அன்பானவர்களே, இன்று உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். "நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்" (ரோமர் 5:1) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, இது ஓர் அருமையான வசனம். தேவன், நீங்கள் அவருடன் சமாதானமாய் இருக்கவேண்டும் என்றும், தம் சமாதானத்தை உங்களுக்கு அருளவும் விரும்புகிறார். இந்த வசனத்தை வாசிக்கும்போது, எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு சிறுபையன் இருந்தான். அவனுக்கு வீட்டுக்குள் பந்து விளையாட விருப்பமாயிருந்தது. ஆனால், அவன் அப்பா, "நீ வீட்டுக்குள் பந்து விளையாடினால், எதையாவது உடைத்துவிடுவாய். ஆகவே, வெளியே சென்று விளையாடு," என்று கூறினார். ஒருநாள், தகப்பன் வீட்டில் இல்லாதநேரத்தில், அவன் வீட்டுக்குள் பந்து விளையாடினான். வீட்டின் ஹாலில் வைக்கப்பட்டிருந்த அலங்கார ஜாடியின்மேல் பந்து பட்டது. அந்தக் கண்ணாடி ஜாடி உடைந்து போனது. உடைந்த துண்டுகள் தரையில் கிடப்பதைப் பார்த்த அவன், மிகவும் பயந்துபோனான். "ஐயோ, அப்பா வீட்டுக்குள் பந்து விளையாடக் கூடாது என்று சொன்னாரே! இப்போது இந்த ஜாடி உடைந்துபோனதே? அவர் வந்து என்னை திட்டப்போகிறார்," என்று எண்ணினான். ஆகவே, அவன் உடைந்துபோன துண்டுகள் எல்லாவற்றையும் எடுத்து மீண்டும் அவற்றை ஒட்ட முயற்சித்தான். ஆனால், முடியவில்லை.
பிறகு அவன், "சரி. நான் அப்பாவிடம் கூறிவிடுகிறேன்," என்று எண்ணினான். அவன் தந்தை வேலையிலிருந்து திரும்பியதும், ஜாடி உடைந்திருந்ததைக் கண்டார். அந்தச் சிறுபையன், "அப்பா, நான் ஜாடியை உடைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். கோபப்படாதீர்கள்," என்று கூறினான். அவன் அப்பா குனிந்து, "நீ என்னிடம் மறைக்காமல், உண்மையை சொன்னதினால் சந்தோஷம். இந்த ஜாடியை பார்க்கிலும் நீ எனக்கு முக்கியம்," என்று கூறி அவனை அணைத்துக்கொண்டார். ஆம், அன்பானவர்களே, அவ்வண்ணமே, நாமும் தேவன் செய்யக்கூடாது என்று வெளிப்படையாகக் கூறும் காரியங்கள் சிலவற்றை செய்துவிடலாம். பிறகு, "ஐயோ, தேவன் ஒருபோதும் இதை மன்னிக்கமாட்டார். மறுபடியும் அவரிடம் செல்லுவதற்கு எனக்குத் தகுதியில்லை," என்று எண்ணலாம். தேவன் கோபம் கொள்வார் என்று நினைத்து விலகியிருக்கலாம்; நம்மை அவருக்கு மறைத்துக்கொள்ளலாம்.
ஆனால் அன்பானவர்களே, தேவன், நாம் அவரிடம் சென்று நம் இருதயங்களில் உள்ளவற்றை சொல்லவேண்டும் என்று விரும்புகிறார். நாம் ஏதாவது தவறாய் செய்திருந்தால், நம் பாவங்களை அறிக்கை செய்யவேண்டுமென்று விரும்புகிறார். நாம் அப்படிச் செய்யும்போது, அவர் நம்மை மன்னிப்பார் என்று விசுவாசிக்கும்போது, அவர் நம்மை அணைத்துக்கொள்வார்; மறுபடியும் சேர்த்துக்கொள்வார்; அவருடனான நம் உறவு சமாதானமானதாக விளங்கும். ஆம், அன்பானவர்களே, தேவன் நம்மை எப்போதும் மறுபடியும் சேர்த்துக்கொள்வார் என்பதை அறிந்து சமாதானமாயிருப்போம். அவருக்கு எல்லாம் தெரியும் என்பதால், அவரிடமிருந்து எதையும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, அவரில் விசுவாசம் வைப்போம்; அவர் கூறுகிறவற்றை செய்வோம். தேவனுடன் சமாதானமான உறவு உங்களுக்கு உண்டாகட்டும். இன்று ஆண்டவரில் விசுவாசம் வைத்திடுங்கள்; அவர் உங்களுக்குத் தகப்பனாயிருப்பார்; அவருடன் நீங்கள் சமாதானமாயிருப்பீர்கள். விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படுவோம்; தேவனுடன் சமாதானமாயிருப்போம் என்ற இந்த அருமையான வாக்குத்தத்தத்திற்காக அவரை ஸ்தோத்திரிப்போமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் தோற்றுப்போனாலும் என்னை நேசிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பயத்தாலும் வெட்கத்தாலும் உமக்கு ஒளிந்துகொண்டதற்காக என்னை மன்னித்தருளும். நேர்மையோடும் விசுவாசத்தோடும் உம் சமுகத்தில் தைரியமாக வருவதற்கு எனக்கு உதவும். என்னை புறக்கணிக்காமல் இரக்கத்தோடு அரவணைத்துக்கொள்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் சமாதானம் என் இருதயத்தை நிரப்பி, எனக்குள்ளிருந்து எல்லா குற்றத்தையும் அகற்றுவதாக. உம்மை நெருங்கி ஜீவிக்கவும் உம் சத்தத்துக்குக் கீழ்ப்படியவும் எனக்குக் கற்பித்தருளும். எப்போதும் எனக்கு அன்பான தகப்பனாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


