அன்பானவர்களே, தேவன் உங்களை, கடந்துபோகிற அல்லது தற்காலிக சமாதானத்தினால் அல்ல; தம் பூரண, நித்திய சமாதானத்தினால் நிரப்ப விரும்புகிறார். அவரே நித்திய பிதாவும் சமாதானப் பிரபுமாயிருக்கிறார். வாழ்வின் எப்பக்கமும் எல்லா சூழ்நிலையிலும் நீங்கள் சமாதானமாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். வேதம், "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" (ஏசாயா 26:3) என்று கூறுகிறது. இன்னொரு மொழிபெயர்ப்பில், நாம் கர்த்தரை முற்றிலும் நம்பும்போது, அவர் நமக்கு பூரண சமாதானத்தை அருளுகிறார் என்று எழுதப்பட்டுள்ளது. பலவேளைகளில் நம் பாரங்களை தனியே சுமக்க முயன்று தடுமாறுகிறோம். ஆனால், தேவன் முன்பு வந்து, "ஆண்டவரே, என்னால் எதையும் செய்ய முடியாது. நீரே எனக்காக யாவற்றையும் செய்தருளும்," என்று கூறினால், அவரை முழுவதுமாக நம்பினால், அவரது சமாதானம் நம் இருதயங்களை நிரப்பும்.

தேவன் செயல்படுவதை நாம் பார்க்க முடியாவிட்டாலும், அவர் பின்னணியில் கிரியை செய்கிறார் என்று நம்ப முடியும். தேவன் பெரும்பாலும் நாம் புரிந்துகொள்ளக்கூடாத வழிகளில் கிரியை செய்கிறார். நீங்கள் உடனடி பதில்களை பார்க்க முடியாமல் இருக்கலாம்; நடைமுறையை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனாலும், தேவன் உங்களுக்காக கிரியை செய்வார் என்று நம்பலாம். தமது வேளையில் அவர் எல்லாவற்றையும் செய்துமுடிப்பார்; தமது சித்தத்தின்படியே யாவும் சமாதானமாக நடந்தேறப் பண்ணுவார்.

முதலாவது, தேவன் தம் பரலோக சமாதானத்தை நமக்குத் தருகிறார். தேவன் உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டுபண்ணுகிறார் என்று வேதம் கூறுகிறது (யோபு 25:2). அவர் உன்னதத்தில் அமர்ந்து தம் பிள்ளைகளுக்காக சமாதானத்தை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார். அந்த தெய்வீக சமாதானத்தை உலகிற்கு சமாதானப் பிரபுவாக இயேசு கொண்டு வந்தார். இயேசு, "என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்," என்று கூறினார் (யோவான் 14:27). அவர் அன்புடன், "என் பிள்ளையே, என் சமாதானத்தையே உனக்குத் தருகிறேன்," என்று கூறுகிறார். இந்தச் சமாதானம், பயத்தை, துக்கத்தை, கலக்கத்தை, வேதனையை அழித்துப்போடும். உலகம், பயத்தையும் நிச்சயமின்மையையும் கொண்டு வரலாம்; ஆனால், இயேசு பரலோகத்திலிருந்து நேரடியாக சமாதானத்தை தருகிறார். இயேசு சிலுவையில் செய்த தியாகத்தினால் இந்த சமாதானம் நமக்குக் கிடைக்கிறது. இயேசு, சிலுவையில் சிந்திய இரத்தத்தின் வாயிலாக, தேவனோடு நம்மை ஒப்புரவாக்கிய சமாதானத்தை உண்டாக்கினார் (கொலோசெயர் 1:20). அவரது தியாகம், நம் வாழ்வில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கான கிரயமாகியது. நாம் இயேசுவை நம்பும்போது, நம் வாழ்வை அவருக்கு அர்ப்பணிக்கும்போது, அவரது பிள்ளைகளாக வாழும்போது, அவரது விலையேறப்பெற்ற இரத்தம், பாவம் நீங்கும்படி நம்மை சுத்திகரித்து, தேவனுடன் அன்பான ஐக்கியத்திற்குள் நம்மை நடத்துகிறது. அப்போது நாம், தேவனே நம்மை பொறுப்பெடுத்துக்கொள்வார் என்பதை அறிந்து, அவரது சமாதானத்தை பூரணமாக அனுபவிக்க தொடங்குவோம்.

