எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்" (ஓசியா 14:6) என்ற வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. யாரைப் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது? இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்தே இவ்வளவு அழகாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதம், "கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்" (சங்கீதம் 135:4) என்றும் கூறுகிறது. ஆம், இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரால் அவருக்கு விசேஷித்த சம்பத்தாக தெரிந்துகொள்ளப்பட்டனர். வேதம், "யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை" (ஏசாயா 44:21) என்று கூறுகிறது. கர்த்தர் இஸ்ரவேலைக் குறித்து இப்படியே கூறுகிறார்.
அவ்வண்ணமே, நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால், தேவனுடைய பிள்ளையாக மாறுவீர்கள். வேதம், "இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" (ஏசாயா 48:17) என்று கூறுகிறது. நீங்கள் பழைய ஏற்பாட்டை வாசித்தீர்களானால், இஸ்ரவேல் மக்கள் எவ்வாறு கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டார்கள் என்றும், கிட்டிச்சேர்க்கப்பட்டார்கள் என்றும், அவருடன் நெருங்கி சேர்ந்தார்கள் என்றும் கண்டுகொள்ளலாம். கர்த்தர், "நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை" என்று கூறுகிறார். இன்றும் பவுல் எழுதுகிறதைப் போல நாம் அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
வேதம், "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்" (கலாத்தியர் 2:20) என்று கூறுகிறது. அன்பானவர்களே, தேவன் அநேக ஆசீர்வாதங்களை உங்களுக்காக ஆயத்தம்பண்ணிவைத்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்குக் கொடுத்திருக்கிறீர்களா? இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கிறீர்களா? இப்போதும் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கலாம். எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் ஒப்படைக்கலாம். அவரை நெருங்கி ஜீவிப்பதான சிறந்த ஆசீர்வாதத்தை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை உமக்குச் சொந்தமாக தெரிந்துகொண்டதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே தாயின் கர்ப்பத்தில் என்னை உருவாக்கினீர். ஆண்டவரே, என்னை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்று நீர் அன்புடன் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நான் போகவேண்டிய வழியில் என்னை வழிநடத்தும். இனி நான் அல்ல; கிறிஸ்துவே என்னில் வாழும்படி கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்படுவதற்கு எனக்கு உதவும். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை கழுவி, உம்மிடம் கிட்டிச் சேர்த்திடும். உம்மோடு நெருங்கி ஜீவிக்கும்படியான ஆசீர்வாதத்தை எனக்கு அளித்தருள வேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


