அன்பானவர்களே, இன்று உங்களோடு தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். "உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்" (சங்கீதம் 18:29) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். அன்பானவர்களே, இன்று ஏதேனும் சூழ்நிலையை ஜெயிக்கமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறீர்களா? ஏதாவது பணத்தேவையில், தேவன் அருளுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். வேலைக்காக நெடுங்காலம் காத்திருக்கலாம். ஒருவேளை பதவி உயர்வுக்காக பல ஆண்டுகள் காத்திருக்கலாம். குடும்பத்தில் கணக்கற்ற பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருக்கலாம் அல்லது எதிர்காலம் நிச்சயமில்லையே என்ற கவலையில் இருக்கலாம்.

ஆனால் இன்று, தாவீது கூறுவதுபோல உங்கள் வழியில் எதிர்ப்படும் எல்லா தடைகளையும் தேவனுடைய உதவியால் தாண்டுவீர்கள். ஆம், விரோதிகளை தோற்கடிப்பதற்கு தேவன், தாவீதுக்கு உதவியபோது, அவன், "உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்" என்று பாடினான். இன்று ஆண்டவரின் உதவியால் நீங்களும் எல்லா தடைகளையும் தாண்ட முடியும்.

சீஷர்கள் கலிலேயா கடலில் படகில் சென்று கொண்டிருந்தபோது, கடுங்காற்று வீசியதை வேதத்தில் காண்கிறோம். தாங்கள் அமிழ்ந்து மாண்டுபோவோம் என்றே அவர்கள் எண்ணினர். அப்போது திடீரென்று, ஒருவர் தண்ணீரின்மேல் நடந்துவருவதைக் கண்டனர். அவர், இயேசு என்று அவர்கள் உணர்ந்தபோது, பேதுரு, படகிலிருந்து இறங்கி அவரை நோக்கி தண்ணீர்மேல் நடக்கத் தொடங்கினான். ஆம், பேதுரு, இயேசுவையே நோக்கிப் பார்த்தவனாய் அவரை நோக்கி நடந்தான். ஆனால், திடீரென்று அவன் காற்றையும் அலையையும் பார்த்தபோது, மூழ்கத் தொடங்கினான். உடனே, இயேசு அவனிடம் வந்து, கரத்தைப் பிடித்துக் காப்பாற்றினார்.

அவ்வண்ணமே, நாமும் அதிக விசுவாசத்துடன், "தேவன் எல்லா பிரச்னைகளிலிருந்தும் என்னை விடுவிப்பார்," என்று கூறவேண்டும். ஆண்டவர்மேலேயே நம் கண்களை வைத்திருக்கவேண்டும். ஆனால், பிரச்னை எழும்பும்போது, நம் கவனம் அந்தப் பிரச்னைகள்மேல், நமக்கு விரோதமாக பேசும் மக்கள்மேல் திரும்பக்கூடும். நாம், "என்னால் இதை மேற்கொள்ள முடியாவிட்டால் என்ன நடக்கும்? இப்படி எனக்கு நடந்துவிட்டால் என்ன செய்வது? நான் தோற்றுபோனால்? நான் மரித்துவிட்டால்?" என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். அப்படிப்பட்ட எண்ணங்கள் நம் உள்ளங்களை பயத்தாலும் கலக்கத்தாலும் நிரப்பும். ஆனால், இயேசு வந்து தம் கரத்தால் நம்மை பற்றி, இரட்சிப்பார். பேதுருவை  விடுவித்ததுபோல, நம்மையும் விடுவிப்பார். அப்போது தாவீதைப்போல, "தேவனால் என்னால் ஒரு சேனைக்குள் செல்லமுடியும்; மதிலை தாண்ட முடியும்," என்று கூறுவோம். இயேசு நம்மை விடுவிப்பதால், அவரது பெலத்தால் எல்லா தடைகளையும் மேற்கொள்ள முடியும். இன்று உங்கள் கண்களை இயேசுவின்மேல் வைத்திடுங்கள். அவரே உங்கள் பெலன். நீங்கள், "நான் மூழ்கிக்கொண்டிருக்கிறேன்," என்று கூறலாம். ஆனால், இயேசு, உங்களை விடுவிக்க தம் கரத்தை நீட்டுகிறார். நீங்களும் தாவீதைப்போல பாடுவீர்கள். ஆகவே, இன்றே விசுவாசித்திடுங்கள். அன்பானவர்களே, வாழ்க்கையில் தேவன் அற்புதம் செய்வதை நீங்கள் காண்பீர்கள்.

ஜெபம்:
அன்பு பரம தகப்பனே, நீரே என் பெலனும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர். எல்லா தடைகளையும் மேற்கொள்வதற்கு  உதவி செய்து, வாழ்வின் எல்லா பிரச்னையிலிருந்தும் என்னை விடுவித்தருளும். என் குடும்பத்தில் பெரிய சமாதானத்தை அருளி, நான் வேலைசெய்யுமிடத்தில் உள்ள எல்லா பிரச்னைகளையும் அகற்றிடும். என்னை உயர்த்தி, என் பொருளாதார தேவைகள் எல்லாவற்றையும் அருளிச் செய்திடும். என் எதிர்காலத்தையும் படிப்பையும் நான் செய்யும் எல்லா முயற்சிகளையும் ஆசீர்வதித்தருளும். உம் பலத்த கரத்தை நீட்டி, எல்லா புயலிலிருந்தும் என்னை மீட்டருளும்; என் சரீரத்தை குணமாக்கிடும். எப்போதும் உம்மேலேயே கண்களை வைத்திருக்கப்பண்ணும்; பயம் ஒருபோதும் என்னை மேற்கொள்ள அனுமதிக்காதிரும். முன்னேறிச் செல்லவும், எல்லா சவால்களையும் உம் பலத்த வல்லமையினால் மேற்கொள்ளவும் உதவிடவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.