியத்தாலும் விசுவாசத்தாலும் நிரப்புவீராக. எல்லா தீங்குக்கும், சத்துருவின் தாக்குதலுக்கும் என்னை பாதுகாத்துக் கொள்ளும். எனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகட்டும். நடுவே மகிமை இருக்கும்படி உம்முடைய அக்கினி மதிலால் என்னைச் சூழ்ந்துகொள்ளும்.மனுஷர் கண்களில் தயவையும் என் உள்ளத்தினுள் சமாதானத்தையும் அருளிச்செய்யும். நான் கடந்து செல்லும்படி நீர் திட்டமிட்டிருக்கிற எல்லா வாசல்களையும் திறந்தருளும்.என் வாழ்க்கையை உம் கரம் ஆசீர்வதிக்கிறதை என்னை எதிர்க்கிறவர்கள் அனைவரும் காணட்டும். நீர் என்னோடு இருப்பதை ஜனங்கள் அனைவரும் அறியும்படி எல்லோருக்கும் முன்பாக என்னை உயர்த்தும். உம்முடைய மகிமைக்காக என்னை கனிகொடுக்கும்படி செய்து என் எல்லைகளை விரிவாக்கவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