இரண்டாவதாக, தேவன் அருளும் சமாதானம் மனுஷரின் புத்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தைக் குறித்து வேதம் கூறுகிறது (பிலிப்பியர் 4:6,7). நாம் விவரிக்க இயலாத வழிகளில் பெரும்பாலும் தேவ ஆசீர்வாதங்கள் வரும். ஒருநாள் நீங்கள் திரும்பிப் பார்த்து, "என் வாழ்வில் இவ்வளவு அதிகமான ஆசீர்வாதங்களை தேவன் எப்படி கொண்டு வந்தார் என்றே எனக்குப் புரியவில்லை," என்பீர்கள். இதுவே தேவனின் கிரியையாயிருக்கிறது. அவரது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் உன்னதங்களில் உண்டாக்கப்படுகிறது; இயேசுவின் தியாகத்தின் வாயிலாக அந்த ஆசீர்வாதம் நம் வாழ்வில் பெருகுகிறது.

இந்தச் சமாதானம் உபத்திரவங்களின் நடுவிலும் நிலைத்திருக்கிறது. உபத்திரவங்கள் வரலாம். கடினமான சூழ்நிலைகள் எழும்பலாம். பொல்லாத மக்கள் உங்களுக்கு விரோதமாக அநியாயமாக செயல்படலாம். ஆனாலும் இயேசு, "என் சமாதானத்தை உனக்குத் தருகிறேன்," என்று கூறுகிறார். அவரது சமாதானம் எல்லா சோதனைகளையும், கடினமான தருணங்களையும் மேற்கொள்ளும்படி உங்களைப் பெலப்படுத்தும். பயப்படுவதற்குப் பதிலாக, தேவன் உங்களோடிருப்பதை அறிந்து, திடநம்பிக்கையோடு நடப்பீர்கள். அவரது சமாதானம் உங்கள் இருதயத்தை, சிந்தையை காத்துக்கொண்டு, அவரது சமுகமும் ஆசீர்வாதமும் நிறைந்த வாழ்க்கைக்குள் நடத்தும். ஆகவே, அன்பானவர்களே, இயேசுவை முற்றிலும் நம்புங்கள். உங்கள் சிந்தையை அவர்மேல் வைத்திருங்கள். எல்லா பாரத்தையும் அவர் கரங்களில் அர்ப்பணித்துவிடுங்கள். சமாதானப் பிரபு உங்கள் உள்ளத்தை இன்று தம் நித்திய சமாதானத்தினால், இந்த உலகம் கொடுக்கவும் எடுக்கவும் கூடாத சமாதானத்தினால் நிரப்புவதற்கு விரும்புகிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் சமாதானப் பிரபுவாக, நித்திய பிதாவாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லாப் புத்திக்கும் மேலான உம் பூரண சமாதானத்தினால் என் உள்ளத்தை நிரப்பிடும். நீர் செயல்படுவதை காண முடியாவிட்டாலும் உம்மை முழுவதுமாக நம்புவதற்கு எனக்கு உதவும். எல்லா பயம், கலக்கம், துக்கம், குழப்பம், பாரத்தை என் வாழ்விலிருந்து அகற்றும். உம் பரலோக சமாதானம் எந்நாறும் என் இருதயத்தையும் சிந்தையையும் காத்துக்கொள்ளட்டும். இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் என் பாவங்கள் எல்லாவற்றையும் சுத்திகரித்து, என்னை உம்மிடம் கிட்டிச்சேர்த்தருளும். உம் வாக்குத்தத்தங்களை நம்பி, எல்லா பாடுகளையும் உபத்திரவங்களையும் மேற்கொள்வதற்கு என்னை பெலப்படுத்தும். உம் சமாதானம் என் குடும்பத்தை, வேலையை, எதிர்காலத்தை ஆளுகை செய்யட்டும். உம் ஆசீர்வாதங்களை நான் அனுபவித்து, எப்போதும் உம் சமுகத்தில் நடக்கக் கிருபை செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.