அன்பானவர்களே, இன்றைய தினம் எனக்கு மிகவும் விசேஷித்ததாகும். என் மகள் கேட்லின் அன்னா தினகரனின் பிறந்தநாளாகும். இன்று அதிகாலையிலேயே அவள் பரவசமாக எழும்பி, சந்தோஷத்துடன் இன்றைக்கு தன் பிறந்தநாள் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தாள். தமக்குப் பயந்த குழந்தையாக கேட்லினை அருளியதற்காக எப்போதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவள், ஆண்டவருக்கென்று சிறந்ததைச் செய்ய எப்போதும் விரும்புவாள். புன்னகையுடன், உண்மையான அக்கறையுடன், அன்புடன் அவள் மக்களைக் கவனித்துக்கொள்வாள். பிள்ளைகள் உண்மையாகவே தேவன் அருளும் ஈவாகும். இன்று நாங்கள் இந்த அருமையான ஆசீர்வாதத்திற்காக, கேட்லினுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். சாட் (chat) அல்லது மின்னஞ்சல் (email) வாயிலாக நீங்களும் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவியுங்கள்.
இந்த விசேஷித்த தினத்தில், தேவன் நமக்கு அருமையான ஈவை, "நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்" (ஏசாயா 55:12) என்ற வசனத்தின் வாயிலாக அளித்திருக்கிறார். தம் பிள்ளைகள் பயம், கலக்கம், கண்ணீர் இன்றி சந்தோஷத்துடன், தேவ சமாதானம் வழிநடத்த வாழ்வில் முன்னேறவேண்டும் என்றே கர்த்தர் விரும்புகிறார். ஆண்டவர், "என் பிள்ளையே, அழாதே. மனந்தளராதே, நான் உன்னோடு வருகிறேன்," என்று கூறுகிறார்.
ஒரு கூட்டத்தினர் சுற்றுலா செய்வதாக எண்ணிக்கொள்ளுங்கள். வழக்கமாக, அப்படிப்பட்ட பயணத்தை ஒருங்கிணைப்பவர், பெரிய நெருக்கத்திற்குள்ளும் பதற்றத்திற்குள்ளும் இருப்பார். எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தாலும், திட்டமிட்டபடி அனைத்தும் நடக்குமா என்ற கவலையில் இருப்பார். போக்குவரத்து, உணவு, நேரம், ஆகியவற்றைக் குறித்து மட்டுமல்ல, எல்லோரும் சந்தோஷமாக பயணிக்கிறார்களா என்றும் கவலைப்படுவார். ஆனாலும், அந்தப் பயணத்தில் இணைந்துகொண்டவர்கள் கவலையற்று, சந்தோஷமாக இருப்பார்கள். பாடுவார்கள், சிரிப்பார்கள், பயணத்தை அனுபவித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவ்வப்போது, அதை ஒருங்கிணைத்தவரிடம், "ஏன் கவலையாக இருக்கிறீர்கள்?" என்றும் கேட்பார்கள். பயணம் செய்யும் அனைவரும் அதை ஒருங்கிணைத்தவரை முற்றிலும் நம்பி, மகிழ்ச்சியாய் அனுபவிப்பார்கள்.
அவ்வண்ணமே, வாழ்வின் புதிய கட்டத்துக்குள் அடியெடுத்து வைக்கலாம். ஒருவேளை, புதிதாக ஒன்றை ஆரம்பிக்கலாம். உயர் கல்வி பெறுவதற்காக நீங்கள் மாத்திரமே வெளிநாடு செல்லலாம். ஒருவேளை இன்னொரு இடத்தில் புதிய ஊழியத்தைத் தொடங்கலாம். வேலைக்கென குடும்பத்துடன் வேறு இடத்துக்குக் குடிபெயரலாம். எந்தப் புதிய அத்தியாயம் உங்கள் முன் இருந்தாலும், ஆண்டவர், "அதை என் கரங்களில் கொடு. நான் அதைத் திட்டம் பண்ணட்டும்," என்று கேட்கிறார். தேவனே முழு உலகத்தையும் வடிவமைத்தவர். உங்கள் எதிர்காலத்தைக் குறித்து எல்லா விவரங்களையும் அவர் அறிந்திருக்கிறார். உங்களுக்குச் சிறந்ததைத் திட்டம் பண்ணுவதாக அவர் வாக்குக்கொடுக்கிறார். ஆகவே, கலங்கவோ, பாரப்படவோ வேண்டாம். மகிழ்ச்சியோடு அவரைப் பின்பற்றுங்கள்; அவரது சமாதானம் உங்களை வழிநடத்துவதற்கு இடங்கொடுங்கள். அவர் தம் வேளையில், தம் பரிபூரண சித்தப்படி எல்லாவற்றையும் நேர்த்தியாக்குவார்.
இன்று நம் கவலைகள், பயங்கள், நிச்சயமின்மைகள் எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் ஒப்படைப்போம். அவரை நாம் முழுவதுமாக நம்பும்போது, அவரது சந்தோஷம் நம்மைப் பெலப்படுத்தும்; அவரது சமாதானம் நம்மை வழிநடத்தும். ஆண்டவர், "இந்தப் பொறுப்பு இப்போது என்னுடையது. என் மகிமைக்கென நான் இதைச் செய்வேன்," என்று கூறுகிறார். அவர் வாசல்களைத் திறக்கிறார்; வேண்டிய எல்லாவற்றையும் அருளிச்செய்கிறார்; மக்களுக்கு முன்பு தயவை தருவார்; தம் பெரிதான கிருபையை உங்கள்மேல் பொழிந்தருளுவார். நீங்கள் அவருடன் நடக்கும்போது, அவரது ராஜ்யத்திற்காக பெரிய காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் பரிபூரண சமாதானத்தோடு என்னை சந்தோஷத்திற்குள் நடத்துகிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு புதிய அத்தியாயத்தையும் உம் அன்பின் கரங்களில் ஒப்படைக்கிறேன். எல்லா பயத்தையும், கலக்கத்தையும், குழப்பத்தையும், பாரத்தையும் என் இருதயத்திலிருந்து எடுத்துப்போடும். உம் திட்டங்களை நம்புவதற்கும், உம் வழிகாட்டுதல்களை தயக்கமின்றி பின்பற்றவும் எனக்கு உதவும். எனக்கு சரியான வாசல்களை திறந்து, நான் செல்லுமிடமெங்கும் கிருபையை அளித்தருளும். என் தேவைகளையெல்லாம் உம் மகிமையின் ஐசுவரியத்தின்படி எனக்கு அருளிச்செய்தருளும். என்னை உம் சந்தோஷத்தால் நிறைத்து, உம் கிருபையால் பெலப்படுத்தியருளும்; உம் சமாதானம் என் இருதயத்தையும் சிந்தையையும் காத்துக்கொள்ளட்டும். உம் மகிமைக்கென்று என்னை பயன்படுத்தி, உம் நோக்கத்தை உண்மையாய் நிறைவேற்ற உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


