பிரியமானவர்களே, "நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்" (எரேமியா 31:25) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். உங்களால் சிறந்ததை செய்தும் இருதயம் விடாய்த்துப்போனதை எத்தனை முறை உணர்ந்திருப்பீர்கள்? நீங்கள் நீதியாய் வாழ்ந்திருக்கலாம்; உதாரத்துவத்தோடு கொடுத்திருக்கலாம்; தாராளமாய் மன்னித்திருக்கலாம்; உங்கள் குடும்பத்துக்காக, உங்கள் அலுவலகத்துக்காக அல்லது ஆண்டவரின் ஊழியத்தில் இடையறாது உழைத்திருக்கலாம். ஆனாலும் உங்கள் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமலிருக்கலாம்; உங்கள் ஆத்துமா களைத்துப்போய், வெறுமையால் சலித்திருக்கலாம். தேவன் உங்கள் வேதனையையும் களைப்பையும் புரிந்துகொண்டிருக்கிறார். ஆகவேதான் இயேசு, "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28) என்று அழைக்கிறார். நீங்கள் மாத்திரமே குடும்பத்தின், வேலையின் பொறுப்புகளை சுமந்தால் அவை மிகுந்த பாரமாகிவிடும். அவற்றை இயேசுவிடம் கொண்டு வந்தால், இளைப்பாறுதலையும் சமாதானத்தையும் தருவதாக அவர் வாக்குப்பண்ணுகிறார்.
ஆண்டவர், "என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது" (மத்தேயு 11:29,30) என்று தொடர்ந்து கூறுகிறார். நம்முடைய பிரச்னைகளின் நுகத்தை, நம் குடும்பத்தின் போராட்டத்தை, வேலையின் அழுத்தத்தை நம்மேலேயே போட்டுக்கொள்வதுதான் இடையூறாகிறது. அதனால்தான் நம் பெலன் தளர்ந்து, ஆத்துமா நசுங்கியதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆண்டவர், இதுபோன்ற கடினமான பாரங்களைக் கொடுத்துவிட்டு, அவரது இலகுவான, மெதுவான சுமையை ஏற்றுக்கொள்ளும்படி அழைக்கிறார். அவரது நுகம் என்பது என்ன? எல்லாவற்றையும் அவரது சித்தத்தின்படி செய்வதே ஆகும். அவரது நாமத்தில் மற்றவர்களை நேசிப்பது, அவரது நாமத்தில் மன்னிப்பது, அவரது நாமத்தில் மற்றவர்களுக்காக ஜெபிப்பது, அவரது சாட்சியாக ஊழியம் செய்வதே அவரது நுகமாகும். இப்படிச் செய்யும்போது, அவரது பிரசன்னம் நம்மை நிறைக்கும்; அவரது சமாதானம் நம்மை தாங்கும்; நம்முடைய பொறுப்புகள் பெருஞ்சுமையாக தெரியாது.மாறாக, ஆண்டவர்தாமே நம்மை சுமப்பார்; எல்லா சுமைகளையும் இலகுவாக்குவார்.
ஆண்டவர், இளைப்பாறுதல் தருவதாக மட்டுமல்ல; சீர்ப்படுத்துவதாகவும் வாக்குப்பண்ணுகிறார். உங்கள் ஆத்துமா, ஜெபங்களுக்கு பதில் கிடைக்காததால், நிறைவேறாத கனவுகளால், ஆசீர்வாதங்கள் தாமதிப்பதால் ஏங்கிக்கொண்டிருக்கலாம்; தேவன், தாம் திரும்ப தருவதாக, உயிர்ப்பிப்பதாகக் கூறுகிறார். "உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்" என்று இயேசு வாக்குப்பண்ணியுள்ளார் (யோவான் 16:20). உங்கள் ஆவியை அவருடைய ஆவியுடன் இணைக்கும்போது, உங்களுக்குள் ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் (1 கொரிந்தியர் 6:17; யோவான் 7:38). நீங்கள் தேவனுடன் ஜெபத்தில், ஊழியத்தில், அவருடைய அன்பை பகிர்ந்துகொள்வதில் பங்காளராகும்போது, அவருடைய சந்தோஷம் உங்கள் வாழ்வில் நிரம்பி வழியும். நீங்கள் வெறுமையாக உணரும் எல்லா பக்கமும் பரிபூரணத்தினால் நிரப்பப்படும். எல்லா துக்கமும் சமாதானமாக மாறும். எல்லா குறைவுகளும் தெய்வீக கொடையினால் நிரப்பப்படும். ஆண்டவர் இன்றைக்கு, "நான் உன்னை திருப்தியாக்குவேன். நீ இழந்தவற்றை, நான் திரும்ப தருவேன். நான், இளைப்பாறுதலையும் செழிப்பையும் அளிப்பேன்," என்று கூறுகிறார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, விடாய்த்த என் ஆத்துமாவை பரிபூரணத்தினால் நிறைப்பதாக நீர் வாக்குப்பண்ணுவதற்காக ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய இளைப்பாறுதலால் என்னை நிறைத்து, என் உள்ளத்திலிருந்து பாரமான சுமையை அகற்றியருளும். நான் வெறுமையாக, களைப்பாக உணரும் வாழ்க்கையின் பகுதிகளை பரிபூரணத்தால் நிரப்பியருளும். உமக்கு நான் சந்தோஷத்துடன் ஊழியம் செய்வதால், எனக்குள் ஜீவத்தண்ணீருள்ள நதிகள் பாயட்டும் என்று இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.