அன்பானவர்களே, இன்றைக்கு தேவன் தம் ஆனந்த தைலத்தை நம்மேல் ஊற்றப் போகிறார். அவரது வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த ஆசீர்வாதத்தை நாம் அடைகிறோம். தேவனுடைய வார்த்தை, "என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்" (எசேக்கியேல் 37:14) என்று சொல்லுகிறது. ஆம், இன்று தேவ ஆவியின் புதிய பெருமழை நமக்குள் பொழியும். இந்த வேத வசனம் உரைக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களை நீங்கள் பார்த்தால், "மிகவும் வறட்சியாக உள்ளது. எங்கள் வாழ்க்கை உலர்ந்துபோயுள்ளது. எங்கள் வாழ்க்கையில் எந்த நன்மையும் நடக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டது," என்று அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் கர்த்தர் இந்த வார்த்தையை அவர்களுக்கு உரைத்தார்.
"ஆண்டவரே, என் வாழ்க்கையில் இந்தப் பகுதியெல்லாம் உலர்ந்து காணப்படுகிறது. எனக்கு ஏற்ற துணையைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வறண்டுபோயுள்ளது. குடும்ப வாழ்க்கையில் எந்த சந்தோஷத்தையும் என்னால் காண முடியவில்லை. என் வியாபாரத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆண்டவரே, என் வாழ்வில் எந்த நன்மையையும் காண இயலவில்லை. எனக்கு எந்த சந்தோஷமும் இல்லை. நான் என்ன செய்ய முடியும்? ஆண்டவரே, என் நம்பிக்கை எல்லாம் போய்விட்டது," என்று நீங்கள் சொல்லலாம். அன்பானவர்களே, இந்தத் தருணத்தில், நம் மனித மனதால் எந்த நம்பிக்கையையும் உருவாக்க முடியாது. ஆனால், கர்த்தர் தம் ஆவியை நமக்குள் ஊற்றும்போது, அவர் நம் மனதை புதுப்பித்து, தம் சந்தோஷத்தால் நம்மை நிரப்புகிறார். அப்போது நாம் ஆண்டவர் நம்மை என்ன செய்யபோகிறாரோ அதன்படி சிந்திக்க ஆரம்பிப்போம்; நம் எதிர்காலம் அப்போது திறக்கும்.
அவர், "நான் என் ஆவியை உனக்குள் ஊற்றுவேன்; நீ உயிரடைவாய்," என்று கூறுகிறார். தேவன் அப்படியே தீர்க்கதரிசனம் உரைக்கிறார். ஆவியானவர், நாம் நம்பிக்கையற்று செத்துப்போகாமல், ஜீவிக்கும்படி செய்வார். "உன் சொந்த நிலத்தில் உன்னை நிலைப்படுத்துவேன்," என்றும் அவர் கூறுகிறார். நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் இடம் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டுப் போகும் என்று நீங்கள் நினைக்கலாம்; உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை இழந்துபோனதாக நினைக்கலாம்; அதில் நம்பிக்கையே இல்லாமற்போகலாம். ஆனால், ஆண்டவர், "அந்த இடத்தில் நான் உன்னை நிலைப்படுத்துவேன். நான் உனக்குத் தந்திருக்கும் இடத்தில் சந்தோஷத்துடன் உன்னை நிலைப்படுத்துவேன்," என்று கூறுகிறார், ஆமென். உங்கள் இல்லறம் பிழைக்கும். ஏற்ற துணையை நீங்கள் கண்டு, உங்களைக் குறித்த தேவனுடைய திட்டத்தில் பிரவேசிப்பீர்கள். இந்த ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்வோமா?
ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, உம் ஆனந்த தைலத்தை என்மேல் ஊற்றுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்வில் வறண்டுபோய், வெறுமையாகக் காணப்படும் இடங்களில் உம் ஜீவ சுவாசத்தை ஊதும். தயவாய் உம் பரிசுத்த ஆவியால் என்னை நிறைத்து என் உள்ளத்தை புதுப்பியும். ஆண்டவரே, எனக்குள் இருக்கும் நம்பிக்கையின்மையை முற்றாய் அகற்றுவீராக. உம் சந்தோஷம் எனக்குள் எழுந்து, என் வாழ்வில் நிரம்பி வழிவதாக. இழந்துபோனவையாய், உயிரற்றவையாய் காணப்படுகிறவை யாவற்றையும் சீர்ப்படுத்துவீராக. நீர் எனக்கென்று ஆயத்தம் பண்ணியிருக்கிற இடத்தில் என்னை நிலைநிறுத்துவீராக. இன்று உம் ஜீவனையும் வாக்குத்தத்தத்தையும் பெற்றுக்கொள்கிறேன் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


