அன்பானவர்களே, ஆண்டவருடைய ஆசீர்வாதத்தை இன்று பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி. "தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்" (பிரசங்கி 2:26) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது. இந்த விலையேறப்பெற்ற ஈவுகள் அனைத்தும் ஆண்டவருக்குப் பிரியமாக வாழ்வதால் கிடைக்கின்றன. நாம் தேவனை பிரியப்படுத்தும்போது, அவர் சரியான முடிவுகளை எடுக்கும்படி நம்மை தம் ஞானத்தினால் நிரப்புகிறார்; அவருடைய சித்தத்தின்படி பெரிய காரியங்களைச் செய்து முடிப்பதற்கு அவரது அறிவைத் தருகிறார்.  இவற்றுடன் அவர் நம் உள்ளங்களில் மிகுந்த சந்தோஷத்தையும் உலகம் தரக்கூடாத நித்திய மகிழ்ச்சியையும் ஊற்றுகிறார். தேவனை கனப்படுத்தும்வண்ணம் வாழ்கிறவர்களுக்கு இந்த ஆசீர்வாதம் வைக்கப்பட்டுள்ளது.

நாம் எப்படி தேவனைப் பிரியப்படுத்த முடியும்? வேதாகமம் மூன்று முக்கியமான வழிகளைப் போதிக்கிறது. முதலாவது, நாம் விசுவாசத்தினால் அவரைப் பிரியப்படுத்தலாம். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருக்க முடியாது (எபிரெயர் 11:6). தேவன் இருக்கிறார் என்று விசுவாசிக்கவேண்டும்; அவரண்டை கிட்டிச்சேரவேண்டும்; உண்மையாய் அவரைத் தேடுகிறவர்களுக்கு அவர் பலன் அளிக்கிறார் என்று நம்பவேண்டும். நம் முழு திடநம்பிக்கையை அவர்மேல் வைத்து, அவர் நம் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார் என்று நம்பும்போது, நம் விசுவாசம் அவரது இருதயத்திற்குப் பிரியமாயிருக்கிறது.

இரண்டாவதாக, தேவன் நமக்குக் கொடுத்திருப்பவற்றையும், அன்பையும் பகிர்வதன் வாயிலாக அவரைப் பிரியப்படுத்தலாம். நன்மை செய்யவும் தானதர்மம் பண்ணவும் மறக்கக்கூடாது. அவற்றின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார் என்று வேதம் நமக்கு நினைவுறுத்துகிறது (எபிரெயர் 13:16). நம்மிடமிருப்பவற்றின் வாயிலாக மக்களுக்கு உதவுவதற்காக மாத்திரம் நாம் அழைக்கப்படுவதில்லை; மாறாக, ஆவிக்குரிய வரங்கள், தாலந்துகள், தகுதிகள், ஆண்டவர் நமக்கு அளித்திருக்கும் ஆசீர்வாதங்கள் இவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டும். தியாகமாய் சேவை செய்யும் வாழ்க்கை கர்த்தரின் சந்தோஷத்தை அளித்திடும்.

நிறைவாக, தேவன், "பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது," (கொலோசெயர் 3:20) என்ற வசனம் வாயிலாக தம் பிள்ளைகளிடம் பேசுகிறார். கீழ்ப்படிவது எப்போதும் எளிதானதல்ல. நம் சொந்த விருப்பங்களின்படி நடக்க விரும்பும் தருணங்கள் இருக்கும். ஆனாலும், தேவன் நம்மேல் வைத்திருக்கும் அதிகாரத்துக்கு ஒப்புக்கொடுக்கும் பெலனை பரிசுத்த ஆவியானவர் அளிப்பார். சிரமமான தருணங்களிலும் கீழ்ப்படிவதற்கு பரிசுத்த ஆவியானவர் உதவுவார். அந்தக் கீழ்ப்படிதலை தேவன் கனப்படுத்துவார். அதே பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு பிள்ளைக்கும் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியவேண்டும் என்ற விருப்பத்தை அளித்து ஆண்டவரைப் பிரியப்படுத்த உதவி செய்வார்.

இன்று விசுவாசம், அன்பு, உதாரத்துவம் மற்றும் கீழ்ப்படிதலினால் தேவனுக்குப் பிரியமாக வாழ நம்மை அர்ப்பணிப்போம். அப்படிச் செய்யும்போது தேவன் நமக்கு ஞானம், அறிவு, நித்திய மகிழ்ச்சியை தந்து ஆசீர்வதிப்பதோடு, நம் வாழ்வை தம் மகிமைக்கென்று கனி கொடுப்பதாக மாற்றுவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்குப் பிரியமானவர்களுக்கு ஞானம், அறிவு, மகிழ்ச்சி ஆகியவற்றை தருவதாக வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மை முழுவதுமாய் நம்பவும், ஒருபோதும் உம் வழிகளை விட்டு விலகாமலும் இருக்கும்படி அசையாத விசுவாசத்தினால் என் உள்ளத்தை நிரப்புவீராக. நன்மை செய்யவும், நீர் எனக்குக் கொடுத்துள்ள வரங்களை, தாலந்துகளை, ஆசீர்வாதங்களை உதாரத்துவமாய் பகிர்ந்துகொண்டு, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் விளங்கவும் எனக்கு உதவி செய்திடும். சந்தோஷத்துடன் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, எல்லாவிதத்திலும் உம்மை கனப்படுத்த ஒவ்வொரு பிள்ளையையும் பெலப்படுத்தும். என் வழியில் காணப்படும் எல்லா தடைகளையும் அகற்றி, உம்மிடம் அர்ப்பணிப்புடன் இருப்பதற்கான பலனை அருளிச்செய்யும்; உம் மகிமைக்கென்று என் வாழ்க்கை கனிகொடுப்பதாக விளங்கப்பண்ணும். உம் பூரண ஆசீர்வாதங்கள் என்மேல் அமரவும், எல்லா நற்கிரியைகளிலும் என்னை பெருகவும் வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.